Sunday Jan 19, 2025

திருப்புவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

திருப்புவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோயில், திருப்புவனம், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612 103.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ கம்பகரேஸ்வரர் இறைவி: ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி

அறிமுகம்

திருப்புவனம் கம்பகரேஸ்வரர் கோயில், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில், கும்பகோணம் – மயிலாடுதுறை வழித்தடத்தில், கிழக்கே 6 கி.மீ. தொலைவில் திருபுவனம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. பெரிய திருச்சுற்றுடன் அமைந்துள்ள இக்கோயிலின் கருவறை சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. கருவறையின் வெளியே திருச்சுற்றில் அழகான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. இக்கோயிலின் உள் மண்டபத்தில் அமைந்துள்ள தூண்கள் தாராசுரம் கோயிலில் உள்ளதைப்போன்று வேலைப்பாடுகளுடன் உள்ளன. மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருப்பெயர் ஸ்ரீகம்பகரேசுவரர். தமிழில் நடுக்கம் தீர்த்த பெருமான் என்பது பொருள். திருபுவன ஈச்சரமுடையாக தேவர் என்பது இக்கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருப்பெயராகும். இத்தலத்து அம்பாளுக்கு ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி என்ற பெயர் வழங்குகின்றது. இங்குள்ள சரபேஸ்வரர் சன்னதி மிகவும் சிறப்பு பெற்றதாகும். சரபேஸ்வரர் தனிச்சன்னதியில் உள்ளார்.

புராண முக்கியத்துவம்

வரகுணபாண்டியன் என்ற மன்னன் போருக்கு செல்கிறான். அவ்வாறு செல்லும்போது வழியில் குதிரை வேகமாக செல்கிறது. பாதையின் குறுக்காக அந்தணர் வர குதிரையின் வேகத்தை அடக்குவதற்குள் குதிரை காலில் விழுந்து விதிப்பயனால் அந்த அந்தணர் உயிர் விடுகிறார். பிறகு அந்த அந்தணரின் ஆவியானது வரகுணபாண்டியனை பிடிக்கிறது. அதாவது பிரம்மகத்தி தோஷம் பிடிக்கிறது. அது நீங்க திருவிடைமருதூர் செல்கிறார். அங்கு சென்று வழிபட அந்த பிரம்மகத்தி தோஷமானது கிழக்கு வாயிலில் ஒதுங்குகிறது. அதிலிருந்து விடுபட்ட வரகுணபாண்டியன் தனது தோஷம் நீங்கியவுடன் திருபுவனம் வருகிறார். அப்போது மீண்டும் அந்த ஆவி வந்து பிடிக்குமோ என்று பயப்படுகிறார். அந்த பயத்தினால் நடுக்கம் ஏற்படுகிறது. அந்த நடுக்கத்தை கம்பகரேசுவரர் போக்குகிறார். மன்னனுக்கு ஏற்பட்ட நடுக்கத்தை தீர்த்ததால் நடுக்கம் தீர்த்த நாயகர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. சிவன், விஷ்ணு, காளி (பிரத்யங்காரா தேவி), துர்க்கை (சூலினி துர்க்கை) ஆகிய நான்கு மூர்த்திகளும் சேர்ந்த அம்சம் தான் சரபேசர். ஹிரண்யனை வதம் செய்த நரசிம்மசுவாமி அந்த உதிரம் தன் உடலில் இருப்பதால் ஆக்ரோஷமும் அகங்காரமும் அடைகிறார். அவரை சாந்தப்படுத்துவதற்காக சிவபெருமானை தேவர்கள் வேண்டுகின்றனர். நரசிம்மரின் துளி ரத்தம் பூமியில் பட்டால் ஆயிரம் தீவினை செய்யக் கூடிய குழந்தைகள் தோன்றும் அபாயம் ஏற்பட்டது. மகாவிஷ்ணுவின் உடம்பு ஆதலால் அமிர்தம் கலந்துள்ள அந்த குழந்தைகளை அழிக்க முடியாது. இந்த சிக்கலை தீர்க்க சிவபெருமானால் மட்டுமே முடியும் என்பதால் தேவர்கள் அவரிடம் முறையிட்டனர். சிவபெருமான் யாழி முகம், மனித உடம்பு, எட்டுக் கால், நான்கு கை, இரண்டு இறக்கைகள் ஒரு இறக்கையில் பிரத்யங்காரா பத்ரகாளியாகவும், மற்றொன்றில் சூலினி என்ற துர்க்கையாகவும் உருவெடுத்து இறக்கைகளால் சிவபெருமான் பறவை ரூபம் எடுக்கிறார். பிறகு அந்த நரசிம்மத்தை தன் இரண்டு கால்களால் ஆகாயத்தில் துரத்தி சென்று காற்று மண்டலத்திற்கு சென்று (பூமியின் ஈர்ப்பு மண்டலத்திற்கு அப்பாற்பட்டு சென்று) தனது வஜ்ரத்தால் (நகத்தால்) நரசிம்மத்தை அமுக்க அசுர ரத்தங்கள் பீறிட்டு வெளியேறி பூமியில் விழாது காற்றோடு கலக்கிறது. அசுர ரத்தம் வெளியானவுடன் நரசிம்மர் சாந்தமடைந்து சிவபெருமானை வழிபடுகிறார். அந்த காட்சி இங்குள்ள சரபேசர் மூலம் காணலாம். நான்கு பெரிய தெய்வங்களும் ஒன்றாக இருப்பதால் நான்கும் சேர்ந்த அருள் கிடைக்கிறது. சுவாமியின் இன்னொரு பெயர் நடுக்கம் தீர்த்த நாயகன். அம்பாளின் இன்னொரு பெயர் அறம் வளர்த்த நாயகி என்பதாகும். தேவேந்திரன், அக்னி பகவான், மாந்தாதா வரகுணபாண்டியன், சந்திரன், சூரியன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம். அம்பாளுக்கு நான்கு கைகள், அட்சர மாலை, தாமரைப்பூ வைத்து அபயமளிப்பவளாக நின்ற நிலையில் அருள்பாலிக்கிறாள். அம்பாளின் பீடம் ஒட்டியாண பீடம் என்ற பத்ம பீடத்தில் உள்ளது. இராமாயண மகாபாரத கதைகளை விளக்கும் சிற்பங்கள் கோயில் முழுக்க நிறைந்து காணப்படுகிறது.

