தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் திருக்கோயில், சென்னை
முகவரி
அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், வரதராஜ பெருமாள் கோவில் வீதி, அப்பல்லோ மருத்துவமனை அருகில், தண்டையார்பேட்டை, சென்னை மாவட்டம் – 600081. போன்: +91 98402 79573
இறைவன்
இறைவன்: வரதராஜ பெருமாள்
அறிமுகம்
வரதராஜ பெருமாள் திருக்கோயில் தமிழ்நாட்டில், சென்னையின் வடக்கில் அமைந்துள்ள தண்டையார்பேட்டை புறநகர்ப் பகுதியாகும். கடற்கரையின் ஒரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பெருமாள் சிலை வடக்கு நோக்கி இருப்பது சிறப்பம்சம் என்கின்றனர். ஆண்டாள், காயத்ரி, ராமர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் உள்ளிட்ட சன்னிதிகளும் இக்கோயிலில் உள்ளன. இக்கோயில், தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது.
புராண முக்கியத்துவம்
அவர் வெறும் பெருமாள் இல்லை; வரதராஜ பெருமாள். வரம் தரும் ராஜன் என்பதால், அவர் வரதராஜ பெருமாள் ஆக இங்கு காட்சியளிக்கிறார். சென்னை, தண்டையார்பேட்டையில், 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் வீற்றிருக்கும் இந்த பெருமாள் தான், இப்பகுதியிலுள்ள பல ஆயிரம் மீனவ மக்களின் குல தெய்வம். அரசர்கள் காலத்தில், செல்வந்தர் ஒருவர், தான் கொடுத்த கடனுக்கு ஈடாக, அவர் வீட்டில் இருந்த பெருமாள் சிலையை, கட்டை வண்டியில் எடுத்து வந்து, தண்டையார்பேட்டை காட்டில், யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பின், மக்களால் கண்டெடுக்கப்பட்டு, அதே இடத்தில் சிறிய அளவிலான கோயிலை மக்கள் எழுப்பியதாக செவிவழி வரலாறு கூறுகிறது. பெருமாளை குல தெய்வமாக வழிபடும் மீனவ மக்கள், ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம், விரதம் இருந்து, தங்கள் வேண்டுதல்களை அவரது பாதங்களில் சமர்ப்பிக்கின்றனர். இவ்வழக்கம். பல தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது. தங்கள் வாழ்வின் மாற்றங்கள், முன்னேற்றங்களுக்கு வரதராஜ பெருமாள் தரும் வரமே காரணமென்பது, இம்மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
நம்பிக்கைகள்
ஜாதக கோளாறு, திருமண தடை, தோஷம் உள்ளோர், குழந்தைப்பேறுக்காக இங்கு பிரார்த்திக்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
இக்கோவிலின் முக்கிய சிறப்பு, பெருமாளுக்கு குழந்தையை தத்து கொடுப்பது. இதை ஒரு பரிகார நிகழ்ச்சியாக பக்தர்கள் கடைபிடிக்கின்றனர். ஜாதக கோளாறு, திருமண தடை, தோஷம் உள்ளோர், தம் குழந்தையை பெருமாளுக்கு தத்து கொடுப்பர்; பின் பெருமாளிடம் இருந்து தத்தெடுக்கின்றனர். இதுவரை, 5,000க்கும் மேற்பட்டோர், குழந்தைகளை பெருமாளிடம் இருந்து தத்தெடுத்துள்ளனர். மலேஷியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வந்தவர்களும், குழந்தைகளை பெருமாளுக்கு தத்து கொடுக்கின்றனர். பெருமாளுக்கு குழந்தைகளை தத்து கொடுத்தால், வாழ்க்கையில் அதிர்ஷ்டம் சேர்ந்து, எல்லா வித சொத்துக்களும் சேரும் ஐதீகமாக இருக்கிறது.
திருவிழாக்கள்
ஒவ்வொரு வைகாசியிலும் இங்கு பிரம்மோற்சவம் நடக்கும். புரட்டாசி மாதத்தில், ஒவ்வொரு வாரமும், புஷ்ப அலங்காரம், சந்தன காப்பு, வெண்ணெய் காப்பு என, பெருமாளுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக, ஆராதனைகள் நடக்கும்.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தண்டையார்பேட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
தண்டையார்பேட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை