Tuesday Dec 24, 2024

திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி – 609 405,திருவாரூர் மாவட்டம். போன்: +91-94439 21146

இறைவன்

இறைவன்: வீரட்டானேஸ்வரர், இறைவி: ஏலவார் குழலம்மை.

அறிமுகம்

திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 74ஆவது சிவத்தலமாகும். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் சலந்தரன் சங்கரிக்கப்பட்டான் என்பதும் அவன் மனைவி பிருந்தையைத் திருமால் துளசியாக ஏற்றார் என்பதும் தொன்நம்பிக்கை. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் வீரட்டானேஸ்வரர், இறைவி ஏலவார் குழலம்மை.

புராண முக்கியத்துவம்

ஒரு முறை இந்திரன், தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று, உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தார். கோபமடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர், சிவன் என்பதை அறிந்த இந்திரன், ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான். கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளியை பாற்கடலில் தெளித்தார் சிவன். அதில் ஒரு அசுர குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரனாதலால் குழந்தைக்கு “ஜலந்தராசூரன்’ என பெயர் வைக்கப்பட்டது. அவன் பெரியவனானதும், மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும், சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசூரன், “”தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்,” என வரம் வாங்கி விட்டான். இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான். சிவன் அந்தணர் வேடமிட்டு, அசுரன் முன் வந்து நின்று, தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார். “”இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும்,” என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன், “”என் மனைவியின் கற்பின் திறனால், எனக்கு அழிவு வராது,” என சவால் விட்டான். இந்த நேரத்தில், திருமாலை அழைத்த சிவன், “” நீர் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து, அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இந்நேரத்தில், சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது. இதை அறிந்த பிருந்தை, தன் கணவன் அழிய காரணமாக இருந்த விஷ்ணுவிடம், “”நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீயும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்,” என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்தது. பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீகுளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது. இந்த துளசியால் மாலைதொடுத்து திருமாலுக்கு சாற்ற பித்து விலகுகிறது. அசுரனை அழிக்க காரணமாக இருந்த சக்கரத்தை சிவனிடம் திருமால் கேட்டார். அதைப் பெறுவதற்காக ஆயிரம் தாமரைகளால், சிவனை பூஜித்தார். சிவனின் திருவிளையாடலால் இரண்டு பூ குறைந்தது. திருமால் தன் இருகண்களையும் எடுத்து, சிவனை பூஜிக்க மகிழ்ந்த சிவன் சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தார்.

நம்பிக்கைகள்

வீடு கட்டும் முன் ஏதும் பிரச்னை என்றால், இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 137 வது தேவாரத்தலம் ஆகும். இங்கு மூலவர் வீரட்டானேஸ்வரர். அம்மன் பரிமளநாயகி. பிருந்தை என்னும் சொல்லுக்கு “துளசி’ என்பது பொருள். கற்பிற்சிறந்த அப்பெண்மணியின் நினைவாக, துளசி தான் இங்கு தல விருட்சம்.இது ஒரு வாஸ்து தோஷ நிவர்த்தி தலம். ஆஞ்சநேயர் வழிபாடு இங்கு சிறப்பு. ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது, எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. நல்லபடித்துறைகளும் சுற்றுச்சுவரும் கொண்ட பெரிய குளம், தீர்த்தக்கரையில் விநாயகர் கோயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில் வலப்புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச்சிற்பம் அழகாகவுள்ளது. வெளிப்பிராகாரத்தில், பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள்பிராகாரத்தில் வலமாக வரும் போது மகாலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பள்ளியறை, பைரவர், சனிகவான், தனிக்கோயில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், ஞானதீர்த்தம்மென்னும் கிணறு, பிடாரி முதலிய சன்னதிகள் உள்ளன.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, சித்திரை திருவிழா

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவிற்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top