Saturday Jan 18, 2025

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் திருக்கோயில், திருமங்கலம், லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம் – 621703.

இறைவன்

இறைவன்: சாமவேதீஸ்வரர் இறைவி: உலக நாயகி

அறிமுகம்

திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமங்கலம் என்ற தலம். பசுமைச் சூழலில் அமைதியே உருவாக அமைந்துள்ள இந்த ஊரில் உள்ளது அருள்மிகு சாமவேதீஸ்வரர் ஆலயம். இறைவியின் பெயர் உலக நாயகி. இறைவன் பெயர் சாமவேதீஸ்வரர். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்புரிகிறார். அம்மன் லோகநாயகி. உள்பிரகாரத்தில் விநாயகர், சுப்ரமணியர், மகாலஷ்மி, சோமஸ்கந்தர், அப்பர், சம்பந்தர், சனீஸ்னீவரர், பரசுராமர், சூரியன், சந்திரன் முதலிய சன்னிதிகள் உள்ளன. திருமகள் இத்தல இறைவனை வழிபட்டதனால் திருமங்கலம் என்றும் பெயர். 63 நாயன்மார்களில் ஒருவரான் ஆனாய நாயனார் இத்தலத்தில் ஆயர் குலத்தில் அவதரித்து, மாடுகளையெல்லாம் மேய்ப்பதோடு, சிவபெருமானிடம் அன்பைப் பெருகும்படி புல்லாங்குழலில் வாசித்து இறைவனின் அருளைப் பெற்ற தலம். நாயனாரின் திருவுருவம் இக்கோயிலின் வடமேற்கில் தனிச்சன்னிதியில் காட்சியளிக்கிறார். பரசுராமர் இத்தலத்தில் தாயைக் கொன்ற பழிநீங்க இத்தல இறைவனை வழிபட்டு கொலைப் பாவம் நீங்கப்பெற்ற தலம். இக்கோயிலில் 13 கல்வெட்டுக்கள் உள்ளன. சோழ, நாயக்கர் கலத்தியவை.

புராண முக்கியத்துவம்

பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் மாத்ருஹத்தி எனும் தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். அவரது தோஷம் நீங்கியது. இதனால் இங்குள்ள தீர்த்தம் பரசுராம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் இந்த ஊருக்கு பரசுராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. சண்டிகேசுவரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்க பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார். அவரைப் பற்றிய தோஷம் நீங்கவில்லை. இறைவன் இத்தலத்தில் வந்து தன்னை வணங்கும்படி கூற சண்டிகேசுவரரும் இறைவனின் சன்னிதியின் இடது புறம் இருந்து இறைவனை வணங்கினார். அவரது தோஷம் விலகி இறைவனடி சேர்ந்தார். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் 14–வது நாயன்மார் ஆணய நாயனார். அவர் அவதரித்த தலம் இது. இவர் கார்த்திகை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் இறைவனுடன் இரண்டற கலந்தார். அந்த நாளை அவரது குருபூஜை நாளாக இந்த ஆலயத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். ஆணய நாயனாருக்கு முக்தி கொடுத்த சிவலிங்கமும், அம்மனும் இங்கு தனித் தனியே அருள்பாலிக்கின்றனர்.

நம்பிக்கைகள்

இங்கு அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி வழக்கம் போல் சின்முத்திரை காட்டாமல் அபய முத்திரை காட்டுகிறார். இது ஓர் அபூர்வ அமைப்பு என்கின்றனர். இதனால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு இறைவன் தோஷ நிவர்த்தி தருவதுடன் கல்வி செல்வத்தையும் வாரி வழங்குகிறார் என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த ஆலயத்தில் பைரவரும், கால பைரவரும் சேர்ந்து இருப்பது ஓர் அற்புதமான அமைப்பாகும். அர்த்தஜாம பூஜையின் போது பைரவர் பாதத்தில் வைத்த விபூதியை பூசுவதால் சகலவிதமான பில்லி சூன்யம் நோய்களும் குணமாகும் என கூறுகின்றனர். மகம் நட்சத்திரத்தன்றும் சனிக்கிழமையன்றும் இக்கோவிலை 11 முறை வலம் வந்து, தேனில் ஊறிய பலாச் சுளைகளை தானம் செய்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது இந்த ஊர் மக்கள் சொல்லும் நம்பிக்கையான செய்தி.

சிறப்பு அம்சங்கள்

இறைவனின் அர்த்தமண்டப நுழைவு வாசலில் சண்டி கேசுவரரின் திருமேனியை நாம் காணலாம். இது வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சம் ஆகும். இங்கு கிழக்கு பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு, ஆறுமுகமும் 12 கரங்களும் இல்லை. மாறாக ஆறு முகமும் நான்கு கைகளுமாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தவிர முருகன் வள்ளியை மணந்தபின் இத்தலம் வந்ததால் முருகனும் தேவசேனாவும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க, வள்ளி மட்டும் மயிலின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது ஓர் அற்புத காட்சியாகும். சனி பகவானின் வாகனம் காகம். பொதுவாக காகம் தெற்கு நோக்கி இருப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள சனி பகவானின் வாகனம் வடக்கு திசை நோக்கி அமைந்திருப்பது ஓர் அபூர்வ அமைப்பாகும். சனி பெயர்ச்சியின் போது இங்குள்ள சனி பகவானுக்கு விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறும்.

திருவிழாக்கள்

நான்கு கால பூஜை, பிரமோற்சவம் சித்திரையிலும், கார்த்திகை மாதத்தில் அஸ்தத்தில் ஆனாய நாயனாரின் உற்சவமும் நடைபெறுகிறது.

காலம்

11 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

லால்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top