Wednesday Dec 25, 2024

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், சென்னை

முகவரி

அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை-600 005 போன்: +91- 44 – 2844 2462, 2844 2449.

இறைவன்

இறைவன்: பார்த்தசாரதிபெருமாள் இறைவி: ருக்மணி

அறிமுகம்

பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது. இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது. இக்கோயில் முதலில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. இக்கோவிலில் திருமாலின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்கள் உள்ளன. அவையாவன நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர். இக்கோவில் சென்னை பழமையான கட்டமைப்புகளில் ஒன்றாகும். இக்கோவிலில் வேதவள்ளி தாயார், ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதராஜ சுவாமி, நரசிம்ம, ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் வைகானச ஆகமத்தினையும், தென்கலையையும் பின்பற்றுகிறது. உடன் நரசிம்மர் மற்றும் கிருஷ்ணருக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. இக்கோவிலின் கோபுரங்களிலும், மண்டபத் தூண்களிலும் தென் இந்திய கட்டிடக் கலையை வலியுருத்தும் நிறைய சிற்ப வேலைபாடுகள் காணப்படுகின்றன.

புராண முக்கியத்துவம்

திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்னும் மன்னனுக்கு,பெருமாளை குருக்ஷேத்ர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக, தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தனக்கு அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம் வேண்டினார். சுவாமியும் இங்கு தேரோட்டியாக காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னர், அதே கோலத்தில் தங்கும்படி வேண்டவே, பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமாள் ஆயுதம் எதையும் எடுப்பதில்லை என்று செய்த சபதத்திற்கு ஏற்ப ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி இருக்கிறார்.பாரதப்போரில் அர்ச்சுனன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகளையெல்லாம் தானே முன்னின்று ஏற்று க் கொண்டு அர்ச்சுனனுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்ததை விளக்கும் வகையில் இன்றும் பார்த்தசாரதி முகத்தில் அம்பு பட்ட வடுக்கள் காணப்படுகின்றன. “வேங்கடகிருஷ்ணர்’ என்றும் பெயர் பெற்றார். இத்தலத்து உற்சவர், பார்த்தசாரதி ஆவார். பிற்காலத்தில் இவர் பிரசித்தி பெறவே, இவரது பெயரில் கோயில் அழைக்கப்பட்டது. வியாச முனிவரால் இங்கே இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்கிறது ஸ்தல புராணம். இங்கு காணப்படும் மூலவர் திருமேனியே, கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது. நின்றான் திருக்கோலத்துக்கு வேங்கடகிருஷ்ணர் இவரே மூலவர். அமர்ந்தான் கோலத்துக்கு தெள்ளியசிங்கர் என்ற ஸ்ரீநரசிம்மர். கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் எனப்படும் ஸ்ரீரங்கநாதர். இந்த மூன்று நிலைகளுமே வீரம் யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்கின்றன.

நம்பிக்கைகள்

இங்குள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும். தவிர இத்தலத்து பெருமாளை மனமுருக வேண்டினால் கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்

