திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், இராமநாதபுரம்
முகவரி
அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை-623407. இராமநாதபுரம் மாவட்டம். போன்: +91- 4561 – 254 533.
இறைவன்
இறைவன்: ஆதிரத்தினேஸ்வரர் இறைவி: சினேகவல்லி
அறிமுகம்
திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரினை திருஆடானை என்றும் அறிவர். இங்குள்ள இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் இறைவி சினேகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக சூரிய புஷ்கரிணியும் உள்ளன. இக்கோயில் ஆதியில் பாண்டியர்களால் கட்டப்பட்டுள்ளது. பின்னர் நாயக்கர்கள் கோயிலை விரிவுபடுத்தியுள்ளனர். தற்போது உள்ள கோயில் 19ஆம் நூற்றாண்டில் சேதுபதி மன்னர் தலைமையில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் கட்டப்பெற்றது.
புராண முக்கியத்துவம்
வருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது வாருணியுடன் வந்த நண்பர்கள் ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தனர். துர்வாச முனிவர் கோபத்துடன், “”வாருணி! நீ வருணனின் மகனாக இருந்தும், பொருந்தாத காரியம் செய்து விட்டாய். எனவே பொருந்தாத தோற்றமான, ஆட்டின் தலையும் யானையின் உடலுமாக மாறுவாய்,”என சாபமிட்டார். ஆடு+ஆனை என்பதால் இத்தலம் வடமொழியில் அஜகஜபுரம் ஆனது. தன் தவறை உணர்ந்தான் வாருணி. இவனது நிலை கண்ட மற்ற முனிவர்கள், சூரியனுக்கு ஒளி கொடுத்த தலம் பாண்டி நாட்டில் உள்ளது. அத்தலத்து இறைவனை வழிபாடு செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று வாருணியிடம் கூறினர். அதன்படி வாருணியும் இத்தலத்தில் தன் பெயரால் குளம் அமைத்து தினமும் ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினார். இறைவனும் இவனது சாபம் நீக்கி, என்ன வரம் வேண்டும் எனக்கேட்க, கலிகாலம் முடியும் வரை இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும் என வரம் பெறுகிறான். அத்துடன் பெரியவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கேட்கிறான். இறைவனும் அதற்கிசைந்து இத்தலத்தை “அஜகஜக்ஷத்திரம்’ ஆடு+ஆனை+புரம் என வழங்க அருள்புரிந்தார். இதுவே காலப்போக்கில் “திரு’ எனும் அடைமொழியோடு “திருவாடானை’ என ஆனது.
நம்பிக்கைகள்
சுவாமி ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினால் முன் செய்த தீவினை நீங்கும். அம்மனுக்கு விசேஷ சுக்கிர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். சுக்கிர திசை, புத்தி நடப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பானது.
சிறப்பு அம்சங்கள்
ஒவ்வொரு தலத்திலும் ஒன்று சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூன்றுமே சிறப்புடையது. மூர்த்தி சுயம்புலிங்கமாக ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் என்ற பெயர்கள் உண்டு. அம்மன் சிநேகவல்லி, அன்பாயிரவல்லி. தீர்த்தம் சூரியபுஷ்கரிணி, வருண, வாருணி, மார்க்கண்டேய, அகத்திய, காமதேனு தீர்த்தங்கள். அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றபின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், “”திருவாடனைக்கு வா சொல்லித் தருகிறேன்”என்றார். அதன்படி அர்ஜுனனும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தெரிந்து கொள்கிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இங்குள்ள சோமாஸ்கந்தரை அர்ஜுனன் ஸ்தாபித்தான் என்பது ஐதீகம். சூரியனின் கர்வம் போக்கிய தலம்: ஒரு முறை சூரியனுக்கு தான் மிகவும் பிரகாசமுடையவன் என்ற கர்வம் ஏற்பட்டது. இறைவனின் சிரசில் சூரிய ஒளி பிரகாசிக்க நந்தியினால் அந்த ஒளி இழுக்கப்பட்டு, சூரியனுக்கு சுய ஒளி போய்விட்டது. மனம் வருந்திய சூரியன், நந்தியிடம் பரிகாரம் கேட்டார். சுயம்பு மூர்த்தியாக திருவாடானையில் வீற்றிருக்கும் இறைவனை நீல ரத்தினக்கல்லில் ஆவுடை அமைத்து வழிபட்டால் சாபம் நீங்கும் என கூறினார். ஆதியாகிய சூரியன் நீலரத்தினக் கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என பெயர் வந்தது. இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார். சுக்கிரனுக்குரிய அதிதேவதை: அம்மன் சிநேகவல்லி சுக்கிரனுக்குரிய அதிதேவதை ஆவார். இத்தலம் சுக்கிரனுக்குரிய சிறப்புத்தலம்.
திருவிழாக்கள்
வைகாசி விசாகத்தில் வசந்த விழா 10 நாள், ஆடிப்பூரத்திருவிழா 15 நாள், நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்துசமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தேவகோட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
தேவகோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை