Wednesday Dec 25, 2024

திருகண்ணபுரம் (நீலமேகப்) சௌரிராஜப் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு சௌரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருகண்ணபுரம், அஞ்சல்,நாகப்பட்டினம் மாவட்டம்-609 704. போன்: 04366-270557

இறைவன்

இறைவன்: நீலமேகப்பெருமாள், சௌரிராஜன், இறைவி: கண்ணபுரா நாயகி

அறிமுகம்

நீலமேகப்பெருமாள் கோவில்தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். இந்தக் கோவில் சௌரிராஜப்பெருமாள் கோவில் எனவும் அறியப்படுகிறது. இக்கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணபுரம் என்னும் ஊரில், நன்னிலம்-காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல அபயக் கரத்துடன் இல்லாமல் தானம் பெறும் கரத்துடன் உள்ளார். பக்தர்களின் துன்பங்களையெல்லாம் அவர் பெற்றுக்கொள்வார் என்பதை இது உணர்த்துவதாக உள்ளது. வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது அதிகாலையில் சிவனாகவும் மாலையில் பிரம்மாவாகவும், இரவில் விஷ்ணுவாகவும் காட்சிதரும் மும்மூர்த்தி தரிசனம் இக்கோயிலின் சிறப்பாகும்.

புராண முக்கியத்துவம்

இக்கோவில் அர்ச்சகர் ஒருநாள், கோவிலுக்கு வந்த அரசனுக்கு சுவாமிக்கு சூடிய மாலையைத் தர அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால் கோபங்கொண்ட அரசனிடம், அர்ச்சகர் அது பெருமாளின் திருமுடி என்று சொல்லிவிட, அரசன் தான் நாளை வந்து பார்க்கும் போது பெருமாளுக்கு முடி இல்லையெனில் அர்ச்சகர் தண்டனைக்குள்ளாவார் என்று கூறிவிட்டுச் சென்றான். அர்ச்சகர் பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். அவரிடம் இரக்கம்கொண்ட பெருமாள் அவரைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார். அடுத்த நாள் அரசன் வந்து பார்த்தபோது உண்மையிலேயே பெருமாள் தலையில் திருமுடி இருந்தது. இந்நிகழ்வின் காரணமாகவே உற்சவர் சௌரிராஜப்பெருமாள் எனப் பெயர் கொண்டுள்ளார் என்பது தொன்நம்பிக்கை. உற்சவர் உலாவில் அமாவாசையன்று மட்டும் திருமுடி தரிசனம் காணலாம். முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர். சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால் அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர். மகாவிஷ்ணுவிடம் “அஷ்டாட்சர மந்திரம்’ கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது. எனவே, இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர். முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான். விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். பின், மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.

நம்பிக்கைகள்

சுவாமியிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து செயல்களும் நிறைவேறுவதாக நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

