Wednesday Dec 25, 2024

திருப்பரமேஸ்வர விண்ணகரம் வைகுண்ட பெருமாள் சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு வைகுண்ட பெருமாள் சுவாமி திருக்கோயில், பரமேஸ்வர விண்ணகரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 – 2723 5273.

இறைவன்

இறைவன்: பரமபதநாதன், வைகுண்டநாதன் இறைவி: வைகுந்த வள்ளி

அறிமுகம்

திருப்பரமேச்சுர விண்ணகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.பரமபதநாதன், மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி வைகுந்த வல்லி. இத்தலத்தின் தீர்த்தம் ஐரம்மத தீர்த்தம். விமானம் முகுந்த விமானம் என்ற வைகையைச் சேர்ந்தது.

புராண முக்கியத்துவம்

விதர்ப்ப தேசம் எனும் இப்பகுதியை விரோச மன்னன் ஆட்சி செய்து வந்தான். இம்மன்னன் முற்பிறவியில் பெற்ற சாபத்தின் பலனால் புத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டு குழந்தையின்றி இருந்தான். சிவனின் தீவிர பக்தனான மன்னன், காஞ்சிபுரத்தில் குடிகொண்டிருக்கும் கைலாசநாதரை எண்ணி யாகம் செய்து அவரை வழிபட்டான். மன்னனுக்கு அருள் செய்த சிவன், மகாவிஷ்ணுவின் துவார பாலகர்களாக இருந்த பல்லவன், வில்லவன் ஆகிய இருவரையும் மகனாக பிறக்கும்படி செய்தார். விஷ்ணுவை காக்கும் பணியில் இருந்த இவர்கள் இளவரசர்களாக பிறந்துவிட்டாலும், அவர்மீது கொண்டிருந்த பக்தி மட்டும் குறையாமல் இருந்தனர். நாட்டு மக்களின் நன்மைக்காக விரதங்களைக் கடைப்பிடித்த இவ்விருவரும் விஷ்ணுவை வேண்டி இத்தலத்தில் ஒரு யாகம் செய்தனர். இவர்களது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, ஸ்ரீவைகுண்டநாதனாக காட்சி தந்தார்.

நம்பிக்கைகள்

இங்கு வேண்டிக்கொண்டால் பாவங்கள் நீங்கி, வைகுண்ட பதவி அடையலாம், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

ஒருமுறை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியர்களும் ஒன்றாக பூலோகத்திற்கு வந்து தவம் செய்தனர். அவர்களது தவத்திற்கு அத்திரி, பிருகு, காசிபன், கவுண்டில்யன், திரியோரிஷேயன், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள் உதவி செய்தனர். மூன்று தேவியர்களையும் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்ல சிவன், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் பூலோகம் வந்தனர். ரிஷிகளின் தவ வலிமையால் தேவியர்களை நெருங்க முடியாத மூவரும், ஒரு கந்தர்வ கன்னியை அனுப்பினர். அவளை கண்ட பரத்வாஜர் காமுற, ஒரு குழந்தை பிறந்தது. வேடுவ வடிவமெடுத்த மகாவிஷ்ணு, அக்குழந்தைக்கு “பரமேச்சுர வர்மன்’ என பெயரிட்டு வளர்த்தார். பிறப்பிலேயே திருமால் பக்தனாக இருந்த பரமேச்சுரனுக்கு ஆய கலைகளையும் கற்றுக்கொடுத்தார். கலைகள் அனைத்தையும் கற்று முடிப்பதற்குள் அவனுக்கு இறுதி காலமும் நெருங்கிவிட்டது. அவனது ஆயுளை அதிகரிக்க விரும்பிய விஷ்ணு ஒரு சூசகம் செய்தார். எமன் வரும் நேரம் பார்த்து வடக்கு பக்கம் தலைவைத்து படுத்துக் கொண்டார். பொதுவாக வடக்கே தலைவைத்து படுத்தால் ஆயுள் குறையும் என்று சொல்வர். மனிதர்களுக்கே இந்த விதி இருக்கும்போது உலகை காக்கும் விஷ்ணு இவ்வாறு படுத்திருக்கிறார் என்றால் என்ன ஆகும்?. அவரது நிலையைக் கண்ட எமன் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என எண்ணி அவரருகே வந்து எழுந்திருக்கும்படி வேண்டினான். அவரோ மறுத்தார். காரணம் புரியாமல் அவன் விழித்தபோது, தன் பக்தனது ஆயுளை நீட்டித்தால், தான் எழுந்திருப்பதாககூறினார். பக்தனுக்கு இரங்கும் விஷ்ணுவின் கோரிக்கையை ஏற்ற எமன், பரமேச்சுரனின் உயிரை எடுக்காமல் தீர்க்காயுள் கொடுத்து சென்றுவிட்டான். இதைக்கண்ட பரமேச்சுரன் தந்தையாக இருந்த வேடுவரை யார் என கேட்க, அவர் மகாவிஷ்ணுவாக காட்சி கொடுத்தார். மகிழ்ந்த அவன், இவ்விடத்தில் அவரது மூன்று கோலங்களையும் ஒவ்வொரு நிலையில் வைத்து மும்மாடக்கோயிலாக கட்டினான். இப்பரமேச்சுர வர்மன்தான் பல்லவ வம்சத்தின் துவக்கமாக இருந்து ஆட்சி செய்தார் என்றொரு வரலாறும் கூறுகின்றனர். மன்னனுக்கு மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது, “”பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரமதுவே” என அனைத்து பதிகங்களிலும் பல்லவ மன்னனின் பெருமைகளை சேர்த்து பாடியுள்ளார். மேலும், பல்லவர்களின் போர்புரியும் திறனை குறிப்பிடும்போது அவர்கள் ஒலிக்கும் பறையானது விண் அதிரும்படி இருக்கும் என குறிப்பிட்டிருக்கிறார். இதனாலேயே இத்தலத்திற்கு “பரமேச்சுர விண்ணகரம்’ என்ற பெயர் வந்தது என்கின்றனர். திவ்ய தேசங்களில் மன்னனையும் சேர்த்து இத்தலத்தில் மங்களாசாசனம் செய்யப்பட்டிருப்பதால் பல்லவ மன்னனுக்கு விஷ்ணு அருளியதை உறுதிப்படுத்துகின்றனர்.

திருவிழாக்கள்

வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், வைகுண்ட ஏகாதசி.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top