Thursday Jul 04, 2024

திருத்தேவனார்த் தொகை தெய்வநாயகர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு தெய்வநாயகப்பெருமாள் திருக்கோயில், திருத்தேவனார்த்தொகை, திருநாங்கூர்-609 106 நாகப்பட்டினம் மாவட்டம் போன்: +91- 4364-266 542.

இறைவன்

இறைவன் – தெய்வநாயகன் இறைவி – கடல்மகள் நாச்சியார்

அறிமுகம்

திருத்தேவனார்த் தொகை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. இதனைக் கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர். திருநாங்கூரிலிருந்து சுமார் 1 மைல் தொலைவில் மன்னியாற்றின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. திரு நாங்கூரில் பதினொரு திருப்பதிகளிலும் கோயில் கொண்டுள்ள நாராயணனைச் சேவிக்க தேவர்கள் வந்த போது தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய் அவை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று. இறைவன் – தெய்வநாயகன், மாதவநாயகன் இறைவி – கடல்மகள் நாச்சியார் தீர்த்தம் – சோபன புஷ்கரணி மற்றும் தேவஸபா புஷ்கரணி விமானம் – சோபன விமானம்

புராண முக்கியத்துவம்

துர்வாச முனிவர் வைகுண்டத்தில் தனக்கு கிடைத்த பெருமாளின் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதை ஐராவத யானையின் மீது தூக்கி எறிந்தான். இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், பெருமாள் மார்பில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. அங்கிருந்து கிடைத்த மாலையை அவமதித்து விட்டாய். எனவே லட்சுமியாகிய செல்வம் உன்னை விட்டு வைகுண்டம் செல்லட்டும். உனக்கு தரித்திரம் பிடிக்கட்டும், என்று சாபம் கொடுத்தார். அதிர்ந்து போனான் இந்திரன். ஐராவதம் மறைந்தது. மாலையை பணிவாக ஏற்றதால் அது வைகுண்டம் சென்றது. துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டான் இந்திரன். துர்வாசரும், “இந்திரனே! இறைவனது பிரசாதமும், இறைவனும் ஒன்று தான். இறைவனது பிரசாதப்பொருள்களை அவமதிக்க கூடாது. இதை உனது குரு உனக்கு சொல்லி தரவில்லையா? நீ அவரிடமே சாப விமோசனம் கேள்’, என கூறி சென்று விட்டார். கங்கை கரையில் தவம் செய்து கொண்டிருந்த குரு பிரகஸ்பதியிடம் சென்று சாப விமோசனம் கேட்டான் இந்திரன். அவரோ, நாம் பிறக்கும் போதே நமது முன் ஜென்ம வினைக்கேற்ப பலனை பிரம்மன் தலையில் எழுதி விட்டார். அதை மாற்ற யாராலும் முடியாது. வேண்டுமானால், நீ பிரம்மனிடம் சென்று கேட்டுப்பார் என கூறி அனுப்பி விட்டார். பிரம்மனோ, இது பெருமாள் காரியம், தன்னால் ஒன்றும் செய்ய இயலாது. நீ மகா விஷ்ணுவின் பாதங்களில் சரணடைந்து விடு, என்றார். பெருமாள், இந்திரனே! என் பக்தர்களின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளும் எந்த வீட்டிலும் நானும் என் மனைவியும் தங்க மாட்டோம். நீ, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடல் கடையும் நேரம் வரை காத்திரு. அப்போது உன் சாபம் தீர்வதுடன், எங்களது திருமணத்தையும் காணும் பாக்கியம் பெறுவாய் என கூறி ஆசி வழங்கினார். பாற்கடலை கடையும் காலம் வந்தது. மகாலட்சுமி அதில் தோன்றினாள். மறைந்து போன ஐராவதம் யானையும் வந்தது. இந்திரன் மகாலட்சுமியை பலவாறாக போற்றினான். அவள் ஒரு மாலையை அவனுக்கு வழங்கினாள். அதை தன் கண்ணில் ஒற்றிக்கொண்ட இந்திரன் மீண்டும் தேவேந்திரன் ஆனான்.

நம்பிக்கைகள்

திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்து பெருமாளை ஒரு முறை தரிசித்து, தாயரையும் பிராத்தனை செய்தால் பலன் நிச்சயம் என பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட மகாலட்சுமியை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டார். திரு மகளை, தேவனார் (பெருமாள்) மணமுடிக்கும் காட்சியை காண தேவர்கள் தொகையாக மொத்தமாக வந்ததால் இந்த இடத்திற்கு திருத்தேவனார்த்தொகை என பெயர் ஏற்பட்டது. பெருமாளின் திருமணம் நடந்த ஊராதலால் விமானத்தின் பெயர் சோபன (மங்கள) விமானம் என்று பெயர். கர்ப்பகிரகத்தின் முன்பு விசாலமான மண்டபம் இருக்கிறது. கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனை வசிஷ்டர் தரிசனம் செய்துள்ளார்.

திருவிழாக்கள்

தைமாதத்தில் 11 நாங்கூர் திவ்யதேச கருட சேவையில் இவ்வூர் பெருமானும் பங்கு கொள்வர். சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம். வைகுண்ட ஏகாதசி

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருத்தேவனார்தொகை

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top