Wednesday Dec 25, 2024

திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில், ஆந்திரப் பிரதேசம்

முகவரி

திருவேங்கடம் (திருப்பதி, திருமலை), சித்தூர், ஆந்திரப் பிரதேசம்

இறைவன்

இறைவன்: திருவேங்கடமுடையான், ஸ்ரீனிவாசன், வெங்கடாஜலபதி, பாலாஜி இறைவி: பத்மாவதி தையர்

அறிமுகம்

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அல்லது திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் மூலவர் வெங்கடாசலபதி என்றும் வேங்கடன் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் பத்மாவதி அம்மையார். வெங்கடாத்ரி மலை 3200 அடி உயரமும், 10.33 சதுர மைல்கள் கொண்டதாகும். இத்தலத்தில் லட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. முடி செலுத்துவது பக்தர்களின் வேண்டுதல்களில் பிரதானமாக இருக்கிறது. இத்தலம் இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட கோயிலாக உள்ளது.

புராண முக்கியத்துவம்

பிருகு போன்ற முனிவர்கள் யாகம் செய்தார்கள். அந்த யாகத்தின் பலனை சாந்தமான மூர்த்தியொருவருக்கே அளிக்க வேண்டுமென எண்ணி, மும்மூர்த்திகளில் திருமாலின் இருப்பிடத்திற்கு சென்றார். பிருகு முனிவரின் வருகையை அறியாது உறங்கிக் கொண்டிருந்த திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார். அதனால் திருமாலின் இதயத்தில் இருந்த திருமகள் கோபம் கொண்டு அவரிடமிருந்து சென்றார். திருமால் பூமியில் திருமகளைத் தேடி வேங்கட மலையில் ஓரிடத்தில் தவமிருந்தார். அவரைச் சுற்றி புற்று உருவானது. அப்புற்றில் தவமிருந்த திருமாலின் மீது புற்றினை உடைக்க வீசப்பட்ட கோடாறியால் திருமாலின் தலையிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. திருமால் தவம் களைந்து வகுளாதேவி ஆசிரமம் சென்றார். அங்கு சீனிவாசன் என வகுளாதேவி பெயரிட்டு அன்புடன் உபசரித்தார். அவர்களின் ஆசிரமம் அருகே இருக்கும் சந்திரிகிரி நாட்டினை ஆகாசராஜன் என்பவர் ஆண்டு வந்தார். அவருடைய மகளான பத்மாவதிக்கு சீனிவாசனை மணம் செய்விக்க வகுளாதேவி சென்றார். இருவருடைய திருமணமும் மிகச் சிறப்பாக நடந்தேற சீனிவாசன், குபேரனிடம் கடன் வாங்கினார். திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. வடமொழி சொல்லான பதி என்பதற்கு கணவன் (தலைவன்) என்று பொருளுண்டு, தமிழ் சொல்லான திரு என்பதற்கு புண்ணியம், தெய்வத்தன்மைவாய்ந்த, மேன்மைமிக்க என பல பொருள்கள் உண்டு. திருப்படி என்பதே மருவி திருப்பதி ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது. திருமலை ஏழு மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. (இது தெலுங்கில் ஏடு-கொண்டலு என்றும் தமிழில் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது. ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. இது ஆதிசேசனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயர் உள்ளது. சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும். வெங்கடாத்ரி மலை 3200 அடி உயரமும், 10.33 சதுர மைல்கள் கொண்டதாகும்.

சிறப்பு அம்சங்கள்

உலகிலேயே பழைமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள் தான். திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை கி.மு.400-100 இல் எழுதப்பட்ட தமிழ் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன. இந்த மலைகளை பண்டைய தமிழகத்தின் வடபுறத்து எல்லையாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெங்கடேஸ்வரா ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல பேரரசுகளால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. முதன்முதலில் இக்கோவில் கருணாகரத் தொண்டைமான் என்ற பல்லவ மன்னரால் ஆக்கம் பெற்றது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பல்லவர்கள், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை சோழர்கள், கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது.விசஜநகரப் பேரரசின் மிகப்பெரிய மன்னரான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், இந்த கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்தக் கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். திருப்பதியில் இருந்து சில கி.மீ.கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது. கலியுக வைகுண்டம் வைணவம் பெரிதாக பின்பற்றப்பட்ட கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் திருப்பதி, ஆழ்வார்களால்(வைணவ முனிவர்கள்) கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் வெங்கடேஸ்வரர் மீது அவர்கள் இயற்றிய பாடல்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் பெயர் போனவர்கள். வைணவ சம்பிரதாயத்தில்திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி ஆலயம். பதினோராம் நூற்றாண்டில் இந்தக் கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோவில், அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவை இசுலாமியர்களால் சூறையாடப்பட்டபோது தென்னிந்தியாவில் தப்பி இருந்த இடம் திருப்பதி மட்டும்தான். இந்த இசுலாமிய பிரவேசங்களின் பொழுது திருவரங்கத்தில் இருந்த திருவரங்கர் திரு உருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் திருப்பதியில் இருக்கிறது. இசுலாமியர்களிடமிருந்து திருமலை கோயில் தப்பியதற்கு சுவாரசியமான வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. அந்த முகலாயப்படையினர் மலையின்மேல் என்ன கோயில் இருக்கிறது என்று கேட்டபோது அவர்களின் நோக்கத்தையும் பழக்க வழக்கங்களையும் நன்கறிந்த உள்ளூர் மக்கள் பன்றிக் கடவுளின் கோயில் என்றனராம். மக்கள் குறிப்பிட்டது வராஹப் பெருமாளின் திருக்கோயிலை. இந்தப் பெருமாளை தரிசித்தப்பின்னர்தான் ஏழுமலையானை தரிசிக்கவேண்டும் என்கிற சம்பிரதாயம் இருக்கிறது. பன்றிகளின் மீது முகலாயர்களுக்கு இருக்கும் வெறுப்பால் அவர்கள் திருமலைக்கு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டனர் என்று சொல்லப்படுகிறது.

திருவிழாக்கள்

திருப்பதி பிரம்மோற்சவம் புகழ் பெற்ற கோவில் திருவிழாவாகும். பங்குனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சில தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்கின்றன. திருமலைக் கோவிலில் தினமும் அதிகாலையில் ‘ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்’ (திருப்பள்ளி எழுச்சி) ஒலிபரப்பினாலும், மார்கழி மாதத்தில் மட்டும் தமிழ் திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்களை ஒலிபரப்புகிறார்கள். வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி, புரட்டாசி மாத பிரமோத்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்சக்கணக்கில் பக்தர்கள் குவிகின்றனர். ரத சப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் வெங்கடேஸ்வரரின் திருஉருவச் சிலை வீதி வீதியாக தேரில் எடுத்து செல்லப் படுகிறது.

காலம்

2000 – 3000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

திருமலை திருப்பதி தேவஸ்தானம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்பதி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருப்பதி

அருகிலுள்ள விமான நிலையம்

திருப்பதி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top