திருவாரூர் நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
முகவரி
அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், சன்னதி தெரு, திருவாரூர் மாவட்டம் – 610 001 போன்: +91 99425 20479
இறைவன்
இறைவன்: நீலகண்டேஸ்வரர் இறைவி: மங்களாம்பிகை
அறிமுகம்
நீலகண்டேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் நகரத்தில் உள்ள திருவாரூர் தியாகராஜர் கோயிலின் கிழக்கு கோபுரத்திற்குச் செல்லும் சந்நிதி தெருவில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். தெற்கே 3 அடுக்கு நுழைவு கோபுரத்துடன் மேற்கு நோக்கிய சிறிய கோவிலாகும். மூலவர் நீலகண்டேஸ்வரர் என்றும், மேற்கு நோக்கியதாகவும், அன்னை மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்.
புராண முக்கியத்துவம்
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான திருநீலகண்டநாயனார் ஒருசமயம் திருவாரூரில் கோயில் கொண்டுள்ள ஈசன் தியாகராஜரை தரிசனம் செய்ய வந்தார். பங்குனி உத்திர நாளில் பிரானின் அருள் தரிசனம் பெற்ற பின்னர், தங்கள் அருள்காட்சி பெற்றதற்கு அடையாளமாக தங்களுக்கு இத்தலத்திலேயே நான் ஒரு கோயில் எடுப்பிக்க அருள வேண்டும் என்று தனது உள்ளக்கிடக்கையைக் கூறுகிறார். உன் பொருட்டு நான் இவ்விடத்தில் மேற்கு திசை நோக்கி அருள்கிறேன். அவ்வாறே எனக்கு கோயில் அமை என்று ஆசியளித்தார் ஈசன். அவ்வாறு நீலகண்ட நாயனார், சிவலிங்கத்தை மேற்கு முகமாக அமைத்து வழிபட்ட கோயிலே திருவாரூர் நீலகண்டேஸ்வரர் கோயில். நாயனார் பெயரிலேயே ஈசனுக்கும் பெயர் அமைந்தது.
நம்பிக்கைகள்
பக்தர்கள் தங்களுக்கு கேட்டதை கேட்டபடி அருளுவதால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
பொது பக்தர்கள் அல்லாமல் சந்நியாசம் ஏற்றோரும், சிவத்தொண்டு புரிவதையே கடமையாக ஏற்றவிட்ட சிவனடியார்களும், இந்தக் கோயிலுக்கு எப்போதும் வந்த வண்ணம் உள்ளனர். திருநீலகண்டரே தங்களது ஞான குரு என்கின்றனர் அவர்கள். அந்த நாயன்மாரின் அருள்திறம் இந்த கோயில் முழுவதும் நிறைந்திருப்பதால், தங்கள் மனதில் ஞான ஒளி காட்டி, சிவத்தொண்டில் சிறக்கச் செய்வார் என்பது அவர்களது நம்பிக்கை ஆரூர் தியாகேசரின் திருக்கோயிலின் கிழக்கு வாசல் ஓரமாகவே உள்ளது, இந்தப் பெரிய கோயில். தியாகேசரின் பார்வைபடும் விதமாகவே திருநீலகண்டர் இவ்விடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். ஒவ்வோர் ஆண்டு குருபூஜை அன்றும் திருநீலகண்டர் இக்கோயிலுக்கு அரூப நிலையில் வந்து, சிவனடியார்களுக்கு அருளாசி அளிப்பதாக ஐதிகம்.
திருவிழாக்கள்
தைமாதம், விசாக நட்சத்திரம் திருநீலகண்டரின் குருபூஜை தினம். நாடெங்குமிருந்து ஏராளமான மக்களும், இவரைக் குலதெய்வமாகக் கொண்டவர்களும், உள்ளூர் சிவபக்தர்களும் ஏராளமாக கூடிவிடுவர். அன்று நாயனாருக்கு 21 திருவோடு வைத்து, குரு பூஜை செய்யப்பட்டு, சிவனடியார்க்கு திருவோடுகள் வழங்கப்படுகின்றன. பின்னர் அன்னதானம் விமர்சையாக நடைபெறும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி