திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி
அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை,-612 602. நாச்சியார் கோவில் போஸ்ட், கும்பகோணம் தாலுகா தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-244 8138, 94436 50826.
இறைவன்
இறைவன்: சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர், இறைவி: மங்களாம்பிகை
அறிமுகம்
திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோயில் (பேணுபெருந்துறை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் கும்பகோணம் – நாச்சியார்கோவில் – எரவாஞ்சேரி – பூந்தோட்டம் சாலையில் நாச்சியார்கோவிலை அடுத்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கரிகாலசோழன் கால கற்றளி (கல்வெட்டு) திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் வேறு. கொங்குநாட்டில் ஈரோடு பக்கத்தில் பெருந்துறை வேறு. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 127 வது தேவாரத்தலம் ஆகும்.
புராண முக்கியத்துவம்
ஒரு முறை முருகப்பெருமான், படைப்பின் நாயகனான பிரம்மனிடம் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் கேட்டார். பிரம்மா அதன் பதில் தெரியாமல் விழித்தார். அர்த்தம் தெரிந்த முருகன், பிரம்மனை திட்டியதோடு சிறையிலும் அடைத்து விட்டார். படைப்புத்தொழில் பாதித்தது. சிவன் இதை கண்டித்தார். அதற்கு முருகன், ஓம் எனும் அர்த்தம் தெரிந்து கொண்டு பின் பிரம்மா படைப்புத்தொழிலை ஆரம்பிக்கட்டும் என்றார். முதலில் எனக்கு அர்த்தம் கூறு என்றார் சிவன். சிவன் மண்டியிட்டு, வாய் பொத்தி நிற்க, அவரது காதில் பிரணவ மந்திரத்தின் பொருளை கூறினார் முருகன். தந்தைக்கே உபதேசம் செய்த இந்த நிகழ்ச்சி சுவாமி மலையில் நடந்தது. பிரம்மனை சிறையிலடைத்ததும், சிவனுக்கு உபதேசம் செய்துவிட்டதும் முருகனுக்கு அகங்காரத்தை ஏற்படுத்தியது. இதனால் கோபம் கொண்ட சிவன் முருகனை ஊமையாக்கிவிட்டார். வருந்திய முருகன், தனக்கு பேச்சு கிடைப்பதற்காக திருப்பந்துறையில் சிவலிங்கம் அமைத்து, பூஜை செய்து தவத்தில் ஈடுபட்டார். முருகனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பேசும் திறனை கொடுத்தருளினார். இதனால் இத்தல இறைவன் பிரணவேஸ்வரர் ஆனார்.
நம்பிக்கைகள்
வாய்பேசமுடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் கோயில் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி, முருகனுக்கு 45 நாட்கள் தேனபிஷேகம் செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்
இங்கு முருகன் தான் சிறப்புக்குரியவர். சுவாமி சன்னதியின் முன்பு தண்டாயுதபாணி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவர் சின்முத்திரையுடன் கண்மூடி நின்ற நிலையில் தியான கோலத்தில், தலையில் குடுமியுடன் நிற்கிறார். காது நீளமாக வளர்ந்துள்ளது. சுவாமி கோபுர விமானத்தில் அர்த்தநாரீஸ்வர தெட்சிணாமூர்த்தியும், வீணா தெட்சிணாமூர்த்தியும் உள்ளனர். இரட்டை விநாயகர்: கோயிலின் வாசலில் குக விநாயகரும், சாட்சி விநாயகரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். முருகன் சுவாமிமலையிலிருந்து இத்தலத்திற்கு தவமிருக்க வந்தபோது, பாதுகாப்பிற்காக விநாயகர் இரட்டை வடிவெடுத்து வந்ததாகவும், பின் இங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறுவர்.
திருவிழாக்கள்
தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை
காலம்
1000 -2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி