Thursday Jul 04, 2024

திருப்புங்கூர் சிவலோகநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில், திருப்புங்கூர் – 609 112. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 9486717634

இறைவன்

இறைவன்: சிவலோகமுடைய நாயனார், சிவலோகநாதர் இறைவி: சொக்கநாயகி

அறிமுகம்

திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. நந்தனார் வணங்குவதற்காக இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 20வது தலம் ஆகும். வைத்தீஸ்வரன் கோயில் – திருப்பனந்தாள் சாலையில் 3 கி.மீ. சென்றால் ஒருபுறம் திப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவும் உள்ளது; அதனுள் – அச்சாலையில் 1 கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம். கோயில் வரை வாகனம் செல்லும்.

புராண முக்கியத்துவம்

மேல ஆதனூர் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் நந்தனார் என்பவர். மிகச் சிறந்த சிவபக்தர். இவர் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜப்பெருமானை தரிசிக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் அவரால் உடனடியாக சிதம்பரம் செல்லமுடியவில்லை.அவர் வேலை செய்யும் இடத்திலும் அனுமதி கிடைத்த பாடில்லை. நாளை போகலாம் நாளை போகலாம் என்றே இருந்தார்.அதனால் அவருக்கு திருநாளைப்போவார் என்று கூட பெயர் உண்டு. ஒருநாள் முதலாளி அனுமதி கிடைத்து சிதம்பரம் செல்கையில் திருப்புன்கூர் தலத்திற்கு வருகிறார். அப்போது அவர் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது. கோயில் வாசலில் இருந்தபடியே எட்டி எட்டி உள்ளே பார்க்கிறார். சுவாமி தெரியவில்லை. முன்னால் இருக்கும் பெரிய நந்தி மறைத்துக் கொண்டிருந்தது. என்ன செய்வேன் இறைவா என்று மனமுருகுகிறார். மலைபோல் நந்தி படுத்திருக்கே என்று பாடுகிறார். துவார பாலகர்கள் மூலவரிடம் நந்தனார் வந்திருக்கிறார் என்று கூற சிவபெருமான் நந்தானாரின் பக்தியை மெச்சி தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நந்தியை சற்றே விலகி இருக்குமாறு பணித்தார். இறைவன் சொல்படி நந்தி விலக இறைவன் நந்தனாருக்கு காட்சி தந்தார். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவதலம் இது.

நம்பிக்கைகள்

நாக தோசம், பூர்வ ஜென்ம பாவ தோசம் ஆகியவை உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தங்கள் தோசங்கள் நிவர்த்தி ஆகும். இத்தலத்தில் புற்று வடிவாய் வீற்றிருக்கும் மூலவர் சிவலோக நாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு,தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

சிறப்பு அம்சங்கள்

மூலவர்: புங்க மரம் நிறைந்த காட்டுப்பகுதியில் இருந்ததால் இந்த கோயிலுக்கு புங்கூர்கோயில் என்று பெயர் வந்தது. புங்க மரக்காட்டுப் பகுதியில் இறைவன் புற்று வடிவமாக உள்ளார். சிறிய அளவில் உள்ளார். இத்தலத்தில் முதலில் தோன்றியது புற்று வடிவமான லிங்கமே.பின் வந்தது நந்தி. இவை இரண்டும்தான் இந்த ஆலயத்திற்கு பெருமையும் புகழும் சேர்த்தன. புற்று வடிவமாக மூலவர் இருப்பதால் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மாலை 8.30 மணிக்கு குவளை எடுத்துவிட்டு புனுகு சட்டம் சாத்தி வழிபடுகிறார்கள். சுவாமியை திருக்குவளை சாத்தியுள்ள நிலையில்தான் தினசரி பக்தர்களால் காணமுடியும். பஞ்ச லிங்கங்கள்: சுவாமிக்கும் அம்பாளுக்கும் அழகில் யார் சிறந்தவர் என்ற போட்டி வந்து விடுகிறது.போட்டி வரும்போது பூலோகத்தில் ஒரு தர்ப்பை புல்லை எடுத்து மூன்று முடிச்சு போட்டு கீழே போடுகிறேன். அது எங்கு எந்த இடத்தில் கீழே விழுகிறதோ அங்கு அழகில் சிறந்தவள் என்று ஒப்புக்கொள்கிறேன் என்று சுவாமி சொல்ல அதற்கு அம்பாள் சம்மதிக்கிறாள். அதுபடி சுவாமி தர்ப்பையை கீழே போட அது வந்து விழுந்து பஞ்சலிங்கமாக ஆகிவிடுகிறது. அந்த பஞ்ச லிங்கங்கள் இங்கு உள்ளது. அதன் மகிமை என்னவென்றால் திருமண வரம், நாகதோச நிவர்த்தி இவைகளைத் தரக்கூடியதாக பக்தர்களால் வணங்கப்படுகிறது. நந்தனார் வரலாற்றுக்கு சொந்தமான பெருமை மிகு சிவ தலம்.நந்தனாருக்காக சிவபெருமான் நந்தியை விலகிய இருக்கச் சொன்ன தலம். எல்லாக் கோயில்களிலும் நந்திக்கு நாக்கு இருக்கும். ஆனால் இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு இருக்காது. துவார பாலகர்கள் எல்லாக் கோயில்களிலும் நேராக இருப்பர். ஆனால் இங்கு தலை சாய்த்து இருப்பர்.சுவாமியிடம் தரிசிக்க நந்தனார் என்ற பக்தன் வந்துள்ளார் என்று கூறியதால் இவ்வாறு அமைந்துள்ளளது. குளம் வெட்டிய பிள்ளையார் என்பவர் இங்கு பிரசித்தம்.நந்தனாருக்காக அவர் சிவபெருமானை தரிசிக்கும் முன் குளித்து விட்டு வர வசதியாக இந்த பிள்ளையார் ஒரே இரவில் பூதங்களை கொண்டு குளம் வெட்டினார் என்பது வரலாறு.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம் – 10 நாட்கள் திருவிழா – பிரம்மோற்சவம் – இத்தலத்தில் மிகச்சிறப்பாக நடக்கும் இந்த திருவிழாவில் பத்து நாட்களும் சுவாமி வீதியுலா வரும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்புங்கூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top