Saturday Jan 18, 2025

திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி

அருள்மிகு பக்தஜனேசுவரர் திருக்கோயில், திருநாவலூர் – 607 204, விழுப்புரம் மாவட்டம் போன்: +91- 94861 50804, 94433 82945, 04149-224 391.

இறைவன்

இறைவன்: பக்தஜனேசுவரர், திருநாவலேஸ்வரர் இறைவி: மனோன்மணி (நாவலாம்பிகை, சுந்தர நாயகி,

அறிமுகம்

திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலமாகும். இத்தலம் திருநாமநல்லூர் என்றழைக்கப்படுகிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். மேலும் இது சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த தலமும் ஆகும். இது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரின் திருப்புகழும் பாடப்பெற்ற தலமாகும். இது சுந்தரர் (சுந்தரமூர்த்தி நாயனார்) தோன்றிய தலமாகும். சுக்கிரன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதீகம்). இத்தலத்து மூர்த்தி சுயம்பு மூர்த்தி.சடையநாயனார், இசைஞானியார் ஆகியோரின் முக்தித்தலம். அம்பிகை, திருமால், கருடன் ஆகியோர் வழிபட்ட தலம்.இங்கு நரசிங்கமுனையரையர் வழிபட்ட லிங்கமும் உள்ளது. வரதராஜப் பெருமாள் மற்றும் இராமபிரான் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன.

புராண முக்கியத்துவம்

அமிர்தத்தை கடைந்த காலத்தில் வாசுகி என்ற நாகத்தின் நஞ்சை இறைவன் சாப்பிட்டு நஞ்சு விந்தாக மாறி பூமியில் விழுந்து நாவல் மரங்களாக முளைக்கப்பெற்றது. ஜம்புவனம் என்ற பெயரில் இந்த இடத்தில் இறைவன் தானாக தோன்றப் பெற்று 4 யுகங்களுக்கு முன்பே இங்கு இறைவன் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கர்ப்ப கிரகம் மட்டும் முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பின்பு சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களால் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது.இது மிகப் பழமையான கோயில் ஆகும்.ஜம்புநாதேசுவரர் என்று வழங்கி வந்த காலங்களில் சுந்தரர் ஜம்பு என்ற வடமொழி பெயரை நாவல் என்று அழைத்து திருநாவலீசன் என்று ஈசனையும் திருநாம நல்லூர் என்று ஊர்ப்பெயரையும் பாடலில் அழைத்துள்ளார். இறைவனையே தோழனாக பழகிய சுந்தரர் பிறந்த இத்திருத்தலம் ஒவ்வொரு சைவ சமய அன்பர்களும் சென்று தரிசிக்க வேண்டிய தலம். ஒரு முறை சுக்கிர பகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பல காலம் பூஜித்து வந்தார். இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவன், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் “சஞ்சீவினி’ மந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள் சுக்கிரனை தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தேவ, அசுர போர் ஆரம்பமானது. தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர். ஆனால், இறந்த அசுரர்களை எல்லாம் சுக்கிரன் தன் “சஞ்சீவினி’ மந்திரத்தால் உயிர் பிழைக்க செய்தார். பயந்து போன தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவன் சுக்கிரனை அழைத்து, அவரை விழுங்கி விட்டார். சிவனின் வயிற்றில் பல காலம் யோகத்தில் இருந்தார் சுக்கிரன். பின்னர் அவரை வெளியே வரவழைத்து, நவக்கிரகத்தில் பதவியைக் கொடுத்து அனைவரும் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார். பின்னர் சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள், இரண்டு புதல்வியர் பிறந்தனர். அவர் பூலோகம் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். இந்த இடமே இன்றைய திருநாவலூர் ஆகும். இங்கு வருவோருக்கு சுக்கிர கிரகம் தொடர்பான தோஷம் விலகி, செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

நம்பிக்கைகள்

சைவ சமயத்தின்பால் அதீத பற்றும் அக்கறையும் கொண்ட அன்பர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய அருமையான சிறப்பு பெற்ற கோயில் இது. சுக்ரனுக்கு வக்ரம் தோசம் பரிகாரம் பெற்ற தலம். சுக்ர தோசம்,திருமண வரம், வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெற விரும்புவோர் அவசியம் சென்று வழிபட வேண்டிய தலம். இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும் , வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும்.

