Friday Jan 24, 2025

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில், கடலூர்

முகவரி

அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை-608 002, சிவபுரி போஸ்ட், அண்ணாமலை நகர், சிதம்பரம் தாலுகா, கடலூர் மாவட்டம். போன்: +91- 98426 24580.

இறைவன்

இறைவன்: பால்வண்ணநாதர் இறைவி: வேதநாயகி

அறிமுகம்

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தல் உள்ள சிவத்தலமாகும். [1] இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 4வது தலம் ஆகும்.

புராண முக்கியத்துவம்

கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது. வருந்திய முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,””முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள்,’என்றார். கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜ கோபுரம். உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, அகோர மூர்த்தி, முயலகன் மாறிய நிலையில் தெட்சிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நாயன்மார்கள், சதுரா துர்க்கை, புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர். இத்தலம் முன்பு கொள்ளிட ஆற்றின் வடகரையில் கரைமேடு என்னுமிடத்தில் இருந்ததால், இத்தலத்திற்கு கழிப்பாலை என்ற பெயர் இருந்தது. கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோயில் முழுவதும் சிதலமடைந்து விட்டது. எனவே தற்போது உள்ள இடத்தில் கோயில் கட்டி, அதில் கழிப்பாலை இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

நம்பிக்கைகள்

லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன், பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞான அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது. இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. வால்மீகி முனிவர் இங்கு வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார். இங்குள்ள நடராஜரின் சடைமுடி அள்ளிமுடிந்த கோலத்தில் உள்ளது. அருகில் சிவகாமியம்மன், தன் தோழிகளான விஜயா, சரஸ்வதியுடன் உள்ளது தனி சிறப்பாகும்.

திருவிழாக்கள்

தைப்பூசம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

.திருக்கழிப்பாலை

அருகிலுள்ள இரயில் நிலையம்

சிதம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top