Saturday Jan 18, 2025

திருஆப்பனூர் திருஆப்புடையார் திருக்கோயில், மதுரை

முகவரி

அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், ஆப்புடையார் கோயில் அஞ்சல், செல்லூர்-625 002. மதுரை மாவட்டம். போன் +91 452 253 0173, 94436 76174

இறைவன்

இறைவன்: ஆப்புடையார், இடபுரேசர் (ரிஷபுரேசர்), அன்னவிநோதன், ஆப்பனூர் நாதர் இறைவி: சுகந்த குந்தளாம்பிகை

அறிமுகம்

திருஆப்பனூர் ஆப்புடையார் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம்மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளில் ஏறி திருவாப்புடையார் கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோவில் மிக அருகில் உள்ளது. மதுரை நகரின் ஒரு பகுதியான சிம்மக்கல் என்ற இடத்தில் இருந்து வைகை ஆற்றைக் கடந்து சென்றும் இக்கோவிலை எளிதில் அடையலாம். இத்தலத்தில் அர்ச்சகர் உலையிலிட்ட ஆற்று மணலை இறைவன் அன்னமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை. சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் வேட்டையாடச் சென்றபோது திருவாப்புடையாரை(சுயம்புலிங்கத்தை)க் கண்டு முதன்முதலில் தரிசனம் செய்துள்ளான். அவனே குரவங்குமழ் குழலம்மையைப் பிரதிஷ்டை செய்தவன். அப்பாண்டியனது மகன் சுகுணன், திருவாப்புடையாருக்குக் கோயில் கட்டுவித்துள்ளான். இத்தல இறைவனார், சிவபக்தர் ஒருவருக்காக மணலை அன்னமாக்கியதால் அன்னவிநோதர் என அழைக்கப்பட்டார்.

புராண முக்கியத்துவம்

சோழாந்தகன் என்ற மன்னன் ஒரு சிவபக்தன். இவனது ஆட்சியில் காலம் தவறாமல் மழை பொழிந்து, விளைச்சல் பெருகி மக்கள் இன்பமாக வாழ்ந்தனர். இதற்கு காரணம் இவனது சிறந்த சிவபக்தி தான். இவன் எப்போதும் சிவபூஜை செய்த பின்பு தான் சாப்பிடுவான். ஒரு முறை இவன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். அப்போது ஒர் அழகிய மானைப்பார்த்தான். விரட்டினான். ஆனால் இவனது பிடியில் சிக்கவில்லை. மானை விரட்டிய களைப்பால் மயங்கிய மன்னன் நடு காட்டில் விழுந்து விட்டான். பயந்து போன இவனது பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் களைப்பு தீர உணவை அருந்த கூறினர். ஆனால் சிவபூஜை செய்யாமல் சாப்பிடமாட்டேன் என்பதை உறுதியாக தெரிவித்தான். புத்திசாலி அமைச்சர் ஒருத்தர், அந்த காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஆப்பு அடித்தார். அதைக்காட்டி, “”மன்னா, இங்கே ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது. நீங்கள் அதை பூஜை செய்த பின் உணவருந்தலாமே,” என்று யோசனை கூறினார். களைப்பிலிருந்த மன்னனும் அந்த ஆப்பை சுயம்புலிங்கம் என நினைத்து வணங்கி உணவருந்தி விட்டான். களைப்பு நீங்கிய பிறகு தான், தாம் வணங்கியது லிங்கம் அல்ல – அது ஒர் ஆப்பு என்பதை உணர்ந்து மிக வருந்தினான். இறைவா! நான் இது நாள் வரை உன்னை பூஜித்தது உண்மையானால், நீ இந்த ஆப்பில் வந்து என்னை அருள்பாலிக்க வேண்டும்” என மன்றாடினான். மன்னனின் பக்திக்கு மகிழ்ந்த இறைவன் அந்த ஆப்பிலே தோன்றி அருள் பாலித்தார். சிவன் ஆப்பு உடையார் ஆனார். அந்த ஊர் ஆப்பனூர் ஆனது. இடப புரம் இந்த சோழாந்தகனின் வழி வந்த சுகுணபாண்டியனின் ஆட்சியில் பஞ்சம் நிலவியது. ஆனாலும் அங்கிருந்த சிவாலயத்தின் அர்ச்சகர் சிவனுக்காக சிறிது பயிர்செய்து நைவேத்யம் செய்து வந்தார். “”நாடே பஞ்சமாக இருக்கும் போது இறைவனுக்கு நைவேத்யமா?” என கோபப்பட்ட மக்கள் அர்ச்சகரை துன்புறுத்தினர். வருந்திய அர்ச்சகர் சிவனிடம் முறையிட்டார். அதற்கு சிவன், “”நீ உன் மனைவியுடன் என்னை பின் தொடர்ந்து வா. நாம் வேறிடம் செல்வோம்” என்று ரிஷபத்துடன் கிளம்பினார். ரிஷபம் வந்து நின்ற இடமே ரிஷப (இடப ) புரமானது. அதுவே ஆப்பனூர் ஆனது என்றும் கூறுவர். பஞ்சத்தின் காரணமாக அர்ச்சகர் வைகை ஆற்று மணலை வைத்து சமைக்க எண்ணினார். அப்போது இறைவனின் அருளால் அந்த ஆற்று மணல் அன்னமாக மாறியது. இதனால் இத்தல இறைவனுக்கு “அன்னவிநோதன்’ என்ற பெயர் ஏற்பட்டது.

