Saturday Jan 18, 2025

திருவாதவூர் திருமறைநாதர் திருக்கோயில், மதுரை

முகவரி

அருள்மிகு திருமறைநாதர் திருக்கோயில், திருவாதவூர், மதுரை மாவட்டம் – 625122. போன்: +91452 – 234 4360, 6382680960

இறைவன்

இறைவன்: திருமறைநாதர் / வேதநாதர் / வேதபுரீஸ்வரர் இறைவி: ஆரணவல்லியம்மை / வேத நாயகி

அறிமுகம்

திருமறைநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே திருவாதவூரில் அமைந்துள்ள இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மூலவர் திருமறைநாதர் / வேதநாதர் / வேதபுரீஸ்வரர் என்றும், தாயார் ஆரணவல்லியம்மை / வேத நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. சைவக் கவிஞரான மாணிக்கவாசகர் பிறந்த இடமாகவும் இந்த இடம் கருதப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

ஒரு காலத்தில் இக்கோயில் உள்ள இடம் ஏரியாக இருந்துள்ளது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை நடைபெற்ற போது தேவர்களுக்கு திருமால் அடைக்கலம் அளித்ததை அசுரர்கள் அறிந்தனர். அதனால் பிருகு முனிவரும் அவரது மனைவியும் அசுரர்களுக்கு அடைக்கலம் அளித்தனர். அசுரர்களை அழிப்பதற்காக தன்னிடம் அவர்களை தரவேண்டும் என்று திருமால் பிருகு முனிவரிடம் கேட்கிறார். ஆனால் அவரோ தன்னை நாடி வந்து அடைக்கலம் கேட்டவர்களை சரணடைய வைக்க இயலாது என்று கூறிவிட, அசுரர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக பிருகு முனிவரின் மனைவியின் தலையை தனது சக்கராயுதத்தால் கொய்தார். மனைவியை இழந்த பிருகுமுனிவர் நீயும் இப்பூலகில் பல பிறவிகள் எடுத்து உன் மனைவியை இழந்து வாடுவாய் என சாபமிட்டார். இந்த சாபத்தை போக்கும் பொருட்டு மதுரையம்பதி வந்து ஆலவாய் அழகனை தரிசித்துவிட்டு மலர்கள் பூத்துக் குலுங்கிய தடாகத்திற்கு வந்தார். பூஜைக்கு சிவலிங்கம் தேடினார். கிடைக்கவில்லை. அப்போது ஒரு பசு வந்து தடாகத்தின் மத்தியில் இருந்து தாமரைப்பூவின் மீது பாலைச் சுரந்தது. திருமாலும் அருகே சென்று பார்க்க அங்கு சுயம்பு மேனியாய் லிங்கம் இருக்க அதை எடுத்து பூஜை செய்து வணங்கினான். ஈசன் எழுந்தருளி திருமாலுக்கு சாபம் விமோசனம் கொடுத்தார். பின்னாளில் இது பலரால் பூஜிக்கப்பெற்று ஆலயம் எழுப்பப்பட்டது.

நம்பிக்கைகள்

வாத நோய் குணமாவதற்கு இத்தலம் இந்திய அளவில் மிகவும் பிரசி்த்தி பெற்றது என்பதால் கை கால் முடம், பக்கவாதம் மற்றும் பிற வாத நோய்கள் உள்ளவர்கள் இத்தலத்தில் வந்து பிரார்த்தனை செய்து பலனடைகின்றனர். பிணி, பீடை, ஆகியன நீங்குவதற்காகவும் பெருமளவில் இத்தலத்தில் வழிபடுகிறார்கள். குழந்தை பாக்கியம், திருமண வரம் ஆகியன இத்தலத்தின் சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை என்பதால் பக்தர்கள் இங்கு வழிபட்டு தங்கள் வேண்டுதலை சுவாமியிடம் வைக்கின்றனர். தொழில் விருத்தி பெருக, கடன் தொல்லை நீங்க இத்தலத்தில் வழிபாடு செய்யப்படுகிறது. கரி, இரும்பு சம்பந்தமான தொழில்கள் விருத்தியடைய ஏற்ற தலம் என்று பக்தர்கள் நம்புகின்றனர். உத்யோகத்தில் தீராத பிரச்னைகள் உள்ளவர்கள் இங்குள்ள சனீஸ்வரனை வழிபட்டு பலனடைகின்றனர். இங்குள்ள பைரவரை வணங்கினால் பில்லி சூன்யம் ஆகியன விலகும்.

