திருமலைராயன் பட்டினம் அபிராமி திருக்கோயில், காரைக்கால்
முகவரி
திருமலைராயன் பட்டினம் அபிராமி திருக்கோயில், திருமலைராயன் பட்டினம், காரைக்கால் மாவட்டம் – 609 606.
இறைவன்
இறைவன்: இராஜ சோளீஸ்வரர் இறைவி: அபிராமி
அறிமுகம்
திருமலைராயன் பட்டினம் என்று அழைக்கப்படும் இந்தத் தலம் (பர்வதராஜபுரம்), காரைக்காலில் இருந்து தெற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலம் சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும்
புராண முக்கியத்துவம்
திருக்கடவூர் அபிராமியை அனுதினமும் பூஜிக்கும் பேறு பெற்றவர் அம்பிகாதாச பட்டர். வேத-சாஸ்திரங்களில் கரை கண்ட இவர், அபிராமி பட்டரின் சீடப் பரம்பரையில் வந்தவர். இவரின் மனைவி ஞானாம்பிகை. பெயருக்கேற்ற குணவதி! இந்தத் தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததுதான் குறை. இதனால் மிகவும் வருந்திய அம்பிகாதாசர், குழந்தை வரம் கேட்டு தினமும் அபிராமியிடம் முறையிட்டு வந்தார். அம்பிகை அருள் புரியாமல் இருப்பாளா? முதலில் பெண் குழந்தையும் அடுத்து சில வருடங்கள் கழித்து ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. அபிராமசுந்தரி என்றும், சியாமளதாசன் என்றும் குழந்தைகளுக்குப் பெயரிட்டார் அம்பிகாதாசர். குழந்தைகளின் விளையாட்டையும் மழலைப் பேச்சையும் கண்டு ஆனந்தத்தில் மூழ்கினர் பெற்றோர். அம்பிகாதாசரது முயற்சியால் சியாமளதாசன் கல்வி கேள்விகளையும், வேத சாஸ்திரங் களையும் கற்றுத் தேர்ந்தான். அவனது புலமையைக் கண்டு அனைவரும் ஆச்சரியப் பட்டனர். எவர் கண் பட்டதோ… 15-வது வயதில், சியாமள தாசனை வைசூரி நோய் தாக்கியது. ஊழ்வினைப் பயனால் அவனது பார்வை மங்கியது. நாளடைவில் பார்வை மொத்தமும் பறிபோனது. அம்பிகா தாசர் கலங்கிப் போனார். ‘எனக்குப் பிறகு என் மகன், அம்பி கையை பூஜித்து வருவான் என்று நினைத்தேனே… விதி சதி செய்து விட்டதே!’ என்று வருந்தினார். அபிராமியைச் சரண் அடைந்து, தனது மனக் குறையைத் தீர்த்து அருளும்படி வேண்டினார். அன்று திருவாடிப்பூரம், வெள்ளிக் கிழமை! அபிராமியின் சந்நிதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பூஜைகள் முடிந்து வீட்டுக்கு வந்த அம்பிகாதாசர் ஏதோ பெயரளவுக்குச் சாப்பிட்டார். பிறகு, அம்பாளைத் தியானித்து, படுத்தவர் கண்ணயர்ந்தார். அவரது கனவில் அன்னை அபிராமி தோன்றினாள் ‘தாசனே, வருந்தாதே! இந்தத் தலத்துக்குத் தெற்கே பர்வதராஜபுரம், திருமலை, ராஜசோளீச்சுரம் ஆகிய பெயர்க ளைக் கொண்ட திருத்தலம் ஒன்று உள்ளது. அங்கு, இறைவனின் இடப் பாகத்தில் நானே எழுந்தருளி உள்ளேன். வருகிற திங்கட்கிழமை அன்று, அங்குள்ள சிவ தீர்த்தத்தில் உன் மகனுடன் நீராடி, என்னை வழிபடு… உன் மகன் பார்வை பெறுவான்! மேலும்… அங்கு, என்னை பூஜித்து வரும் சிவாச்சார்யர், தன் ஒரே மகளான கௌரிக்கு திரு மணம் நடத்த வேண்டும் என்றும், தனக்குப் பின் தன் மாப்பிள்ளையே எனக்குரிய பூஜைகளைக் கவனிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். அதை நிறைவேற்றும் வகையில், உன் மகன் சியாமள தாசனை அங்கேயே பூஜை செய்துவர ஏற்பாடு செய்!’ என்று அருளி மறைந்தாள். அதேநேரம், பர்வதராஜபுரத்தில் உள்ள சிவாச் சார்யரது கனவிலும் தோன்றி, செய்ய வேண்டியதை விவரித்தாள் அன்னை அபிராமி. விடிந்ததும் அம்பிகை அருளியதை அனைவரிடமும் தெரிவித்தார் அம்பிகா தாசர். பிறகு, மகன் சியாமளதாசனுடன், பர்வதராஜபுரத்தை அடைந்து, அங்குள்ள சிவ தீர்த்தத்தில் நீராடி அம்பிகை சந்நிதியை அடைந்தார். ”அம்மா! நீ அருளியபடி இதோ சியாமளதாசனை அழைத்து வந்து விட்டேன். உன் அடியவனான என் மனக்குறை தீர்த்து, சியாமளதாசனுக்குப் பார்வை அருள வேண்டும்!” என்று மனமுருகி பிரார்த்தித்தார். அப்போது, கோடி சூரியப் பிரகாசத்துடன், ராஜ சோளீஸ்வரருடன் காட்சி தந்தாள் அம்பிகை. ‘அம்மா! அம்பிகே!’ என்ற எழுந்த குரல்கள் சந்நிதி முழுக்க எதிரொலித்தன! அதையும் மீறி, ”கண் கொடுத்த தாயே! உன் திருவடியைக் கண்டு கொண் டேன்! காலமெல்லாம் உனக்குத் தொண்டு செய்வேன்” என்று ஒரு குரல் கேட்டது. அம்பிகாதாசர் திரும்பிப் பார்த்தார். கைகளைத் தலைக்கு மேல் கூப்பியபடி கதறிக் கொண்டிருந்தான் சியாமளதாசன். அவனுக்குப் பார்வை கிடைத்ததை அறிந்து அம்பிகாதாசர் மெய் சிலிர்த்தார். பின்னர், அம்பிகையின் ஆணைப்படி சியாமளதாசனுக்கும், கௌரிக்கும் திரு மணம் நடந்தது. அங்கேயே இருந்து அம்பிகைக்கு தினமும் பூஜை செய்து வந்த சியாமளதாசன், சியாமளதாச பட்டர் என்ற திருநாமம் பெற்றார். இவருக்கு அபிராமசுந்தரன், ராஜேஸ் வரன் என்று இரு குழந்தைகள் பிறந்தன. அன்னை அபிராமியைப் பல காலம் ஆராதித்து வந்த சியாமளதாச பட்டர், ஓர் ஆடி மாத வளர் பிறை நாளில்- திருவாடிப்பூரத்தன்று அன்னையின் திருவடி நிழலில் கலந்தார்.
நம்பிக்கைகள்
சியாமளதாசர் நீராடி, பார்வை பெற்ற சிவதீர்த்தம் ‘நேத்திர புஷ்கரணி’ எனப்படுகிறது. இதில் நீராடி, அம்பாளை வழிபட்டால், ஆரோக்கியம், ஐஸ்வர் யம் ஆகியவற்றைப் பெறலாம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருமலைராயன் பட்டினம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி