திருஊறல் (தக்கோலம்) ஜலநாதேஸ்வரர் திருக்கோயில், வேலூர்
முகவரி
அருள்மிகு ஜலநாதேஸ்வரர் திருக்கோவில் தக்கோலம் அஞ்சல் அரக்கோணம் வட்டம் வேலூர் மாவட்டம் PIN – 631151
இறைவன்
இறைவன்: ஜலநாதேஸ்வரர் இறைவி: கிரிராஜ கன்னிகாம்பாள்
அறிமுகம்
திருவூறல் – தக்கோலம், ஜலநாதீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். தொண்டை நாட்டுத் தலங்களில் 12 வது திருத்தலம். இது வட ஆற்காடு மாவட்டத்தில் தற்போது அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ள தக்கோலத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனாரின் திருவடியிலிருந்து நீர் வந்ததால் திருஊறல் (திருவூறல்) என்று இத்தலம் பெயர் பெற்றது. திருவூறல், அரக்கோணத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 64 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம்
நந்தியின் வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்து கொண்டிருந்ததாலும், இறைவன் திருவடியில் நீர் சுரப்பதாலும் இவ்வூருக்கு திருஊறல் என்று பெயர். மேலும் இறைவனை அழைக்காமல் அவமதித்து தக்கன் நடத்திய யாகத்தை அழித்து அவன் தலையை வீரபத்திரர் தலையைக் கொய்த தலம் இதுதான் என்பர். தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு “ஓ” என்று ஓலமிட்டதால் தக்கோலம் என்று பெயர் பெற்றதாக உள்ளூர்ச் செய்தி அறிவிக்கின்றது. வடக்கு மதிலோரத்திலுள்ள கங்காதரர் சந்ந்தியின் மேற்குப் பிராகாரத்தில் சத்யகங்கை தீர்த்தம் உள்ளது. இதன் கரையிலுள்ள நந்தியின் வாயிலிருந்து தான் கங்கை நீர் பெருகி வந்தது.
சிறப்பு அம்சங்கள்
குசஸ்தலை என்னும் கல்லாற்றின் கரையில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரளவில் சுற்றிலும் மதிற்சுவருடன் கூடிய மேற்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் மேற்கு வெளிப் பிராகாரத்தில் பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். கோபுரவாயில் நுழைந்ததும் வெளிப்பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும் தனிக்கோயிலாகவுள்ளது. நந்திக்கு எதிரில் உள்சுற்றுச் சுவரில் ஒரு சாளரம் உள்ளது.
திருவிழாக்கள்
நவராத்திரி, சிவராத்திரி, சித்திரை திருவிழா
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தக்கோலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அரக்கோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை