Monday Jan 27, 2025

திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) கஜேந்திர வரதப்பெருமாள் திருக்கோயில்,தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு கஜேந்திர வரதப்பெருமாள் திருக்கோயில்,கபிஸ்தலம்,பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம்-614 205. போன்:0437-4223434 (சேஷாத்ரி பட்டாச்சாரியார்)

இறைவன்

இறைவன்: கஜேந்திரவரதன் இறைவி: ரமாமணிவல்லி

அறிமுகம்

கஜேந்திர வரதப் பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு ஒன்பதாவது திருத்தலம். இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் ஊரில், கும்பகோணம்-திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கஜேந்திர வரதப் பெருமாள். இவர் ஆதிமூலம் என்றும் அழைக்கப்படுகிறார். பெருமாள் இங்கு புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். ரமாமணிவல்லி தாயார். இவருக்குப் பொற்றாமரையாள் என்ற பெயரும் உள்ளது. விமானம் – ககனா க்ருத விமானம். தல விருட்சம் – மகிழம்பூ மரம் தீர்த்தங்கள் – கஜேந்திர புஷ்கரணி தீர்த்தம், கபில தீர்த்தம்.

புராண முக்கியத்துவம்

இந்திராஜும்னன் எனும் மன்னன் மிகச்சிறந்த விஷ்ணுபக்தனாக இருந்தான். சதா சர்வ காலமும் விஷ்ணுசிந்தனையிலேயே இருப்பான். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். ஒரு நாள் அவன் இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணுபூஜை செய்து கொண்டிருந்தான். இது போன்ற நேரங்களில் யாரும் அவனை காண வருவதுமில்லை. இவனும் யாரையும் காண்பதுமில்லை. இப்படி அவன் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில் கோபக்கார துர்வாச முனிவர் அவனைக்காண வந்தார். இவர் வந்து வெகு நேரம் ஆனது. ஆனாலும் மன்னன் தன் பக்திக்குடிலை விட்டு வெளியே வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த துர்வாசர், மன்னன் இருந்த குடிலுக்குள் சென்று அவன் முன்னால் நின்றார். அப்போதும் கூட மன்னன் வந்திருப்பதை அறியாமல் ஆழ்ந்த பக்தியில் மூழ்கியிருந்தான். இதனால் முனிவர் கடும் கோபத்துடன் உரத்த குரலில்,””மன்னா! நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவனாகவும் இருப்பதாலும், நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்,”என சபித்தார். முனிவர் போட்ட கடும் சத்தத்தினால் கண்விழித்த மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும், பாவி விமோசனமும் கேட்டான். இவனது நிலையுணர்ந்த முனிவர் அவன் மீது இரக்கம் கொண்டு, “”நீ யானையாக இருந்தாலும், அப்போதும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய்” என்று கூறினார். அத்துடன்,””ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலை பிடிக்கும். அப்போது நீ “ஆதிமூலமே!’ என மகாவிஷ்ணுவை அழைக்க, அவர் ஓடி வந்து உன்னை காப்பாற்றி, உனக்கு மோட்சமும், சாப விமோசனமும் கிடைக்கும், ”என்றார். ஒரு முறை கூஹு என்னும் அரக்கன் குளத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தண்ணீரிணீல் இருந்து கொண்டு அங்கு வந்து குளிப்போரின் காலைப்பிடித்து இழுத்து துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டிருந்தான். ஒரு முறை அகத்திய மாமுனிவர் சிவனின் கட்டளைப்படி தென் திசை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சிவ பூஜை செய்யும் நேரம் வந்தது. அருகிலிருந்த குளத்தில் நீராடினார். அங்கு இருந்த அரக்கன் அகத்தியரின் காலைப்பிடித்தான். இதனால் அகத்தியர் கடும் கோபம் கொண்டார். அவர்,””நீ வருபவர்களையெல்லாம் காலைப்பிடித்து இழுப்பதால், முதலையாக மாறுவாய்,”என சபித்தார். அவன் அகத்தியரிடம் சாப விமோசனம் கேட்டான். அகத்தியர்,””கஜேந்திரன் என்ற யானை இந்த குளத்திற்கு வரும் போது நீ அதன் காலைப்பிடிப்பாய், அப்போது அதைக்காப்பாற்ற திருமால் வருவார். அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்,”என்றார். இந்த கபிஸ்தத்தின் கோயில் முன்பு கிழக்கு திசையில் உள்ள கபில தீர்த்தத்தில் ஒரு நாள் கஜேந்திரன் நீர் அருந்த இறங்கியது. இதைக்கண்ட முதலை யானையின் காலைக்கவ்வியது. “ஆதிமூலமே! காப்பாற்று’ என யானை கத்தியவுடன் கருட வாகனத்தில் லட்சுமி சமேதராக விஷ்ணுவந்து, சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சமளித்ததாக வரலாறு.

நம்பிக்கைகள்

ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள் .

சிறப்பு அம்சங்கள்

இத்தலபெருமாளை ஆழ்வார், “ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்,’ என பாடினார். அன்றிலிருந்து கண்ணன் என்ற பெயரே பெருமாளுக்கு வழங்கி வருகிறது. திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக் கண்ணங்குடி ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 108 திருப்பதிகளில் இத்தலத்தில் மட்டும் தான், பெருமாள் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.

திருவிழாக்கள்

ஆடி பவுர்ணமி கஜேந்திர மோட்சலீலை. வைகாசி விசாகம் தேர், பிரமோற்சவம். பெருமாளுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடக்கிறது.

காலம்

1000-2000

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்கவித்தலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

தஞ்சாவூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top