Wednesday Dec 25, 2024

திருப்புலியூர் (குட்டநாடு) மாயப்பிரான் திருக்கோயில்,கேரளா

முகவரி

அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில், திருப்புலியூர் (குட்டநாடு)- 689 510 ஆழப்புழா மாவட்டம் கேரளா மாநிலம். போன்: +91- 94478 00291

இறைவன்

இறைவன்: மாயப்பிரான் இறைவி: போர்கோடி நாச்சியார்

அறிமுகம்

திருப்புலியூர் அல்லது புலியூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற இத்தலம் கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில் (குட்டநாடு) அமைந்துள்ளது. இறைவன் மாயபிரான் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி: பொற்கொடி நாச்சியார். தீர்த்தம்: பிரஞ்ஞா சரசு எனப்படும் பூண்சுனைத் தீர்த்தம். விமானம் புருசோத்தம விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. இத்தலம் பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் புதுப்பிக்கப்பட்டது. இவ்விடத்திலிருந்து பீமன் திருமாலைக் குறித்து தவம் புரிந்த்தால் இத்தலம் பீமச் சேத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் கருவறை வட்டவடிவமான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

புராண முக்கியத்துவம்

ஒரு முறை சிபிச்சக்கரவர்த்தியின் மகனான விருஷாதர்பி என்பவன் இப்பகுதியை அரசாண்டு வந்தான். அப்போது அவனுக்கு ஏதோ ஒரு சாபத்தினால் கடுமையான நோய் உண்டானது. அத்துடன் அவனது நாட்டில் கொடிய வறுமையும் ஏற்பட்டது. அச்சமயம் இந்த நாட்டிற்கு சப்தரிஷிகள் வருகை புரிந்தனர். அவர்களிடம் மன்னன், தனக்கும் தன் நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தை போக்கினால் தான், தன்னால் தானம் ஏதும் கொடுக்க முடியும் என கூறினான். தானம் என்ற சொல்லைக்கேட்ட ரிஷிகள் கோபத்துடன்,””மன்னா! உன் போன்ற மன்னர்களிடம் தானம் பெறுவது மிகப்பெரிய பாவமாகும்,”என மறுத்துவிட்டனர். ஆனாலும் மன்னன் ரிஷிகளுக்கு கொடுப்பதற்காக மந்திரிகள் மூலம் தங்கத்தையும், பழங்களையும் அனுப்பி வைத்தான். இதையும் முனிவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். ரிஷிகளின் இந்த செயலால் மன்னன் கோபமடைந்தான். மாபெரும் யாகம் ஒன்றை நடத்தி அதில் தோன்றிய தேவதையை, சப்தரிஷிகளை கொல்வதற்காக அனுப்பி வைத்தான். இதனையறிந்த ரிஷிகள் தங்களை காக்க மகாவிஷ்ணுவை வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற விஷ்ணு, இந்திரனை புலியாக மாறும்படி செய்தார். புலி தேவதையை கொன்றது. இதனால் இத்தலம் “திருப்புலியூர்’ ஆனது என்பர். ரிஷிகள் அனைவரும் பெருமாள் ஒருவரே பரம்பொருள். மற்ற அனைத்தும் மாயை என நினைத்து வழிபாடு செய்தனர். இதனால் பெருமாள் இவர்களுக்கு மாயப்பிரானாக காட்சிதந்தார்.

நம்பிக்கைகள்

தீராத நோய்களெல்லாம் தீர, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதுடன், பெருமாள் மற்றும் தாயாருக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. கேரள மாநிலத்தில் பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ததாக கூறப்படும் பெருமாள் கோயில்களில் இத்தலம் பீமன் பிரதிஷ்டை செய்தது. இங்குள்ள மிகப்பெரிய “கதாயுதம்’ பீமன் உபயோகித்ததாக கூறுவர். பீமனைப்போன்றே கோயிலும் அகன்று விரிந்து பரந்த கட்டுமான அமைப்பை கொண்டுள்ளது. இங்குள்ள கொடிமரம் மற்ற கோயிலை விட மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்மாழ்வார் காலத்தில் இப்பகுதியில் ஒரு பெரிய நகரம் இருந்ததாக அவரது பாடலில் அறிய முடிகிறது. பண்டைத்தமிழகத்தில் 12 உட்பிரிவுகள் இருந்ததாக தொல்காப்பியம் கூறுகிறது. அதில் ஒரு பிரிவு குட்டநாடு. இத்தலத்தை இப்பகுதி மக்கள் “குட்டநாடு திருப்புலியூர்’ என்று அழைக்கின்றனர். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருளுகிறார். இவரது சன்னதிக்கு மேல் உள்ள விமானம் புருஷஸுக்த விமானம் எனப்படுகிறது. இத்தல பெருமாளை சப்த ரிஷிகள் வழிபாடு செய்துள்ளனர்.

திருவிழாக்கள்

மார்கழி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றி, பத்தாம் நாள் ஆறாட்டு நடைபெறுகிறது. தை மாதம் முதல் தேதியில் காவடியாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்புலியூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கணூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கொச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top