திருவிடைமருதூர் ஆத்மநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
திருவிடைமருதூர் ஆத்மநாதர் கோயில், திருவிடைமருதூர், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612104.
இறைவன்
இறைவன்: ஆத்மநாதர் இறைவி: யோகாம்பாள்
அறிமுகம்
காசிக்கு இணையாக கருதப்படுகின்ற தலங்களில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். இந்தத் திருவிடைமருதூர் தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மகாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது.இப்போது நாம் இந்த பஞ்ச லிங்கங்களில் தென்வீதியில் உள்ள ஆத்மநாதரை காண்போம். பெரிய கோயிலின் தெற்கு வீதியில் உள்ளது இந்த ஆத்மநாதர் கோயில். இக்கோயில் இருப்பது பல உள்ளூர் வாசிகளுக்கே தெரியாது என்பது ஓர் வருத்தத்துக்குரிய விஷயம். தென் வீதியில் Lord Krishna Nursary schhool உள்ளது அதன் நேர் எதிரில் இரும்பு கம்பி கதவிட்ட ஒரு காலி மனைக்கட்டு ஒன்றுள்ளது அதில் சென்றால் சிதைவடைந்த இக்கோயில் தென்படும். இக்கோயில் ஒரு தனி சமூகத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. ஆவுடையார் கோயில் போன்றே இங்கு இறைவன் ஆத்மநாதர் எனவும் இறைவி யோகாம்பாள் எனவும் அழைக்கப்படுகின்றனர். நிவேதனங்கள், பூசைகள் யாவும் திருப்பெருந்துறை கோயில் போன்றே செய்யப்படுகிறது. இக்கோயில் மாணிக்கவாசகர் வருகையின் பின்னர் எழுப்பப்பட்டது என்பதால் இக்கோயில் சுமார் ஆயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த கோயிலாகும். இறைவன் -ஆத்மநாதர் இறைவி-யோகாம்பாள். கோயில் கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் இருக்கின்றனர். இறைவியின் எதிரில் ஓர்சிறிய சன்னதியில் மாணிக்கவாசகர் கற்சிலை ஒன்றிருந்தது – ஆம் இருந்தது. சில காலம் முன்னர் களவாடப்பட்டுவிட்டது.
புராண முக்கியத்துவம்
இவ்வூர் பெருமான் மாணிக்கவாசகராலும் பாடப்பெற்றவர், இவர்தன் அடியார் கூட்டத்துடன் தென் தமிழகத்தில் இருந்து வந்த போது இவ்விடத்தில் தங்கி குடிலமைத்து இத்தல இறைவனை வழிபட்டு வந்திருக்கிறார். பின்னர் பல தலங்கள் செல்ல கிளம்பியபோது இத்தல இறைவனை பிரிய விரும்பாத ஓர் அடியார் கூட்டம் இங்கேயே தங்கியது. அவர்கள் அஞ்சு கொத்து பரம்பரை என வழங்கப்பட்டனர். இந்த ஐந்து கிளை உறவினர் அனைவரும் சேர்ந்து தன் குருநாதர் வடிவமைத்த ஆத்மநாதர் கோயில் போன்றே தம் சமூகத்தினர் வழிபட ஓர் கோயிலை எழுப்பியுள்ளனர். இங்கு இறைவனும் இறைவியும் அருவுருவமாக இருக்கின்றனர். சிவன் இங்கு ஆவுடையாராக மட்டும் உள்ளவராக கருவறையில் இருக்கின்றார். இந்த பீடத்தில் அறிவொளி வடிவாக நமது ஆத்மநாதனை தியானித்து வழிபடவேண்டும். ஆரம்ப கால கட்டத்தில் இம்மக்கள் ஓதுவார் திருக்கூட்டமாக இருந்துள்ளனர் பின்னர் காலப்போக்கில் பிற தொழில் சார்ந்து இயங்க ஆரம்பித்துள்ளனர். அதனால் வெளியூர் சென்று விட, இங்கு கோயில் பழுதடைந்து நிற்கிறது. தென்புறம் வழி உள்ளே செல்லும்போது முகப்பில் ஒரு சிறிய கோபுரம் இருந்துள்ளது. காலப்போக்கில் சிதைந்து வாயில் முகப்பு மட்டும் எஞ்சியுள்ளது. கோயில் கருவறை முகப்பில் நந்தி ஒன்று அழகாக காட்சியளிக்கிறது. அதனருகில் கிழக்கு நோக்கிய ஒரு பெரிய விநாயகர் சிலை உள்ளது. பிரகாரத்தில் இருந்த சிலையாம் இது. காலை மாலை விளகேற்றுதல் எளிமையான பூசைகள் என காலம் நகர்கிறது. தற்போது அஞ்சு கொத்து சமூகத்தினை சார்ந்த திரு. ரமேஷ்(மடத்து பள்ளி ஆசிரியர்) இக்கோயிலை பார்த்துக்கொள்கிறார். அவரது வீடு இந்த கோயில் அருகில் இரண்டு வீடுகள் தள்ளி உள்ளது. சென்று அழைத்தால் உங்களுக்கு தரிசனம் செய்ய உதவுவார். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவிடைமருதூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி