தளிகையூர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
தளிகையூர் சிவன்கோயில்,
தளிகையூர், பாபநாசம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612301.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
ஆதனூரின் அக்னி திக்கில் உள்ளது இந்த தளிகையூர். சுவாமிமலையில் இருந்து திருவையாறு சாலையில் 2 கிமீ தூரம் சென்றால் தளிகையூர் என கைகாட்டி இருக்கும் அதன் வழி 1½ கிமீ சென்றால் இக்கிராமத்தை அடையலாம். ஊருக்குள் நுழைந்தவுடன் கிழக்கு நோக்கிய விநாயகர் கோயில் ஒன்றுள்ளது அதன் எதிரில் செல்லும் தெருவின் கடைசியில் லிங்கத்தடிதிடல் எனும் ஒரு தென்னம் தோப்பினுள் இருக்கிறார் எம்பெருமான்.
நூறு ஆண்டுகளாக இங்கு கோயில் காணப்படவில்லை லிங்கத்தடி திடல் எனும் பெயர் மட்டுமே இருந்து வந்துள்ளது. இந்த தென்னம் தோப்பை ஒட்டியுள்ள வீட்டில் உள்ள பெண்மணி சிவனை நினைத்து அவ்வப்போது இத்தோப்பில் விளக்கேற்றி வந்துள்ளார். அடுத்த சில வாரங்களில், இவ்வூரில் சிவன்கோயில் ஒன்றிருந்து மண்ணுள் மறைந்து போனதாகவும் அதனை மீட்டெடுக்க வேண்டும் என ஓலைசுவடி மூலம் சில அடியார்களுக்கு உத்தரவு கிடைத்துள்ளது. அதனை ஏற்று ஊர் மக்களுடன் சேர்ந்து இந்த திடலை ஓரிரு இடங்களில் தோண்டிப்பார்க்க புதையுண்டிருந்த எம்பெருமானின் திருமேனி மீளக்கிடைத்துள்ளது.
இவ்வூர் விநாயகர் கோயிலில் பல ஆண்டுகாலமாக கிடத்தப்பட்டிருந்த ஒரு நந்தி மற்றும் ஒரு விநாயகர் சிலையையும் சேர்த்து வைத்து, ஊர்மக்கள் லிங்கத்திருமேனிக்கு ஒரு மேடையமைத்து கிழக்கு நோக்கிய ஓர் தகர கொட்டகையில் வைத்து பூஜித்து வருகின்றனர். பிரதோஷத்தின் அடுத்தநாள் நாம் சென்றிருந்தபோது எடுத்த காட்சிப்பதிவுகள் தான் இவை. நித்தியப்படி விளக்கேற்றுதல் போன்ற பணிகளை அப்பெண்மணியே செய்து வருகிறார். அடிப்படை தேவைகளான எண்ணை, பால், வஸ்திரம் நிவேதனங்களுக்கு உதவி கேட்கிறார்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
புராண முக்கியத்துவம் :
இந்த தளிகையூரின் கதை இவ்வூரின் வடக்கில் உள்ள ஆதனூர் கதையில் இருந்து துவங்குகிறது. ஸ்ரீரங்கம் மதில் கட்ட பணமில்லையே என்று ரங்கனை வேண்ட, கொள்ளிடக் கரைக்கு வா. பணம் தருகிறேன்” என்றார் பெருமாள். வணிகர் வேடமிட்ட பெருமாள் மரக்கால் சகிதமாக வர, மங்கை மன்னன் இங்குள்ளவருக்கு கூலி கொடுக்க, மணலை அளந்து போடும்” என்கிறார். வணிகர் போட்டதும் உழைத்தவருக்குப் பொன்னாகவும், உழைக்காதவருக்கு மணலாகவும் ஆனது. மந்திரவாதி என மக்கள் அடிக்க வர, வணிகர் ஓட திருவிளையாடல் நடக்கிறது. ஆதனூருக்கு ஓடி வந்து மரக்காலை தலைக்கு வைத்து ஓய்வெடுக்கிறார். மரக்காலை வைத்த பெருமாளாக பெருங்கோயில் பிற்காலத்தில் உருவானது. இவ்வூர் கோயில் ஒரு காலத்தில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்திருந்ததாம். இக்கோயிலுக்கு தளிகை செய்து அனுப்ப அமைந்த ஊர் தான் இந்த தளிகையூர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தளிகையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி