தத்தனூர் சிவன்கோயில், அரியலூர்
முகவரி :
தத்தனூர் சிவன்கோயில்,
தத்தனூர், உடையார்பாளையம் வட்டம்,
அரியலூர் மாவட்டம் – 621804.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
தத்தனூர் இந்த ஊர் உடையார்பாளையம்- வி.கைகாட்டி சாலையில் உள்ளது. மொத்தம் ஐந்து பிரிவாக தத்தனுர் உள்ளது. இந்த தத்தனூர் பொட்டக்கொல்லையில் உள்ளது. பேருந்துநிறுத்தத்தில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் சாலையில் சென்றால் அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள இரட்டை குளத்தின் அருகில் ஒரு அடர்ந்த சோளக்கொல்லை அருகில் ஒரு பெரிய மண்மேட்டில் உள்ளது. தகுந்த உதவி இன்றி இக்கோயிலை கண்டுபிடிக்க இயலாது. பலரை கேட்டு கேட்டு அலுத்த நிலையில் திக்கற்று நின்றபோது எனக்கு நினைவு வந்தது, எப்படியும் வழக்கம் போல் இறைவன் உதவிக்கு ஒரு ஆளை அனுப்புவார் என ஒரு டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருந்த இருவரை நோக்கி தத்தனூர் சிவன் கோயில் எங்குள்ளது என கேட்க அவர்களோ ஏ.. உன்னைத்தான் தேடி ஆள் வந்திருக்கு என ஒருவரை கூப்பிட வயதான 80வயது பெரியவர் வந்தார்.
விஷயத்தினை சொன்னபோது வாங்க அவசியம் போய் பார்ப்போம் என கிளம்பினார் எங்களுடன். நின்ற இடத்தில இருந்து ஒரு கிமிக்கு மேல் காடுமேடு பள்ளம் என பயணம் தொடர்ந்து ஒரு மேட்டருகில் நின்றது. அங்கே உயர்ந்த மேட்டில் கம்பீரமாய் நின்றிருந்தது செம்பராங்கல் பாறையில் கட்டபெற்ற சிவாலயம் அம்பிகை ஆலயம் தரைமட்டம் ஆகிவிட, இறைவன் கருவறை மட்டும் தனித்து உள்ளது. சுற்று சுவர் தரைமட்டம் வரை காணமல் போய்விட நுழைவாயில் மட்டும் இன்னும் உருக்குலையாமல் உள்ளது. வாயில் கதவினை பெரியவர் திறந்து விளக்கிட்டு வைத்தார். நான் சுற்றி வந்தேன் கோயிலை, முழுவதும் செம்பராங்கல் பாறையினால் செய்யப்பட பணிகள், மேல் கொடுங்கை வரிகள் மட்டும் கருங்கல் பணியாக உள்ளது அதில் பூத கணங்களின் முகங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கருவறை உள்ளே விதானத்தில் இரு ஜோடி மீன்கள் நடுவில உள்ள பூவினை முத்தமிட்ட படி உள்ளதாக செதுக்கப்பட்டுள்ளது. சோழ மண்டலத்தில் பாண்டியர் பணிகள் இருக்க வாய்ப்பில்லை. எனினும் மீன் சின்னம் சில பாளையக்காரர்களின் சின்னமாக இருத்தல் கூடும்.அவர்களால் கட்டபெற்ற கோயில் இதுவாகும். கல்வெட்டுக்கள் ஏதும் இல்லை. அனைத்து சிலைகளையும் கடத்தல் கும்பல் கொண்டு போய்விட கோயில் மட்டும் மீதமுள்ளது. புதிய லிங்கம் செய்ய ஏற்ப்பாடுகள் செய்துவருகிறோம் என்றும், இக்கோயிலை தேடி இவ்வளவு தூரம் வந்தமைக்கு மிக்க நன்றி என அந்த பெரியவர் கண்ணீருடன் கூறினார்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தத்தனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அரியலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை