Saturday Nov 23, 2024

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி

நிர்வாக அதிகாரி, அ/மி. ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், திருவானைக்காவல்-620005, திருச்சி மாவட்டம். போன்: 91-431- 2230 257.

இறைவன்

இறைவன்: ஜம்புகேஸ்வரர், இறைவி: அகிலாண்டேஸ்வரி

அறிமுகம்

திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனைத் திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதைப் பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60-ஆவது சிவத்தலமாகும்.

புராண முக்கியத்துவம்

சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் “நீர்’ தலமானது. பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார். சிவன் அவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார். நாவல் மரத்துக்கு “ஜம்பு’ என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால், சுவாமி “ஜம்புகேஸ்வரர்’ என பெயர் பெற்றார்.

நம்பிக்கைகள்

கணவன், மனைவியருக்குள் ஒற்றுமை அதிகரிக்க, கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைய, விவசாயம் செழிக்க, தண்ணீர் பஞ்சம் ஏற்படாதிருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

சிவன் வடிவில் அம்பாள் அம்பாள் வடிவில் சிவன்!: பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு “ஸ்திரீ தோஷம்’ உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள். சிவன் அவளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால், அம்பிகை சிவனிடம், “”நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்!” என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர். சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால், அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை. மாணவி அம்பாள்: சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் அகிலாண்டேஸ்வரி’ என்றழைக்கப்படுகிறாள். அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர். ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிவெள்ளியன்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். நவ துளை ஜன்னல்: ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது. சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியில், அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இங்கு சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே அன்னாபிஷேகம் செய்யவது சிரமம். வைகாசியில் தண்ணீர் குறைந்து, ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே அந்நேரத்தில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி பவுர்ணமியில் லிங்கத்திற்கு விபூதிக்காப்பிடப்படுகிறது. சித்தராக வந்த சிவன்!: மதுரையைப் போல, இத்தலத்திலும் சிவபெருமான், சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார். இப்பகுதியை ஆண்ட மன்னன், கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை கட்டினான். அப்போது, போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும், அவனது மனம் போர் செய்வதில் லயிக்கவில்லை. அவன் சிவனை வேண்டினான். சிவன் விபூதிச்சித்தராக வந்து, பிரகாரம் கட்டும் வேலையை முடித்தார். இதையறிந்த மன்னன் மகிழ்ந்தான். சிவன் கட்டிய மதில் “திருநீற்றான் திருமதில்’ என்றும், பிரகாரம் “விபூதி பிரகாரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது. அன்னையை சாந்தப்படுத்தும் பிள்ளைகள்: ஆரம்பத்தில் இங்கு அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீசக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். ஆனால், இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்குப் பதிலாக, இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். உக்கிரமான அம்மாவை பிள்ளைகளான விநாயகர், முருகன் இருவரும் சாந்தப்படுத்தும் வகையில், அம்பாளுக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார். கோச்செங்கட்சோழன் சிறப்பு: கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி, ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். இதிலும் இவர்களிருவருக்கும் போட்டி உண்டானது. இதில் சிலந்தி, யானையில் தும்பிக்கைக்குள் புகுந்தது. இதில் சிவன், யானைக்கு மட்டும் முக்தி கொடுத்தார். சிலந்தி, யானையைக் கொல்ல முயன்றதற்காக மீண்டும் பிறக்கும்படி செய்தார். சிலந்தி, சோழ மன்னர் சுபவேதர், கமலாவதியின் மகனாகப் பிறந்தது. இவரே, கோச்செங்கட்சோழ மன்னர் ஆவார். இம்மன்னரே தனது முற்பிறவிப் பயனால், யானைகள் புக முடியாதபடி சிவனுக்கு மாடக்கோயில்கள் கட்டினார். இக்கோயிலையும் யானை புகாதபடி திருப்பணி செய்தார். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது. திருக்கல்யாணம் இங்கில்லை!: இக்கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்தபோது, அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால், பள்ளியறை இருக்கிறது. இந்த பள்ளியறைக்கு இங்கு அருள்பாலிக்கும் சொக்கநாதர், மீனாட்சியே செல்கின்றனர். சிவன், அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி தரும் அம்பிகை: வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லமை பெற, அகிலாண்டேஸ்வரியை வேண்டினார். அவருக்கு அருள அம்பாள், வெற்றிலை (தாம்பூலம்) போட்டபடியே சென்றாள். வேதியரிடம், “”நான் வெற்றிலை போட்டுள்ளேன். கோயிலுக்குள் உமிழ்வது தவறு. எனவே, உம் வாயைத் திறக்கிறீரா? உமிழ்ந்து கொள்கிறேன்,” என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டிவிட்டார். அதே நாளில் கோயிலுக்கு வரதர் என்ற பக்தர் வந்திருந்தார். அவர் கோயில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர். “”கோயில் பாழ்படாமல் இருக்க, எந்த தியாகத்தையும் செய்வேன், பெண்ணே! தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள்,” என்றார். அம்பாளும் அப்படியே செய்ய, அவர் பிரபலமான கவியானார். அவரே காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில், சிறந்த கல்வியறிவு, கலைஞானம் பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர். முருகன் பாதத்தில் அசுரன்: முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில், ஜம்பு தீர்த்தக்கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக்கொண்டார். முருகனும், காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில், ஒரு அசுரனாக்கி, காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். இங்குள்ள சனிபகவான் குதிரை முகத்துடன் தனது தாயுடன் குழந்தை வடிவில் அமர்ந்துள்ளார். எனவே இவர் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். மேலும் சனியின் மனைவிகளான ஜேஷ்டாதேவி, நீலாதேவியும் குழந்தை வடிவில் அருள்பாலிக்கின்றனர்.

திருவிழாக்கள்

பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், ஆடிவெள்ளி.

காலம்

2500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவானைக்காவல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top