Tuesday Jul 02, 2024

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்

முகவரி

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு- 637211. கொடிமாடச் செங்குன்றூர், நாமக்கல் மாவட்டம். போன்: +91-4288-255 925, 93642 29181

இறைவன்

இறைவன்: அர்த்தநாரீஸ்வரர் இறைவி: பாகம்பிரியாள்

அறிமுகம்

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இத்தலத்தின் தீர்த்தம்- தேவதீர்த்தம் தலமரமாக இலுப்பை மரம் உள்ளது.

புராண முக்கியத்துவம்

பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். அவரது அருகில் இருக்கும் உமாதேவியைக் கண்டு கொள்ளமாட்டார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, “”முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர்,” என சாபமிட்டாள். இதையறிந்த சிவன், “நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை’ எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். இடப்பாகத்தில் தான் இதயம் இருக்கிறது. மனைவி என்பவள் இதயத்தில் இருக்க வேண்டியவள் என்பதற்கேற்ப இந்த சம்பவம் நிகழ்ந்தது. இருவரும் இணைந்த வடிவம் “அர்த்தநாரீஸ்வரர்’ எனப்பட்டது. அர்த்தநாரீ என்றால் “இணைந்த வடிவம்’ எனப் பொருள். இந்த வடிவத்துடன் அவர் பூலோகத்திற்கும் வந்து சில தலங்களில் குடிகொண்டார். அதில் ஒன்றே திருச்செங்கோடு.

நம்பிக்கைகள்

கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

செங்கோட்டு மலை: திருச்செங்கோடு என்பதற்கு “அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை’ என்றும், “செங்குத்தான மலை’ என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்து விட்டது. இந்த மலை உருவானதற்கு புராணக்கதை உண்டு. ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது. ஆதிசேஷன் தன் படங்களால் மேரு மலையை அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயு தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்பதே பந்தயம். இதன்படி வாயு வேகமாக வீச, மலையின் முகட்டுப்பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களிலும் விழுந்தன. அதில் ஒன்றே திருச்செங்கோட்டு மலை. ஆதிசேஷ பாம்பு மலையைப் பிடித்த போது, ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் கொட்டி, மலை செந்நிறமானதாலும் இப்பெயர் வந்ததாகச் சொல்வர். இம்மலைக்கு நாககிரி, வாயுமலை என்றும் பெயர்கள் உண்டு. தல சிறப்பு: சிவன் கோயிலில் லிங்கம் இருப்பது மரபு. இங்கே மலையே லிங்கமாக கருதப்படுவதால், மலைக்கு எதிரே பெரிய நந்தி உள்ளது. இம்மலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஆதிகேசவப்பெருமாள், செங்கோட்டு வேலவர் அருளுகின்றனர். ஒற்றுமை விரதம்: இம்மலையை பவுர்ணமி நாளில் வலம் வந்தால் கயிலாயத்தையும் வைகுண்டத்தையும் வலம் வந்த பலன் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ, இக்கோயிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாக சிலை: 60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோயில் படிக்கட்டு அருகில் உள்ளது. நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். நாகத்தின் அருகே அமைந்துள்ள 60 படிக்கட்டுக்களை சத்தியப்படிக்கட்டு என்பர். பல வழக்குகள் இந்த படியில் தீர்க்கப்படுகிறது.

திருவிழாக்கள்

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருச்செங்கோடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாமக்கல்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top