சிறப்பு அம்சங்கள்

மருத்துவ குணம் கொண்ட கோயில் : வாத நோய் குணமடைவதற்கு பிரசித்தி பெற்ற தலம். இது சனீஸ்வர பகவானுக்கே வாத நோயை சுவாமி நீக்கிய தலம் என்பதால் வாத நோய் உள்ளவர்கள் வழிபட இத்தலம் மிகவும் விசேசமானது. வாத நோய் உள்ளவர்கள் நல்லெண்ணெய் கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். அந்த அபிஷேக எண்ணையை வாங்கிக் கொண்டு போய் அதை காலில் தேய்த்து வந்தால் கூடிய விரைவில் வாத நோய் குணமடைகிறது. மூன்றாவதாக இத்தலத்துக்கு வந்து வழிபடும்போது முற்றிலுமாக குணமடைந்து விடும் அதிசயம் நடக்கிறது. குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய வெளிமாநிலங்களிலிருந்து பெருமளவிலான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். மாணிக்கவாசகர் : திருவாசகத்து உருகாதவர் ஒருவாசகத்துக்கும் உருகார் என்ற சிறப்பு வாய்ந்த பழமொழியே திருவாசகத்தின் சிறப்புக்குப் போதிய சான்று. இத்தகைய ஒப்பற்றதோர் அருள்நூலை உலகினுக்கு ஈந்த மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்தது இவ்வூரில்தான். நாயன்மார்களில் முக்கியமானவரும் நால்வருள் ஒருவருமான மாணிக்கவாசகர் அவதரித்த இடம் கோயிலாக்கப்பட்டு இன்றும் உள்ளது. வாதவூரார் என்று அழைக்கப்பட்ட இவர் பாண்டிய மன்னன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். பின்பு சிவபெருமானே குருவாக வந்து அவரிடம் உபதேசம் கேட்டு அடியார் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. சனிபகவானின் தனி சன்னதி : மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் முடமான சனிபகவான் இத்தலத்து திருமறைநாதரை வழிபட்டதன் பயனாகச் சாப நீக்கம் பெற்றார். தான் பெற்ற சாப நீக்கத்தை பக்தர்களுக்கு அருளும் முகமாக இங்கு தனிச் சன்னதி கொண்டுள்ளார். இவர் ஒருகாலை மடக்கி வாகனத்தில் அமர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமி சுயம்பு மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தலையில் பசுவின் குளம்படிகள் உள்ளது. கடையெழுவள்ளல்களில் ஒருவராகிய பாரி மன்னனின் தென்பறம்பு நாட்டு முன்னூறு ஊர்களில் ஒன்று. மதுரையில் சங்கம் அமைத்துத் தமிழாய்ந்த புலவர்களில் பொய்யடிமை இல்லாத புலவர் என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் பாராட்டப்பட்ட கபிலர் பிறந்த ஊர். பெருமான், திருமாலுக்கு வேதம் நானே என்று உபதேசித்த தலம். வாயுதேவன் சிறந்த புத்திரனான அனுமனைப் பெறுவதற்கு காரணமாக அமைந்த தலம். இதனால் இத்தலத்தில் வழிபட்டால் குழந்தைப்பேறு நிச்சயம். கபில முனிவரின் வீரகத்தி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம். பைரவமூர்த்தி ஆணவத்தால் தான் இழந்த வாகனமான சுவானத்தை (நாய்) திரும்ப பெற்ற தலம். பிருகு முனிவரின் சாபத்தால் தனது தன்மை குன்றிய அக்கினி தனது முந்தைய நிலையைத் திரும்பப் பெற்ற தலம். கௌதம முனிவர் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். பிரம்மனின் ஆரணகேத வேள்வியில் தோன்றிய அம்பாள் இங்கு இருக்கிறாள். வாகனம் இல்லாத பைரவர்: சிவனின் அம்சமான பைரவர், வேதத்தின் வடிவமான நாயுடன் தான் காட்சி தருவார். ஆனால், இங்குள்ள பைரவருடன் நாய் இல்லை. கையில் சூலமும் கிடையாது. இத்தலத்தில் சிவன், வேதத்தின் வடிவில் அருளுவதால், நாய் வாகனம் இல்லை. வாகனங்களை தொலைத்தவர்கள் அது மீண்டும் கிடைப்பதற்காக, பைரவர் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வேண்டுகிறார்கள். இங்குள்ள விநாயகர், யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். சப்த தீர்த்த தலம்: கோவிலுக்குப் பின்புறம் விஷ்ணுதீர்த்தம் இருக்கிறது. மகாவிஷ்ணு இங்கு நீர் வடிவில் இருப்பதாக ஐதீகம். தவிர கோவிலுக்குள் பிரம்ம தீர்த்தம், சிவன் தீர்த்தம், அக்னி தீர்த்தம், பைரவர் தீர்த்தம், வாயு மற்றும் கபில தீர்த்தம் ஆகியவை இருக்கின்றன. இவ்வாறு சப்த (ஏழு) தீர்த்தங்களுடன் அமைந்த தலம் என்பதால், இங்கு வேண்டிக் கொண்டால் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

வைகாசி மாதம் பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறும். எட்டாம் திருநாள் திருக்கல்யாணம். ஒன்பதாம் திருநாள் திருத்தேர் உலா. சித்திரைமாதம் காவல் தெய்வமான வரதப்பிடாரி அம்மன் கோயில் உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். ஒன்பதாம் திருநாள் சட்டத் தேர். ஆனிமாதம் – ஆனி மக உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். ஆவணி மாதம் மூலத் திருவிழா, பன்னிரண்டு நாட்கள் நடைபெறும். அருள்மிகு மாணிக்கவாசகப் பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்புபோடுதல் நடைபெறும். கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறும். முதலாம் திருநாள் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெறும். டோலோற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். ஒன்பதாம் நாள் மாணிக்கவாசகப்பெருமானுக்கு சட்டத்தேர் பத்தாம்நாள் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெறும். மாசி மாதம் – மாசி மாதம் சிவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். மாதாந்திர பிரதோச நாட்கள் மற்றும் தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவாதவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருபுவனம், மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top