சவுரிராஜப் பெருமாள் ஒருசமயம் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு சாத்திய மாலையை தன் காதலிக்கு சூடிவிட்டார். அந்த நேரத்தில் மன்னர் கோயிலுக்கு வந்து விடவே, அவருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் மாலை இல்லை. எனவே, தன் காதலிக்கு சூட்டிய மாலையையே மன்னருக்கு போட்டு விட்டார். அதில் பெண்ணின் கூந்தல் முடி இருந்ததைக்கண்ட மன்னர் மாலையில் முடி எப்படி வந்தது? என கேட்டார். அர்ச்சகர் பெருமாளின் தலையில் இருந்த முடிதான் அது என பொய் சொல்லிவிட்டார். மன்னனுக்கு சந்தேகம் வரவே, தான் பெருமாளின் திருமுடியை பார்க்க வேண்டும் என்றார். மறுநாள் கோயிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக அர்ச்சகர் கூறினார். சுவாமிக்கு திருமுடி இல்லாத பட்சத்தில் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என எச்சரித்துவிட்டுச் சென்றார் மன்னர். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சுவாமியை வணங்கி தன்னை காக்கும்படி வேண்டினார்.மறுநாள் மன்னர் கோயிலுக்கு வந்தார். அர்ச்சகர் பயந்து கொண்டே சுவாமியின் தலையை மன்னருக்கு காட்ட, திருமுடியுடனே காட்சி தந்தார் பெருமாள். எனவே “சவுரிராஜப் பெருமாள்’ என்ற பெயரும் பெற்றார். இவர் இத்தலத்தில் உற்சவராக தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். “சவுரி’ என்ற சொல்லுக்கு “முடி’ என்றும், “அழகு’ என்றும் பொருள்கள் உண்டு. சுவாமி சிறப்பு இங்கு சுவாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார். அருகிலேயே கருடன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருகிறார். விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்தார்.அமாவாசைதோறும் உச்சிகால பூஜையில் பெருமாள் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இத்தலத்தை நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்துள்ளனர். கர்வம் அழிந்த கருடன் தன் தாயை விடுவிப்பதற்காக பாற்கடலில் அமிர்தம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தார் கருடன். வழியில் யாருக்கும் கிடைக்காத அமிர்தத்தை தான் கொண்டு வருவதை எண்ணி அவர் மனம் கர்வம் கொண்டது. கர்வத்துடன் அவர் இத்தலத்திற்கு மேலே சென்றதால் தன் சக்தி இழந்து கடலில் வீழ்ந்தார். தவறை உணர்ந்த கருடன் மன்னிப்பு வேண்டி கடலினுள் இருந்த ஒரு மலையின் மீது சுவாமியை வேண்டி தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். மாசி பவுர்ணமியில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது பக்தர்கள் சுவாமியை “மாப்பிள்ளை!’ என்று கோஷமிட்டு வித்தியாசமாக வரவேற்கின்றனர். முனையதரையன் பொங்கல் முன்னொரு காலத்தில் இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். தினசரி பெருமாளை வணங்கிவிட்டு உணவு உண்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெருமாள் சேவைக்காக பணத்தை எல்லாம் செலவழித்ததால் வறுமையில் வாடிய அவர் மன்னனுக்கும் வரி கட்டவில்லை. எனவே, மன்னன் அவரை சிறைப்பிடித்துச் சென்றார். அன்று மன்னரின் கனவில் தோன்றிய விஷ்ணு, அவரை விடுவிக்கும்படி சொல்லவே முனையதரையன் விடுவிக்கப்பட்டார். இரவில் வீடு திரும்பிய முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தாள் மனைவி. அவர் பெருமாளுக்கு மானசீகமாக (மனதில் நினைத்து) நைவேத்யம் படைத்து சாப்பிட்டார். மறுநாள் அர்ச்சகர் கோயிலுக்கு வந்தபோது கருவறையில் சுவாமியின் வாயில் பொங்கல் ஒட்டியிருந்ததைக் கண்டார். இத்தகவல் மன்னரிடம் தெரிவிக்கப்படவே அவர்கள் முனையதரையன் படைத்த பொங்கலை சுவாமி உண்டதை அறிந்து கொண்டனர். அன்றிலிருந்து இக்கோயிலில் இரவு பூஜையின்போது பொங்கல் படைக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை “முனையதரையன் பொங்கல்’ என்றே சொல்கின்றனர். இங்குள்ள தீர்த்தம் மிகவும் விசேஷமானது. உத்ராயணத்தின் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்கி றார்கள். தோஷத்தால் பாதிக்கப் பட்ட இந்திரன் இங்கு வந்து நவக்கிரக பிரதிஷ்டை செய்து சுவாமியை வணங்கி தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் கோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்கு பார்த்தபடி இருக்கிறது. இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12 ராசிகளுடன் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இத்தலம் பூலோக