சிறப்பு அம்சங்கள்

பார்த்தசாரதி : தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப்போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம்.இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார்.ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது.காயங் களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில், நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை. அழகாக பிறக்கவில்லையே என வருந்துபவர்கள், திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை உணர்வர். தீர்த்த தாயார்: முன்னொரு காலத்தில், திருமாலை தனது மருமகனாக அடைய வேண்டி பிருகு மகரிஷி, இத்தலத்தில் தவமிருந்தார். அப்போது இங்கிருந்த புஷ்கரணியில் மலர்ந்த அல்லி மலரில், தாயார் தோன்றினார். பிருகு அவருக்கு வேதவல்லி என பெயரிட்டு வளர்த்தார். அவளுக்கு திருமணப்பருவம் வந்தபோது திருமால், ரங்கநாதராக இத்தலம் வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருக்கல்யாண வைபவம் இக்கோயிலில் மாசி மாதம், வளர்பிறை துவாதசியன்று நடக்கிறது. வேதவல்லி தாயார் தனி சன்னதியில் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். இவள் கோயிலைவிட்டு வெளியேறுவதில்லை. வெள்ளிக்கிழமை மற்றும் உத்திர நட்சத்திரத்தில் கோயில் வளாகத்திற்குள் புறப்பாடாகி, ஊஞ்சலில் காட்சியளிக்கிறாள். குடும்பத்துடன் கிருஷ்ணர்: மனிதர்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக இக்கோயிலில் பெருமாள் அருள்கிறார். மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார், மார்பில் மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். இந்தப் பெருமாள், அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால், அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர். தனிசன்னதியில் இருக்கும் ராமபிரானுடன் சீதை, லட்சுணர், பரதன், சத்ருக்கனன், ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர். சக்கரம் இல்லாத சுவாமி: பெருமாளின் பஞ்சாயுதங்களில் சங்கும், சக்கரமும் பிரதானமானவை. ஆனால், இக்கோயிலில் சுவாமியிடம் சக்கரம் இல்லை. மகாபாரத போரின்போது பாண்டவர்களுக்கு உதவிய கிருஷ்ண பரமாத்மா, போர் முடியும் வரையில் ஆயுதம் எடுப்பதில்லை என உறுதி எடுத்திருந்தார். எனவே, இவர் இத்தலத்தில் ஆயுதம் இல்லாமல் காட்சி தருகிறார். போரை அறிவிக்கும் சங்கு மட்டும் வைத்திருக்கிறார். பெருமாளை இத்தகைய கோலத்தில் தரிசிப்பது அபூர்வம். பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி தரும் பெருமாள், இங்கே கிருஷ்ணனாகிய மானிட வடிவில் இருப்பதால் இரண்டு கரங்களே உள்ளன. மீசையில்லாத தரிசனம்: தேரோட்டிக்கு அழகு கம்பீரத்தை உணர்த்தும் மீசை. இதனை உணர்த்தும் விதமாக, இக்கோயிலில் வேங்கடகிருஷ்ணர் மீசையுடன் காட்சிதருகிறார். இதனால் இவருக்கு, “மீசை பெருமாள்’ என்றும் பெயருண்டு. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது, பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் இவரை மீசையில்லாமல் தரிசிக்கலாம். உற்சவர் பார்த்தசாரதிக்கு வெள்ளிக் கிழமைகளில் விசேஷ அபிஷேகம் நடக்கும் போது மட்டும், மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர். ஐந்து மூலவர் ஸ்தலம்: கோயில்களில் பெரும்பாலும் ஒரு மூர்த்தி மட்டுமே பிரதான மூலவராக இருப்பார். ஆனால், இக்கோயிலில் ஐந்து மூர்த்திகள் மூலவர் அந்தஸ்தில் வணங்கப்படுகின்றனர். பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திரவரதர் மற்றும் யோகநரசிம்மர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். எனவே இத்தலம், “பஞ்சமூர்த்தி தலம்’ என்றழைக்கப்படுகிறது.ரங்க நாதர் சன்னதியில், சுவாமியின் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் இருக்கின்றனர். ரங்கநாதர், இங்கு தாயாரை திருமணம் செய்துகொள்ள வந்தபோது நரசிம்மரும், வராகமூர்த்தியும் உடன் வந்தனர் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு உள்ளது. இவ்வாறு ஒரே சன்னதிக்குள் பெருமாளின் மூன்று கோலங்களையும் இங்கு தரிசிக்க முடியும். திருமணத்திற்கு வந்த ரங்கநாதரை, தாயார் “”என்னவரே!” என்ற பொருளில், “”ஸ்ரீமன்நாதா!” என்றழைத்தார். எனவே இவருக்கு “ஸ்ரீமன்நாதர்’ என்ற பெயரும் உண்டு.கிழக்கு நோக்கிய மூலவர் வேங்கட கிருஷ்ணன், மேற்கு நோக்கிய யோக நரசிம்மர் என இருவருக்கும் இரு திசைகளிலும் இரண்டு கொடி மரங்களும், வாசல்களும் உள்ளன. ஒலி எழுப்பாத மணி: யோக நரசிம்மர், யோக பீடத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரே இத்தலத்தின் முதல் மூர்த்தியாவார். காலையில் இவருக்கே முதல் பூஜை நடக்கிறது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரசிம்மர் இவர். இவரது சன்னதியில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் சப்தமும், பேச்சு சப்தமும் கேட்கக்கூடாது என்கின்றனர். எனவே, இவரது சன்னதியில் அலங்காரத்திற்காக கதவில் இருக்கும் மணிகள்கூட, நடுவில் சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்கள் இவரிடம் வேண்டிக் கொண்டு உப்பு, மிளகை இவரது சன்னதிக்கு பின்புறத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதற்காக சிறிய மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. மற்ற தலங்களில் குறிப்பிட்ட நாளில் – குறிப்பிட்ட நேரத்தில்தான் கருடசேவை வைபவத்தைக் காண முடியும். ஆனால் இங்கே வருடம் 365 நாளுமே கருடசேவைதான்! காரணம், கஜேந்திரனுக்கு மோட்சம் அருளிய அந்தக் கஜேந்திர வரதர் (மூலவர்), கருடாழ்வார் மேல் நித்திய வாசம் செய்கிறார். திருவல்லிக்கேணியில் குடும்ப சமேதராக அருளாட்சி செலுத்தும் வேங்கடகிருஷ்ணரை தரிசித்தால், வினைகள் யாவும் தீரும்; வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவிழாக்கள்

ஸ்ரீ பார்த்தசாரதி லட்சார்ச்சனை – பிப்ரவரி – 10 நாட்கள் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவின் போது கோயிலில் கூடுவர் பிரம்மோற்ஸவம்- ஏப்ரல் – 10 நாட்கள் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் வைகுண்ட ஏகாதேசி மற்றும் புது வருடப் பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது. வருடத்தின் அனைத்து நாட்களுமே இங்கு உற்ஸவம் என்று சொல்லும் அளவுக்கு அலங்காரங்கள். புறப்பாடுகள்! எப்போதுமே விழாக் கோலம்தான். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஸ்ரீஜயந்தி விழா யாதவர்களைப் போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீஜயந்தி, அன்று இரவு மூலஸ்தானத்தில் இருந்து கண்ணன் சர்வ அலங்காரத்துடன், கைத்தலத்தில் மகாமண்டபத்துக்கு எழுந்தருளி சங்குப்பால் அமுது செய்து, பின்னர் பார்த்தசாரதி பெருமாளுடன் திருமஞ்சனம் கண்டருளுவார். மறுநாள், காலை கண்ணன் சேஷ வாகனத்தில் மாடவீதிகள் மற்றும் யாதவப்பெருமக்கள் இருக்கும் வீதிகளுக்கு செல்வார். அவர்கள் அன்புடன் தரும் பால், வெண்ணெய் மற்றும் பழங்கள் போன்றவற்றை ஏற்றுக்கொண்டு திருக்கோயிலுக்குள் எழுந்தருள்வார். இரவு புன்னை மர வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாளுடன் திருவீதிகளில் எழுந்தருளி, உறியடி உற்சவம் கண்டருளுவார்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவல்லிக்கேணி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவல்லிக்கேணி

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top