Thursday Jul 04, 2024

திருத்தெற்றியம்பலம் செங்கண்மால் ரங்கநாதர் (பள்ளிகொண்ட பெருமாள்) திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு செங்கண்மால் ரங்கநாதர் திருக்கோயில், திருத்தெற்றியம்பலம், திருநாங்கூர் – 609 106. நாகப்பட்டினம் மாவட்டம் போன்: +91- 4364 – 275 689

இறைவன்

இறைவன்: செங்கண்மால்,ரங்கநாதன், இறைவி: செங்கமலவல்லி

அறிமுகம்

திருத்தெற்றியம்பலம் எனப்படும் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூருக்கருகில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. 108 வைணவ திருத் தலங்களில் இத்தலம் ஒன்றிற்கு மட்டுமே அம்பலம் என்னும் சொல் வழங்கப்படுகிறது.[1] திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் பாடல்பெற்றது இக்கோயில். மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார். இறைவன் – நான்கு தோள்களுடன் கிழக்கு நோக்கிய சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கும் செங்கண்மால் ரங்கநாதர், லட்சுமிரங்கர் இறைவி – செங்கமலவல்லி தீர்த்தம் – சூர்ய புஷ்கரணி. விமானம் – வேதவிமானம்

புராண முக்கியத்துவம்

இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை தூக்கி கொண்டு பாதாள உலகத்தில் மறைத்து வைத்து விட்டான். தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவரும் பூமியை காப்பாற்றுவதற்கு வராக அவதாரம் எடுக்க சம்மதித்தார். இதை கேட்டவுடன் மகாலட்சுமி,””பகவானே! நான் ஒரு நொடி கூட உங்களை விட்டு பிரியாமல் தங்களது மார்பில் குடியிருப்பவள். நீங்களோ என்னை விட்டு வராக அவதாரம் எடுக்கபோவதாக கூறுகிறீர்கள். நான் எப்படி தனியாக இருப்பது,”என வருத்தப்பட்டாள். இதே போல் ஆதிசேஷனும், “”பரந்தாமா! நீங்கள் பூமியை காக்க பாதாள உலகம் சென்று விட்டால் என் கதி என்னாவது?” என வருத்தப்பட்டார். இதைக்கேட்ட பெருமாள், “”பயப்படாதீர்கள். எல்லாம் நன்மைக்கு தான். நீங்கள் இருவரும் “பலாசவனம்’ சென்று என்னை தியானம் செய்ய புறப்படுங்கள். அங்கே சிவபெருமானும் வருவார். நான் இரண்யாட்சனை வதம் செய்து விட்டு உங்களுக்கு அனுக்கிரகம் செய்ய அங்கு வந்து விடுகிறேன்,” என்றார். அத்துடன் கலியுகத்தில் இத்தலம் “திருத்தெற்றியம்பலம்’ என அழைக்கப்படும். என் தீவிர பக்தரான ஸ்ரீபாஷ்யகாரர், தீட்சை பெற்ற 108 வைஷ்ணவர்களை அழைத்து என்னை ஆராதனை செய்ய இருக்கிறார். நான் அங்கிருந்து உலகத்தை காத்து ரட்சிக்க போகிறேன். கலியுகம் முழுவதும் அங்கேயே நித்தியவாசம் செய்ய போகிறேன்,” என்றருளினார். வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாள உலகிற்கு சென்று இரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டு அது இருக்க வேண்டிய இடத்தில் மெல்ல சுழல விட்டார். இதையறிந்த மகாலட்சுமியும், ஆதிசேஷனும் பூமிக்கு வந்து மகாவிஷ்ணு குறித்து தவம் செய்ய ஆரம்பித்தனர். மகாவிஷ்ணு தான் கொடுத்த வாக்குப்படி பலாசவனம் (திருத்தெற்றியம்பலம்) சென்று அங்கிருந்த சிவன், மகாலட்சுமி, ஆதிசேஷனுக்கு அருள்புரிந்தார். பின் அங்கேயே போர்புரிந்த களைப்பு தீர, சிவந்திருந்த அழகான கண்களுடன் பள்ளி கொண்டார். இதனால் இத்தல பெருமாள் “செங்கண்மால் ரங்கநாதர்’ என்றழைக்கப்படுகிறார்.

நம்பிக்கைகள்

இத்தல பெருமாளை வணங்கினால் அரசாளும் வல்லமை கிடைக்கும் என்பதும், அரசு பதவிகள் சம்பந்தப்பட்ட பிரார்த்தனைகள் உடனுக்குடன் நிறைவேறுகிறது என்பதும் நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலம் மட்டும் தான் “அம்பலம்’ என அழைக்கப்படுகிறது. திருநாங்கூரில் “பள்ளிகொண்ட பெருமாள் கோயில்’ என்றால் தான் அனைவருக்கும் தெரியும். திருநாங்கூர் வந்த 11 பெருமாள்களில், இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆவார். இவரை வணங்கினால் ஸ்ரீரங்கம் பெருமாளை வணங்கியதற்கு சமம். கிழக்கு பார்த்த இத்தலத்தில் பெருமாள் ஆதிசேஷன் மீது நான்கு புஜங்களுடன் பள்ளி கொண்ட பெருமாளாக அருள்பாலிக்கிறார். தலையும், வலது கையும் மரக்கால் மேல் வைத்து கொண்டு, இடது கரத்தை இடுப்பின் மீது வைத்து கீழே தொங்கவிட்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவரது தலைப்பக்கம் ஸ்ரீதேவியும், பாதத்தில் பூமாதேவியும் வீற்றிருக்கின்றனர்.

திருவிழாக்கள்

உற்சவங்கள் : திருநாங்கூர் கருட சேவையில் இத்தலத்து பெருமாளும் கலந்துகொள்வார்.

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருத்தெற்றியம்பலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top