Saturday Nov 23, 2024

திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில், திருமணிக்கூடம்- 609 106, திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91 96554 65756

இறைவன்

இறைவன்: வரதராஜப்பெருமாள் (மணிக்கூடநாயகன்) இறைவி: திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி)

அறிமுகம்

திருமணிக்கூடம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரிலிருந்து கிழக்கே 4 பர்லாங் தொலைவில் அமைந்துள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இக்கோயிலும் ஒன்றாகும். திருமணிக்கூடம் என்ற சொல்லுக்கேற்ப இத்தலம் மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனையும் எடுத்துச் செல்வர். இறைவன் – கீழ்த்திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் காணப்படும் வரதாஜப் பெருமாள்; கஜேந்திரவரதன்; மணிக்கூட நாயகன் இறைவி – திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி) மற்றும் பூதேவி தீர்த்தம் – சந்திர புஷ்கரணி விமானம் – கனகவிமானம்

புராண முக்கியத்துவம்

தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன்,””உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்,’என சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேய தொடங்கினான். சாபம் தீர ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு என ஒவ்வொரு கோயிலாக சென்று கடைசியில் திருமணிக்கூடத்திற்கு வந்தான். அங்கே அவனுக்கு பெருமாள் வரம் தந்து வரதராஜனாக காட்சி தந்தார். அவனது நோய் விலகியது. சாபவிமோசனம் கிடைத்தது.

நம்பிக்கைகள்

தீராத நோய்கள் தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 37வது தலம். தீராத நோய்கள் எல்லாம் திருமணிக்கூடம் சென்றால் தீர்ந்து விடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், கருடாழ்வார் சன்னதியும் உள்ளது. மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் மூலஸ்தானத்தில் வரதராஜர் கிழக்கு பார்த்து தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில், பின் கைகளில் சங்கு சக்கரமும், முன் கைகளில் அபய, ஊரு முத்திரை காட்டியபடி சேவை சாதிக்கிறார். பெருமாளின் வலது புறத்தில் சதுர வடிவமான தாமரை பீடத்தின் மீது நின்றபடி இடதுகரத்தில் தாமரை மலரும், வலது கரத்தினை தொங்க விட்ட படியும் ஸ்ரீதேவி காட்சியளிக்கிறாள். இடது புறத்தில் பூமா தேவி வலது கரத்தில் தாமரை மொட்டும், இடது கரத்தை தொங்க விட்டபடியும் அருள்பாலிக்கிறாள். அருகி லேயே உற்சவமூர்த்திகள் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வட புறத்தில் நம்மாழ்வார் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

திருவிழாக்கள்

11 திருநாங்கூர் திவ்யதேச பெருமாள்களின் கருடசேவையில் இப்பெருமாளும் கலந்து கொள்வார். வைகுண்ட ஏகாதசி

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருமாணிக்கூடம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top