Wednesday Dec 18, 2024

திருவனந்தபுரம் பழவங்காடி கணபதி கோயில்,கேரளா

முகவரி :

பழவங்காடி கணபதி கோயில்,

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் – 695023.

இறைவன்:

கணபதி

அறிமுகம்:

பழவங்காடிகணபதிகோயில் கேரளா மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவிக்ரகம் ஸ்ரீமகாகணபதி ஆகும். இக்கோவிலின் விநாயகர் சிலையானது, வலது காலை மடித்து உட்கார்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோவிலில் ஸ்ரீகணபதியின் சிலையானது 32 வெவ்வேறு விதமான வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலானது திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவிலில் தர்மசாஸ்தா, துர்கை அம்மன், நாகராஜா ஆகிய கடவுள் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

புராண முக்கியத்துவம் :

                 திருவாங்கூர் சமஸ்தான மன்னன் ராமவர்ம மகாராஜா தனது அரண்மனையைப் பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்ற முடிவு செய்தான். அதனால் தனது படைவீரர்கள் மற்றும் மக்களுடன் பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இடம் பெயர்ந்தான். அப்போது மன்னன் வழிபட்டு வந்த விநாயகர் சிலை ஒன்றையும், படை வீரர்கள் தங்களுடன் எடுத்துச் சென்றனர். அவர்கள் எடுத்துச் சென்ற சிலையை அங்கிருந்த கோட்டைக்கு அருகில் வைத்தனர். அரண்மனை பாதுகாப்புப் பணியிலிருந்த படை வீரர்கள் அந்த விநாயகரை வழிபட்டுத் தங்கள் பணிக்குச் செல்லத் தொடங்கினர்.

படைவீரர்கள் தாங்கள் போருக்குச் செல்லும் காலங்களில், அந்த விநாயகர் சிலையையும் தங்களுடன் எடுத்துச் சென்று போர்க்களத்தில் நிறுவி வழிபட்டு, அதன் பிறகு போரிடச் சென்றனர். இதனால் அவர்கள் சண்டையிட்ட போர்களிலெல்லாம் வெற்றி கிடைத்தது. படை வீரர்களின் வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பிற்காலத்தில் படைவீரர்கள், அந்த விநாயகர் சிலையை ஓரிடத்தில் நிலையாக நிறுவி வழிபாடுச் செய்வதென முடிவு செய்தனர். அதனைத் தொடந்து, சிறிய அளவிலான கோவில் ஒன்று கட்டப்பட்டு அதில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறு சொல்கிறது.

திருவாங்கூர் சமஸ்தானப் படைவீரர்கள் அனைவரும் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்பு, படை வீரர்கள் பராமரிப்பில் இருந்து வந்த விநாயகர் கோவிலும் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ராணுவப் பராமரிப்பில் இருக்கும் விநாயகரை அன்றிலிருந்து ராணுவப் பிள்ளையார் (மிலிட்டரிப் பிள்ளையார்) என்று அங்குள்ளவர்கள் அழைக்கத் தொடங்கி விட்டனர்.

சிறப்பு அம்சங்கள்:

                திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டைப் பகுதியில் பழவங்காடியில் இருக்கும் இக்கோவிலில் மகாகணபதி கிழக்கு நோக்கிப் பார்த்தபடி, வலது காலை மடித்து வைத்து அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலுக்குள் விநாயகரின் முப்பத்திரண்டு திருவுருவங்கள் அழகிய ஓவியங்களாக வரைந்து வைக்கப்பட்டிருக்கின்றன. கோவில் வளாகத்தில் தர்மசாஸ்தா, துர்க்கை அம்மன், நாகராஜா ஆகியோருக்கான சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன. ஆலயம் காலை 4.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு தேங்காய் உடைத்து (விடலை) வழிபாடு செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. சபரிமலைக்கு அடுத்ததாக இங்குதான் அதிக அளவில் தேங்காய் உடைத்து வழிபாடு நடக்கிறதாம். தேங்காய் உடைத்து வழிபட்டால், நம் செயல்பாடுகளில் எந்தத் தடையுமில்லாமல் வெற்றியடைய முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

காலம்

1860 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவனந்தபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவனந்தபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top