நம்பிக்கைகள்

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனிடமும், செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமையன்று சிவனுக்கு அர்ச்சனை செய்து, பிரார்த்தனை செய்கின்றனர். இறைவனுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்தால் 1000 பசு தானம் செய்த பலனும், இளநீர் அபிஷேகம் செய்தால் 100 அஸ்வமேத யாகம் செய்த பலனும் உண்டாகும்.

சிறப்பு அம்சங்கள்

ஆப்புடையார் கோயில் மூலவராக ஆப்பனூர் நாதரும், சுகந்த குந்தளாம்பிகையும் அருள் பாலிக்கிறார்கள். கீர்த்தி சிறியது மூர்த்தி பெரியது லிங்கம் சிறியது தான். ஆனாலும் இவரது பெருமையோ மிகவும் சிறப்பானது. மலைகளில் மேருவைப்போலவும், பசுக்களுள் காமதேனுவைப் போலவும், விண்மீன்களுக்கிடையே சந்திரனைப்போலவும், பிரகாசமுள்ள பொருள்களுள் சூரியனைப்போலவும், கொடையாளிகளுள் மேகத்தைப் போலவும், புருஷர்களுள் விஷ்ணுவைப் போலவும் இம்மாதிரி எது எது அதிகமோ, அதேபோல் இங்குள்ள ஆப்புடையார் மற்ற சுயம்பு லிங்கங்களுள் விசேஷமானவர். இவரை வணங்கினாலே மற்ற மூர்த்திகளை அர்ச்சித்த பலன் கிடைக்கும் என புராணம் கூறுகிறது. மதுரையிலுள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில் அப்பு (நீர்) ஸ்தலமாகும். குபேர வாழ்வு தரும் ஆப்புடையார் பிரம்ம தேவனின் வழியில் வந்த புண்ணிய சேனன் என்பவன் ஒரு சிவபக்தன். இவன் செல்வத்திற்கே அதிபதியாவதற்காக அகத்தியரின் ஆலோசனைப்படி, இத்தலத்திற்கு வந்து கடும் தவம் இருந்தான். தவத்தினால் மகிழ்ந்த ஆப்புடையார், சுகந்த குந்தளாம்பிகையுடன் தோன்றி, புண்ணிய சேனனின் விருப்பத்தை நிறைவேற்றினார். இதனால் அகங்காரம் பிடித்து, சிவனின் அருகில் இருந்த அம்பிகையின் அழகில் மயங்கினான். இதனால் இவனுக்கு கண்ணும் போனது, உயிரும் போனது. இறைவனின் கருணையால் மீண்டும் உயிர்பெற்றான். தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டான். மன்னித்த ஆப்புடையார், இவனை “குபேரன்’ என்று அழைத்து மீண்டும் வாழ்வு தந்தார். அன்று முதல் சங்கநிதி, பதுமநிதி என்ற இரு செல்வங்களோடு வடக்கு திசையை காத்து வந்தான்.

திருவிழாக்கள்

ஆனி உத்திரம், ஆடிப்பூரம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்ன அபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவாதிரை என மாதந்தோறும் திருவிழா தான். மாசி மகத்தன்று பிரம்மமோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரியார்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top