திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர்-614 720, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4367 – 279 374
இறைவன்
இறைவன்: பாரிஜாதவனேஸ்வரர், களர்முளைநாதர் இறைவி: அமுதவல்லி
அறிமுகம்
திருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 105ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் மன்னார்குடி – திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்தில் பராசர முனிவன், கால பைரவர், துர்வாசர் ஆகியோர் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.
புராண முக்கியத்துவம்
பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தனக்கும் நடன தரிசனம் தர வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். இவர் தேவலோக மலராகிய பாரிஜாதத்தை கொண்டு வந்து இப்பகுதியை பாரிஜாத வனமாக்கினார். பின் தீர்த்தம் உண்டாக்கி, பாரிஜாத மரத்தின் அடியில் லிங்கத்தையும், அருகே அம்பாளையும் பிரதிஷ்டை செய்து, தேவ தச்சனை கொண்டு கோயில் கட்டி வழிபாடு செய்தார். இதனால் இத்தலத்திற்கு பாரிஜாத வனம், தருவனம், கற்பகவனம் என்ற புராணப்பெயர்கள் உண்டு. இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் இத்தலத்தில் “பிரமதாண்டவ தரிசனம்’ தந்தருளினார். களரி என்பதற்கு தாண்டவம் என்றும் பொருளுண்டு. களரி என்பது மருவி “திருக்களர்’ ஆனது. இதனால் இத்தல இறைவன் களர்முளை நாதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். 80 அடி உயர ராஜ கோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. சிவன், அம்மன் இருவரும் கிழக்கு நோக்கி தனி சன்னதிகளில் அருளுகின்றனர். பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், விஸ்வநாதர், கஜலட்சுமி, அகத்தியர், நாயன்மார்கள், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், துர்க்கை, லட்சுமி, சண்டிகேஸ்வரர் உள்ளனர். அஷ்டபுஜ துர்க்கை சிம்மத்தின் மீது அமர்ந்த கோலத்தில் இங்கு அருள்பாலிக்கிறாள். அகோர வீரபத்திரர் தனி சன்னதியில் மேற்கு முகமாக வீற்றிருக்கிறார்.
நம்பிக்கைகள்
இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.
சிறப்பு அம்சங்கள்
இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 168 வது தேவாரத்தலம் ஆகும். முருகப்பெருமான் அறுபதினாயிரம் முனிவர்களுக்கும், துர்வாசருக்கும், பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில் தான். எனவே முருகப்பெருமான் இத்தலத்தில் வள்ளி, தெய்வானை இல்லாமல் குரு வடிவில் அருள்பாலிக்கிறார். கல்வியில் மேன்மை பெற இவரை வழிபடுவது சிறப்பு. சிதம்பரம், பேரூரில் ஆனந்த தாண்டவம், திருவாரூரில் அஜபா தாண்டவம், மதுரையில் ஞான சுந்தர தாண்டவம், அவினாசியில் ஊர்த்துவ தாண்டவம், திருமுருகன் பூண்டியில் பிரம்ம தாண்டவம் தந்தருளிய சிவபெருமான் இத்தலத்தில் பிரம தாண்டவ தரிசனம் தந்துள்ளார். நடராஜரின் பிரமதாண்டவ தரிசன வடிவமும், எதிரில் துர்வாசர் கைகூப்பிய நிலையில் உள்ள வடிவமும் உள்ளது. துர்வாச முனிவரே இக்கோயிலுக்கு முதலில் கும்பாபிஷேகம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. கோவிலூர் மடாதிபதி வீரசேகரஞான தேசிக சுவாமிகளின் ஜீவ சமாதி கோயிலின் அருகே உள்ளது. இவர் இக்கோயிலுக்கு அதிக திருப்பணிகள் செய்துள்ளார். எனவே இவரை “திருக்களர் ஆண்டவன்’ என வழிபாடு செய்கிறார்கள். பராசர முனிவர், காலவ முனிவர் வழிபட்ட தலம். இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும் எனவும், கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.
திருவிழாக்கள்
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் திருவிழா. வைகாசி விசாகம், நவராத்திரி, கந்த சஷ்டி, ஆருத்ரா தரிசனம், மார்கழி சஷ்டி திதி, சதய நட்சத்திரத்தில் நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரம் உபதேசிக்கும் நிகழ்ச்சி.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருக்களர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி