Wednesday Dec 18, 2024

திருபள்ளியின்முக்கூடல் திருநேத்திரநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல், கேக்கரை -610 002. திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 244 714, +91- 4366 -98658 44677

இறைவன்

இறைவன்: முக்கோணநாதர், திருநேத்திரநாதர் இறைவி: அஞ்சாட்சி ( மயிமேவும் கண்ணி), அஞ்சனாட்சி

அறிமுகம்

திருப்பள்ளிமுக்கூடல் முக்கோணநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 86ஆவது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஜடாயு பேறு பெற்ற திருத்தலம். எனவே குருவி ராமேசுவரம் என்றும் வழங்கப்படுகிறது. அம்பாள், தபோவதனி என்ற அரசியாரின் குழந்தையாகத் தோன்றி வளர, சிவபெருமான் வேதியராக வந்து திருமணம் புரிந்த திருத்தலமாகும். இத்தலத்தில் மூர்க்க மகரிஷி வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.

புராண முக்கியத்துவம்

ஒரு முறை காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து முக்தி அடைவதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது. இதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஜடாயுவுக்கு தரிசனம் தந்து,””ராவணன் சீதையை தூக்கி செல்லும் போது நீ அதை தடுப்பாய். இதனால் சினம் கொண்ட ராவணன் உனது இறக்கையை வெட்டி விடுவான். நீ வேதனையால் துடித்துகொண்டிருக்கும் போது ராமபிரான் வருவார். நீ அவரிடம் ராவணன் சீதையை இந்த வழியாக தூக்கி சென்றான் என்ற விஷயத்தை தெரிவிப்பாய். அதைக்கேட்ட ராமர் மகிழ்ச்சியடைவார். நீ அவரது பாதத்தில் விழுந்து முக்தி பெறுவாய்,”என கூறினார். அதற்கு ஜடாயு,””இறைவா! நான் காசி ராமேஸ்வரம் தரிசனம் கேட்டேன். ஆனால் எனது சிறகை ராவணன் வெட்டி விடுவான் என்று கூறுகிறீர்கள். நான் எப்படி இப்புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது,”என கேட்டது. அதற்கு சிவன்,””நீ ஒரு சேது சமுத்திரத்தில் நீராட ஆசைப்பட்டாய். ஆனால் இத்தலத்தில் உள்ள குளத்தில் நீராடினால், 16 (சோடஷ) சேது சமுத்திர தீர்த்தத்தில் நீராடிய பலன் உனக்கு கிடைக்கும்,”என கூறினார். கோயில் எதிரில் உள்ள இக்குளம் பிருங்கி மகரிஷி காலத்தில் பிள்ளையாரால் வெட்டப்பட்டது என்பர். இத்தீர்த்தம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு இணையானதால் முக்கூடல் தீர்த்தம் என வழங்கப்படுகிறது.ஒரு முறை சோழமன்னன் ஒருவன் வேட்டையாட குதிரை மீதேறி செல்லும் போது இவ்வூர் வழியாக சென்றான். இரவு நேரமாகி விட்டதால் இங்கு தங்க நேர்ந்தது. மன்னன் உணவருந்தும் போது சிவதரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டான். இதையறிந்த குதிரைக்காரன் குதிரைக்கு வைத்திருந்த கொள்ளுப்பையை சிவலிங்கமாக அலங்கரித்து, அதைக்காட்டி மன்னனை உணவருந்த செய்தான். பின் அப்பையை எடுக்க முயன்றபோது அதுவே சிவலிங்கமாக மாறியது என்றும் இத்தல வரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்

12 அமாவாசை இத்தல குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை

சிறப்பு அம்சங்கள்

இத்தலத்து அம்மன் மயிமேவும்கண்ணி எனப்படுகிறார். தபோவதனி என்னும் அரசி குழந்தை பாக்கியம் வேண்டி இத்தலத்து அம்மனை வழிபாடு செய்தாள். இவளது வேண்டுதலை ஏற்ற அம்மன் தாமரை மலரில் அழகிய குழந்தையாக தோன்றினாள். அப்பெண் மணப்பருவம் வந்தபோது இறைவன் வேதியராக வந்து அவளை மணம் புரிந்தார் என கூறுப்படுகிறது. இங்குள்ள குளத்தின் உள்ளே 16 கிணறுகள் உள்ளன. இதில் நீராடினால் மகாமக தீர்த்த்தில் நீராடிய பலன் கிடைக்கும். 12 அமாவாசை இக்குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால் புத்திர தோஷம், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை. ராமர் தசரத சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் செய்த தலங்களில் இதுவும் ஒன்று. முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் கயா கரையில் செய்த பலன் கிடைக்கும் என்பதால் இத்தலம் “கேக்கரை’ என்றும் அழைக்கப்படுகிறது.

திருவிழாக்கள்

தை, ஆடி, மகாளய அமாவாசை சிறப்பு. சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்பள்ளி முக்கூடல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top