Thursday Jul 04, 2024

திருவானைக்கோயில் திருவாலீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

திருவானைக்கோயில் திருவாலீஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கோயில், உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 106.

இறைவன்

இறைவன்: திருவாலீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி

அறிமுகம்

திருவானைக்கோயில் எங்கே உள்ளது எனக்கேட்டால் எல்லோரும் திருச்சிக்கு அருகில் உள்ள கோயில் என்று கூறுவார்கள். திருச்சிக்கு அருகே உள்ளது #திருவானைக்காவல்.. ஆனால் இது திருவானைக்கோயில். திருக்கழுக்குன்றதிலிருந்து பொன்விளைந்த களத்தூர் சென்று அங்கிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரம் சென்றதும் சிறிது தூரத்தில் வலதுபுறம் உள்ள மலைகளுக்கு நடுவில் சென்றால் இருளர் காலணிக்கு அடுத்து அமைந்துள்ளது. திருக்கழுக்குன்றதிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் பில்லேரிமேடுவில் பிரியும் சாலையில் சென்றால் சேகண்டி கிராமம் தாண்டியதும் இந்த ஊர் வருகின்றது. திருவானைக்கோயில் புராதனமான ஊராகும்.இங்கு திருவாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. புராதன கதையில் வாலி இறைவனை வணங்கியதால் இங்குள்ள இறைவன் திருவாலீஸ்வரர் என அழைக்கப்படுகின்றார். 1000 ஆண்டுகள் பழமையான இந்தக்கோயில் தற்போது சிதிலமடைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோயில் என்பது கோயினை பார்க்கும் சமயம் நமக்கு தெரியவருகின்றது. ஆலயத்திற்கு வெளியே விநாயகர் சிலையும் ஷேஷ்டா தேவி சிலையும் அமைந்துள்ளது. இறைவன் பெயர் #திருவாலீஸ்வரர். இறைவி பெயர் #திரிபுரசுந்தரி..இறைவன் கிழக்கு பார்த்து உள்ளார். இறைவி தெற்கு பக்கம் பார்த்து உள்ளார். கிழக்கு பக்க வாசல் கருங்கல் ஜன்னலால் அமைக்கப்பட்டுள்ளது. ஜன்னலுக்கு வெளியே நந்தி உள்ளது ராஜநந்தி என அதனை அழைக்கின்றனர். இங்கு விநாயகர் வித்தியாசமான தோற்றத்தில் அமைந்துள்ளார். இறைவன் சுயம்பு லிங்கம். லிங்கம் எதிரே சிறிய நந்தி –பலிபீடம் அமைந்துள்ளது. திரிபுரசுந்தரி அம்மன் 4 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் நமக்கு அருள்பாலிக்கின்றார். கருவரையை சுற்றி வருகையில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, தூர்கை சிலைகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு சிலையின் கீழேயும் பக்கவாட்டிலும் அழகிய சிறிய சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறையை சுற்றி நிறைய கல்வெட்டுக்கள் உள்ளன. தமிழில் ஓரளவு புரியும் அளவில் அமைந்துள்ளது சிறப்பாகும். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

நம்பிக்கைகள்

வழக்கமாக கோயில்களில் நாம் நினைத்தது பலிக்குமா என பார்க்க குங்குமம், விபூதி பொட்டலம் மடித்து ஸ்வாமி பாதத்தில்வைத்து எடுத்து வந்து கொடுப்பார்கள். நாம் எதை நினைத்து எடுக்கின்றோமோ அது வந்தால் ஸ்வாமி நமக்கு உத்தரவு கொடுத்துவிட்டதாக நம்புவோம். சில ஆலயங்களில் பூ வைத்து பார்பார்கள். இந்த ஆலயத்தில் நாம் வேண்டுதல் சொன்னால் அர்ச்சகர் நம்மை கருவரையில்எதிரில் விட்டு விட்டு வெளியில் சென்று விடுகின்றார். நாம் இறைவனை மனமுருக வேண்டிக்கொள்ளலாம். நாம் எண்ணிய எண்ணம் பலிக்குமானால் கருவரையிலிருந்து வௌவால் பறந்து வருகின்றது. சில சமயம் பல்லி உள்ளே இருந்து ஒடிவருகின்றது. சிலருக்கு பாம்பு உருவில் இறைவன் வந்து உத்தரவு கொடுத்ததாக அர்ச்சகர் தெரிவிக்கிறார். ஜீவ ராசிகள் வருவது மூலம் இறைவன் உத்தரவு கொடுத்ததை நாம் உறுதி படுத்திக்கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்

கிழக்கு பக்கம் அமைந்துள்ள ஜன்னல் சாரளத்தின் வழியே சூரிய வெளிச்சம் லிங்கத்தின் மீது விழும் நிகழ்வு வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறுகின்றது. அதுபோல வினாயகர் மீதும். முருகப்பெருமான் மீதும் சூரிய கதிர்கள் விழுகின்றன. மாசி மாதம் வருகின்ற பௌர்ணமியில் அம்மன் மீது சூரிய கதிர்விழுகின்றது. வருடத்தின் குறிப்பிட்ட நாளில் அனைத்து சிலைகள் மீதும் சூரியஒளி பாய்கின்றது.

திருவிழாக்கள்

இங்குள்ள இறைவனுக்கு சுத்தமான பசும்பாலினால் காலை மற்றும் மாலையில் அபிஷேகம் நடைபெறுகின்றது. ஒவ்வொரு பிரதோஷ வழிபாடு,பௌர்ணமி –அமாவாசை வழிபாடு,கிருத்திகை வழிபாடு மற்றும் அனைத்து விஷேஷநாட்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் உண்டு.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவானைக்கோயில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கல்பட்டு

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top