வைகுண்டம் என கருதப்படுவதால் இங்கு சொர்க்கவாசல் இல்லை. திவ்யதேசங்களில் கீழை வீடாக இருக்கும் இத்தலம் பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. கருவறைக்கு மேல் உள்ள உத்பலாவதக விமானத்தில் விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது. திருநெற்றியில் தழும்பு உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம். முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி, “பெருமானே பொருவரை முன்போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ’ என்று கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது. “தழும்பிருந்த பூங்கோரையாள் வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்’ என்ற பாசுரத்தில் போல இத்தழும்பை இன்றும் காட்டித் தமக்கு அடியாரிடம் கொண்ட பரிவைப் பெருமான் விளங்குகின்றார். (சந்தேகம்) “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம். இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது. மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார். இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம். 1. இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது.2. உற்சவ பெருமாளுக்கு சவுரி முடி வளர்ந்ததால் சவுரி ராஜ பெருமாள் என்று பெயர். 3. சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது. 4. திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார். 5. குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ (ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே. 6. நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார். 7. கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம். 8. கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம். திருப்புற்குழியில் வறுத்த பயிறு, திருப்பதியில் லட்டு, ஸ்ரீரங்கத்தில் அரவணை (பாயாசம்) கும்பகோணத்தில் தோசை(பால் பாயாசம்) அதுபோல் இங்கு முனியோதரன் பொங்கல் பிரசித்தம். 108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு திருவரங்கம்,வடக்கு வீடு – திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு -திருமாலிருஞ் சோலை(அழகர் கோயில்) எனவும் அமைந்த வரிசையுள் கீழை வீடாக திருக்கண்ணபுரம் ஆகும். முனையதரன் பொங்கல் வரலாறு திருக்கண்ணபுரத்தில் வாழ்ந்து வந்த முனையதரையர் எனும் பக்தர் பெருமாள் திருப்பணிகளைச் செய்து வந்த போது, பஞ்சம் ஏற்பட்டது. அவரோ பெருமாளுக்குப் படைக்காமல் எதுவும் உண்ணாதவர். எனவே வீட்டில் இருக்கும் பொங்கலை அவரது மனைவியார் இறைவனுக்கு மானசீகமாகப் படைத்து வழிபட, திருக்கோயிலைத் திறக்கும் போது பொங்கல் மணம் வீசுவதையும் பொங்கல் முனையதரையர் வீடு வரையும் சிதறி இருப்பதையும் கண்டு அடியார் வீட்டில் படைத்த எளிய பொங்கலை பெருமாள் ஏற்றுக்கொண்டதை அனைவரும் அறிந்தனர். இதை நினைவுகூரும் விதமாக இன்றளவும் அர்த்த சாமத்தில் பெருமாளுக்கு பொங்கல் வழங்கப்படுகின்றது. இரண்டாம் கால நிவேதனமாக இரவு ஒன்பது மணிக்கு மேல் படைக்கப்படுகின்றது. வைணவக்குடும்பத்தில் பிறந்த காளமேகம் சைவராக மாறிவிட்டாரே என்று கண்ணபுரம் பெருமாளுக்கு கோபம் ஏற்பட்டதாம். மழைநாளில் கண்ணபுரம் பெருமாள் கோயிலில் மழைக்காக புலவர் ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப் பெருமாள் உள்ளே விடவில்லை.உடனே காளமேகப்புலவர் கவிதை ஒன்று இயற்றி, பெருமாளை நோக்கிப் பாட கோயில் கதவுகள் திறந்தனவாம்.

திருவிழாக்கள்

வைகாசி, மாசி மாதங்களில் நடைபெறும் பிரம்மோற்சவத் திருவிழாக்கள் இங்கு சிறப்பானவை. மாசி மாதம் பௌர்ணமியின் போது கடற்கரையில் நடைபெறும் கருடனுக்குக் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்திலுள்ள கடற்கரை கிராமமான பட்டினச்சேரிக்கு வரும் சௌரிராஜப் பெருமாளுக்கு அங்குள்ள வெள்ளை மண்டபம் என்ற பகுதியில் அலங்காரம் செய்யப்படுகிறது. மீனவர்கள் அலங்கரிக்கும் நெற்கதிர்கள் தோரணமாகத் தொங்கவிடப்பட்டிருக்கும் பவளக்கால் சப்பரத்தில் தங்க கருடவாகனத்தின் மீதமர்ந்திருப்பார். பட்டினச்சேரி மீனவ மக்கள் சௌரிராஜப் பெருமாளை ’மாப்பிள்ளைப் பெருமாள்’ என்று அழைக்கின்றனர்.

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருகண்ணபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top