சிறப்பு அம்சங்கள்

பிரம்மா, விஷ்ணு . சண்டிகேசுவரர், சப்தரிஷிகள், கருடன், சுந்தரர்,சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையர் வழிபட்ட தலம். ஈசனை மூலையில் நவகிரகங்களுக்கு அருகிலேயே சுக்கிரனாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்மார்த்த பூஜை செய்த லிங்கமான பார்க்கவீசுவரர் லிங்கம் உள்ளது. பார்வதிதேவி இங்கு எழுந்தருளி சிவனை பூஜித்து, அவர் மனம் மகிழ மணம் புரிந்தார். இரணியனை கொல்வதற்காக மகாவிஷ்ணு இங்குள்ள சிவனை பூஜித்து நரசிம்ம அவதாரம் எடுக்கும் ஆற்றலை பெற்றார். சிவப்பிரியர் என்பவர் சிவனை பூஜித்து சண்டிகேஸ்வரர் பதவி பெற்றதும், ஆதிசேஷன் உமிழ்ந்த நஞ்சினால் கருநிறமடைந்த கருடன், சிவனை பூஜித்து விஷம் நீங்கியதுமான தலம். கிருதயுகத்தில் விஷ்ணு வழிபட்ட லிங்கம், திரேதாயுகத்தில் சண்டிகேஸ்வரர் வழிபட்ட லிங்கம், துவாபரயுகத்தில் பிரம்மா வழிபட்ட லிங்கம், கலி யுகத்தில் சுந்தரர் வழிபட்ட லிங்கம் இங்குள்ளது. அருணகிரிநாதர் இத்தல முருகனை பாடியுள்ளார். சுக்கிரன் வழிபட்ட லிங்கம் : சுக்கிரன் இத்தலத்தில் ஒரு லிங்கத்தை தாபித்து அதற்கு முறைப்படி பூஜைகள் நடத்தி இறையருள் பெற்றார்.சுக்கிரன் நிறுவிய லிங்கம் நவகிரகங்களுக்கருகே அமைந்துள்ளது. வெள்ளிக் கிழமைகளில் இந்த லிங்கத்துக்கு விசேச வழிபாடுகள் நடக்கின்றன. நவகிரகங்களுள் சூரியன் மேற்கு நோக்கியவாறு இங்கு காட்சியளிக்கிறார். பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன. இத்தலத்தின் சிறப்பை பெருமையை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார்.

திருவிழாக்கள்

திருநாவலூர் சிவாலயத்தில் காமிக ஆகமத்திலுள்ள விதிமுறைகளுக்கேற்ப வழிபாடுகள் நடைபெறுகின்றன. சுந்தரர் ஜனன விழா – ஆவணி மாதம் – உத்ர நட்சத்திரம் நாளன்று – 1 நாள் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். சுந்தரரின் குருபூஜை விழா – ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா – 15 நாட்கள்- சித்திரைப் புத்தாண்டு நாளில் பஞ்சமூர்த்திகளுக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் உபயதாரர்களின் உதவியுடன் அபிசேக ஆராதனைகள் நடைபெறும். ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று மனோன்மணியம்மனுக்குச் சிறப்பு வழிபாடும் உற்சவருக்கு ஊஞ்சல் உற்சவமும் நிகழும். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் துர்க்கை , மனோன்மணியம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கைக்கு ராகுகால வழிபாடு நிகழும். இவ்வைபவங்களில் மகளிர் அதிக அளவில் பங்கேற்பர் வெள்ளி கிழமைகளில் சுக்கிரனுக்கும் அவர் தாபித்த லிங்கத்திற்கும் சிறப்பு பூஜைகள் நிகழும். வெண்ணெய் வெண்மை நிறமுடைய நெய், மொச்சை, வெண் பட்டாடை ஆகியவற்றுடன் வழிபாடு சிறப்பாக நடத்தப்படும். வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற ஆடை மஞ்சள் மலர்கள் மஞ்சள் நிறக் கடலை ஆகிய பொருட்களுக்களை ப் படைத்து சிறப்பாக வழிபாடுகள் நடைபெறுகின்றன. தவிர பிரதோச நாட்களின் போதும் ,விசேச நாட்களின் போதும் கோயிலில் பக்தர்கள் நிரம்ப அளவில் வருகின்றனர்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநாவலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top