Monday Jan 27, 2025

திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி

அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் கோயில், திருத்துறையூர், பண்ருட்டி தாலுகா, கடலூர் – 607 205. போன் +91- 4142 – 248 498, 94448 07393.

இறைவன்

இறைவன்: சிஷ்டகுருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர் இறைவி: சிவலோக நாயகி

அறிமுகம்

திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் கோயில் சுந்தரரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தில் மூலவர் சிஷ்டகுருநாதேஸ்வரர் என்றும் பசுபதீஸ்வரர் என்றும் வழங்கப்பெறுகிறார், தாயாரின் பெயர் சிவலோகநாயகி என்றும் பூங்கோதை என்றும் வழங்கப்பெறுகிறது. இத்தலத்தில் சூர்யபுஷ்கரிணி எனும் தீர்த்தமும், கொன்றை மரம் தலமரமாகவும் உள்ளது. திருத்துறையூர் என்பது இத்தலத்தின் புராணப்பெயராகும்.இங்கு நர்த்தன விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

கயிலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தென்திசைக்கு வந்தார். வழியில் அவர் பல தலங்களில் லிங்கம் பிரதிஷ்டை செய்து சிவன் திருமணத்தை கண்டார். அவர் இத்தலம் வந்தபோது சிவனின் திருமணத்தை காண விரும்பி லிங்கம், அம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இருவரும் அவருக்கு மணக்கோலத்தில் காட்சி தந்தனர். இத்தலத்தில் அகத்தியர் சிவனை மேற்கு நோக்கியும், அம்பாளை வடக்கு நோக்கியும் வைத்து வழிபட்டாராம். அவளது திருமணம் வட திசையில் உள்ள கயிலாய மலையில் நடந்ததால் இவ்வாறு செய்தாராம். இதன் அடிப்படையில் அம்பாள் வாமதேவ முகமாக (வடக்கு பார்த்து) தனிச்சன்னதியில் இருக்கிறாள். அம்பாளை இக்கோலத்தில் காண்பது அபூர்வம். கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி சன்னதிக்கு அருகே சிவன், சுந்தரருக்கு காட்சி தந்த சிற்பம் உள்ளது. பிரகாரத்தில் பைரவர், சூரிய லிங்கம், ராமலிங்கம், பீமலிங்கம், சூரியபகவான், ஆதிகேசவ பக்தவச்சலர், கஜலட்சுமி ஆகியோரும் இருக்கின்றனர். இங்குள்ள நர்த்தன விநாயகர் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். மேற்கு நோக்கி ஸத்யோஜாத மூர்த்தியாக சிவபெருமானும் (அனுக்ரஹ மூர்த்தி), வடக்கு நோக்கி ஞானசக்தி ஸ்வரூபியாக சிவலோக நாயகியும், தெற்கு நோக்கி வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமானும் காட்சியளிக்கின்றனர். சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளன. கோயிலை வலம் வருகையில் விஷ்ணு துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோரையும் தரிசிக்கலாம்.

நம்பிக்கைகள்

குருதலம் என்பதால் இங்கு சிவன், தெட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதனால் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

திருவெண்ணெய் நல்லூரில் சிவனை “பித்தா!’ என்று பாடி வணங்கிய சுந்தரர், இத்தலத்திற்கு வந்தார். அப்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடினார். அப்போது அங்கு ஒரு வயதான தம்பதியர் வந்தனர். அவர்கள் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்தனர். அப்போது சிவன் அவரது கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டார். சுந்தரர் சுற்றிலும் தேடிப்பார்த்தார். ஆனாலும், சிவனை காணமுடியவில்லை. அப்போது முதியவர் அவரிடம், “நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார்,’ என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். சுந்தரர் மேலே பார்த்தபோது சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார். சுந்தரர் அவரிடம் தனக்கு உபதேசம் செய்யும்படி கூறினார். எனவே, சிவன் சுந்தரருக்கு குருவாக இருந்து “தவநெறி’ உபதேசம் செய்தார். எனவே, சிவனுக்கு “தவநெறி ஆளுடையார்’, “சிஷ்டகுருநாதேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். சிவன் இங்கு குருவாக அருள் செய்ததால் வியாழக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடக்கிறது. நந்திக்கொடி பிரதோஷம் இக்கோயிலில் பிரதோஷத்தன்று நந்திக்கு பூஜைகள் செய்யப்படும்போது, அருகில் நந்திக்கொடி கட்டுகின்றனர். சிவ வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்ற நந்திக்கு பிரதோஷத்தின்போது, நந்தியின் படம் அச்சிடப்பட்ட கொடியைக் கட்டி வழிபடும் வழக்கம் முன்பிருந்தது. காலப்போக்கில் இவ்வழக்கம் மறைந்து விட்டது. இலங்கையில் உள்ள சிவாலயங்களில் இந்த வழிபாடு தற்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தலத்தில் நந்திக்கொடி கட்டி பிரதோஷ பூஜைகள் நடப்பது விசேஷம். சிவன் இத்தலத்தில் பெரிய லிங்க வடிவில் இருக்கிறார். ஆவுடை வலது பக்கம் இருக்கிறது. பவுர்ணமி மற்றும் திங்கட்கிழமைதோறும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இந்நேரத்தில் நெய்விளக்கு ஏற்றி, வில்வ இலை அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இங்கு முருகன் ஆறு முகங்களுடன் சுப்பிரமணியராக இருக்கிறார். அருணகிரியார் இவரை, “குருநாதர்’ என்று திருப்புகழில் பாடியிருக்கிறார். இவருக்கு அருகில் ஆதிகேசவர் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்குள்ள சுந்தரர், இடது கையில் செங்கோலை வைத்தபடி காட்சிதருகிறார். இவருக்கு மரியாதை செய்யும் விதமாக தலையில் தலைப்பாகை அணிவித்து அழகு பார்க்கின்றனர். கோயிலுக்கு எதிரே சுந்தரரை முதியர் வடிவில் வந்து சிவன் தடுத்த இடத்தில் “தடுத்தாண்கொண்டீஸ்வரர்’ மற்றும் “அஷ்டபுஜ காளி’க்கு சன்னதிகள் உள்ளன. இச்சன்னதிக்கு அருகில் மெய்க்கண்ட நாயனாரின் சீடரான அருணநந்தி சிவாச்சாரியார் முக்தியடைந்த இடம் இருக்கிறது.

திருவிழாக்கள்

வைகாசி விசாகத்தில் 10 நாள் பிரம்மோற்ஸவம், கந்தசஷ்டி, சிவராத்திரி, அன்னாபிஷேகம். சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், பவுர்ணமி ஆகியவை விசேஷ நாட்கள். தமிழ் வருடப்பிறப்பு, ஆருத்ரா தரிசனம், தை மாதம் ஐந்தாம் நாள் ஆற்றுத் திருநாள், மற்றும் பல உற்ஸவங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பண்ருட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

பண்ருட்டி

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top