நம்பிக்கைகள்

சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோஷங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோஷங்கள், கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும். கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி, மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும். குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும். சுவாமி கம்பகேசுவரரை வணங்குவோர்க்கு நடுக்கங்கள், நரம்புதளர்ச்சி,தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். அம்பாள் தருமத்தை வளர்த்து காப்பவள் என்பதால் அவளை வணங்குவோர்க்கு பாவங்கள் நீங்கப் பெறும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். குழந்தை பாக்கியமும் கிடைக்கப்பெறுவார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சரபேஸ்வரர் 7 அடி உயரத்தில் தனிசன்னதியில் பிரம்மாண்டமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார். சோழர் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணமாக இவ்வாலயத்தையும்,தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள்.இக்கோயிலின் விமான அமைப்பு மேற்கண்ட கோயில்களில் உள்ள விமானங்களைப் போலவே அமைந்துள்ளது. இராஜராஜசோழன் பேரன் மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோயில் இது. அதனால்தான் என்னவோ தஞ்சை பெரியகோயிலின் வடிவத்தை போலவே இக்கோயில் உள்ளது.

திருவிழாக்கள்

பங்குனி உத்திரம் – பிரம்மோற்சவம் -18 நாட்கள் திருவிழா சரப உற்சவம் – பங்குனி பிரம்மோற்சவம் முடிந்தவுடன் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் சரப உற்சவம் நடைபெறும். அன்று ஏக தின அர்ச்சனை நடக்கும். அன்று இரவு சுவாமி வெள்ளி ரதத்தில் புறப்பாடு – திருவீதி வீ உலா. சரபேசர் சிறப்பு பூஜைகள் : வெள்ளி , சனி, ஞாயிறு, அஷ்டமி, பவுர்ணமி ஆகிய 5 நாட்களின் போதும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தவிர தினமும் சரப ஹோமம் (பெரிய பூஜை)நடக்கும் முருகனுக்கு கார்த்திகை தோறும் சிறப்பு வழிபாடு நடக்கும். சங்கட சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். நவராத்திரி, சிவராத்திரி அன்று கோயிலின் விசேஷ நாட்கள் ஆகும். பவுர்ணமி திருவீதி வீ வலம் இங்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பாக நடைபெறும். மாதாந்திர பிரதோஷ நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்புவனம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருப்புவனம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top