தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில், நாமக்கல்
முகவரி :
தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில்,
தலைமலை,
நாமக்கல் மாவட்டம் – 621208
இறைவன்:
வெங்கடாசலபதி
இறைவி:
ஸ்ரீதேவி பூதேவி
அறிமுகம்:
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது தலைமலை காப்புக்காடு. இதன் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதி திருச்சி மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. இந்தக் காப்புக்காட்டில் சுமார் 3,200 அடி உயர மலையில் சஞ்சீவிராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலுக்குச் செல்ல நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, வடவத்தூர், செவிந்திப்பட்டி, திருச்சி மாவட்டம் நீலியாம்பட்டி, சஞ்சீவிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து உள்ள ஐந்து பாதைகள் வழியாக கரடுமுரடான, செங்குத்தான மற்றும் சில இடங்களில் மிகவும் ஆபத்தான பாதையைக் கடந்து ஏறக்குறைய ஏழு கிமீ தொலைவுக்கு நடந்து மலை உச்சிக்குச் செல்ல முடியும். கீழிருந்து வரும் அனைத்துப் பாதைகளும் தலைமலையில் இருந்து சுமார் ஒரு கிமீ கீழே உள்ள கருப்பண்ணசாமி கோயிலில் ஒன்று சேர்கின்றன.
முதலில் வருவது சிறிய திருவடி ஆஞ்சநேயரின் சன்னதி, அடுத்து வருவது ஸ்ரீ கிருஷ்ண பகவான் சன்னதி, சஞ்சீவி மலையின் தலைப்பகுதியில் குடியிருக்கும் சஞ்சீவி ராய பெருமாளுக்கு நல்லேந்திர பெருமாள், அருங்கல் நல்லையன் என திருநாமங்களும் உண்டு. கருவறையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாசலபதி அருள் புரிகிறார்.
புராண முக்கியத்துவம் :
இலங்கையில் இராவணனுடன் நடந்த போரின்போது மூர்ச்சையடைந்து விழுந்த இலட்சுமணனை காக்க அனுமன் தூக்கிச் சென்ற மூலிகைகள் நிரம்பிய சஞ்சீவி மலையில் இருந்த மூலிகைகளின் வாசத்திலேயே லட்சுமணன் குணமடைந்துவிட்டார். அந்த மகிழ்ச்சியில், மலையை ஆஞ்சநேயர் வீசியெறிந்ததாகவும், அது 7 துண்டுகளாகச் சிதறி விழுந்ததாகவும் அவற்றில் ஒன்று இந்த தலைமலை எனவும் கூறப்படுகிறது. மலையின் தலை போன்ற உச்சி சிகரத்தில் பெருமாள் கோயில் உள்ளதால் தலைமலை எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மூலவருக்கு பின்புறம் தானாய் வளர்ந்த சுயம்பு அமைந்துள்ளது. தனி சன்னதியில் தாயார் அலர்மேலு மங்கை. காணாமல் போன காராம் பசுவை தேடி பல இடங்களிலும் அலைந்த ஒரு மாடு ஓட்டி இந்த மலையின் உச்சிக்கு வருகிறார்.
அங்கே காணாமல் போன காணாம் பசுவின் மடியில் ஒரு சிறுவன் முட்டி முட்டி பால் குடிப்பதை கண்டு அதை தன்னுடைய பண்ணையாரிடம் பொய் சொல்கிறார். பண்ணையாரின் கனவில் சங்கு சக்கரதாரியாக வந்த வைகுண்ட பெருமாள் பசு சிறுவனுக்கு பாலூட்டிக் கொண்டு இருந்த மலையின் உச்சியில் கோயில் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நம்பிக்கைகள்:
வேண்டுதல் நிறைவேறும் பக்தர்கள் பெருமாளுக்கு கன்று குட்டிகளை காணிக்கையாக வழங்குகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கோயிலில், உள்ள இறைவன் தானாய் வளர்ந்த தலைமலை சஞ்சீவிராயன் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறார். இந்த இறைவனான நல்லேந்திர பெருமாள் சுயம்புவாக எழுந்தருளியவராக கருதப்படுகிறார். மேலும் வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தெய்வங்கள் மூலவர்களாகவும், சீனிவாச பெருமாள், ருக்மணி, சத்யபாமா ஆகிய தெய்வங்கள் உற்சவர்களாகவும் உள்ளனர். இவர்களுக்கு தென்புறத்தில் அலமேலுமங்கை தாயார் மூலவராகவும், மகாலட்சுமி உற்சவராகவும் உள்ளனர். பெரும்பாலும் சனிக்கிழமைகளில் மட்டுமே கோயிலுக்கு பக்தர்கள் வருகிறார்கள். தலைமலை உச்சியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலர் கோயிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு பாதம் மட்டுமே வைக்கும் அளவுக்கு சுமார் 4 அங்குலம் அகலமே உள்ள சுவரின் விளிம்பில் உயிரைப் பணயம் வைத்து நடந்து வலம்வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தச் செயலை தலைமலை கிரிவலம் என்று கூறுகின்றனர்.
திருவிழாக்கள்:
சித்ரா பௌர்ணமி, தை திருவோணம், ஆடி 18 அன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.ஆவணி மாத கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாத நவராத்திரி விழா, விஜயதசமி அன்று அம்பு சேர்வை, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி தைப்பொங்கல் போன்ற பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தலைமலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாமக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி