Wednesday Dec 18, 2024

திருமால்பூர் மணிகண்டேஸ்வரர் திருக்கோயில், வேலூர்

முகவரி

அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில், திருமால்பூர்-631 053. திருமாற்பேறு, வேலூர் மாவட்டம். போன்: +91 4177 248 220, 93454 49339

இறைவன்

இறைவன்: மணிகண்டேஸ்வரர் இறைவி: அஞ்சனாட்சி

அறிமுகம்

மணிகண்டேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் மூலவர் மணிகண்டீஸ்வரர், தாயார் அஞ்சனாட்சி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக சக்கர தீர்த்தமும் அமைந்துள்ளன. இத்தலம் தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் திருமால்பூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் பழங்காலத்தில் ஹரிசக்கரபும், திருமாற்பேறு என்ற பெயர்களால் அறியப்பட்டுள்ளது. மேலும் இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் பதினொறாவது தலமாகும்.

புராண முக்கியத்துவம்

குபன் என்ற அரசனுக்காக திருமால் துதீசி முனிவர் மீது தனது சக்கரத்தை வீசினார். ஆனால், அது முனிவரின் தெய்வீக உடம்பில் பட்டு முனை மழுங்கி விட்டது. கவலையடைந்தார் திருமால். என்ன செய்வதென்று தேவர்களுடன் கலந்தாலோசித்து, சலந்தராசுரனை அழிப்பதற்காக உண்டாக்கிய சுதர்சன சக்கரம் சிவனிடம் உள்ளதை அறிந்தார். உடனே இத்தலம் வந்து அம்பிகை பூஜித்த இந்த லிங்கத்தை தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்தார். ஒரு நாள் சிவன், திருமாலின் பக்தியை சோதிக்க, பூஜைக்கான ஆயிரம் மலர்களில் ஒன்றை மறைத்து விட்டார். திருமால் பூஜை செய்யும் போது மலர் ஒன்று குறைய, தனது கண்ணைப்பறித்து இறைவனின் திருவடியில் அர்ப்பணித்தார். இந்த பூஜைக்கு மகிழ்ந்த சிவன், “”தாமரை மலருக்காக உனது கண்ணை எடுத்து பூஜித்ததால், தாமரை போலவே உனக்கு கண் கொடுக்கிறேன். இதனால் உன்னை “பதுமாஷன்’ என அழைப்பார்கள். இத்தலமும் “திருமாற்பேறு’ என அழைக்கப்படும்” எனக்கூறி திருமால் வேண்டிய சக்கரத்தை கொடுத்தருளினார். மேலும் அவர் திருமாலிடம்,””நீ கூறி வழிபட்ட ஆயிரம் நாமங்களால் என்னை பூஜிப்பவர்களுக்கு முக்தியை கொடுப்பேன். அதைச் சொல்ல இயலாதவர்கள் என்னை, தீண்டச்சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், சாகிசனர் ஆகிய திருநாமங்கள் சொல்லி பூஜித்தால் வேண்டிய வரம் தருவேன்,”என்று அருளினார். இத்தலத்தில் ஒரு கண நேரம் தங்கியவர்களுக்கும் முக்தியளிக்க வேண்டும் எனவும், இங்கு வழிபட்டால் அனைத்துக் கோயில்களிலுள்ள லிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்க வேண்டும் எனவும் வரம் பெற்றார். சிவன் மகிழ்ந்து திருமால் கேட்ட வரம் தந்தருளியதாக வரலாறு.

நம்பிக்கைகள்

பெருமாள் வணங்கி சக்கரம் பெற்ற தலமாதலால், இங்கு வழிபடுவோருக்கு எதிரி பயம் இருக்காது. வழக்குளில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

பார்வதிதேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது, குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமானை மூலஸ்தானம் அருகே திருமால் கைகூப்பி வணங்கிய நிலையில் “செந்தாமரைக்கண்ணப் பெருமாள்’ என்ற நாமத்துடன் உள்ள தலம். மூலவரின் அருகே அதிகார நந்தி நின்ற நிலையில் உள்ளார். சிவன் கோயில் என்றாலும், பெருமாள் அருள் தலம் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்ஸவ காலத்தில் கருடசேவை நடக்கிறது. பராந்தக சோழன் நினைவாக அமைக்கப்பட்ட சோளீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். எட்டு கரத்துடன் துர்க்கை நளினமாக காட்சி தருகிறாள். சிவன் கோயில் என்றாலும், பெருமாள் அருள் தலம் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்ஸவ காலத்தில் கருடசேவை நடக்கிறது. பத்து கரங்களுடன் வல்லபை விநாயகரும் அனுக்கிரகம் புரிகிறார்.

திருவிழாக்கள்

மாசிமாதம் நடக்கும் 10 நாள் பிரமோற்ஸவத்தில் மகம் நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடக்கும். இந்த திருவிழாவில் தான் பெருமாளுக்குரிய கருட சேவையும் நடக்கிறது. ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரையும் விசேஷம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருமால்பூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

அரக்கோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top