Wednesday Dec 18, 2024

தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்

முகவரி :

தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்,

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் – 613002.

இறைவன்:

தஞ்சபுரீஸ்வரர்

இறைவி:

ஆனந்தவல்லி அம்மன்

அறிமுகம்:

 அஷ்டலட்சுமிகளும் வழிபட்டதாலும் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் பூஜித்ததாலும் இத்தலத்து இறைவன் தன்னை வழிபடுவோருக்கு சகல சம்பத்துகளையும் வாரி வழங்குவதாக ஐதீகம்.

தஞ்சை மாநகரில் கி.பி பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் கட்டிய பிரகதீசுவரர் என்னும் பெரு உடையார் கோவில் தொடங்கி, அதன்பின் வந்த நாயக்கர்களும், மராட்டியர்களும் தங்களது பக்தியினையும் கலை உள்ளத்தையும் வெளிப்படுத்த சிறியதும் பெரியதுமான நூற்றுக்கணக்கான சிவ, வைணவ ஆலயங்களை கட்டியுள்ளனர். அவற்றுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல பழமையான தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் நகரின் வடக்கு எல்லையில் வெண்ணாற்றின் தெற்குக் கரையோரம் அமைந்துள்ளது.

குடந்தை – திருவையாறில் இருந்து தஞ்சைக்கு நுழையும் வழியிலும், தஞ்சை பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

 தஞ்சகன் வதம் எழில் சூழாத சமீ வனம் எனப்படும் இந்த வன்னிக் காட்டில் பராசர முனிவர் முதலான ரிஷிகள் சிவபூஜை செய்து தவம் இருந்த போது, அவர்களுக்கு அசுரர்கள் இடையூறு செய்து வந்தனர். முனிவர்கள் சிவனை வேண்ட, சிவனின் ஆணைப்படி சிவசக்தியான ஆனந்தவல்லி அம்மன் ஏகவீரா, ஜயந்தி, மர்தினீ, சண்டகாதினி ஆகிய சக்திகளாக உருவெடுத்து, தண்டகன், வீரன், வஞ்சகன், தஞ்சகன் ஆகிய அசுரர்களை அழித்தாள். தஞ்சகன் என்னும் அரக்கன் மரணத் தருவாயில் தன்னுடைய பெயரால் இவ்வூர் விளங்க வேண்டும் என்று மனமுவந்து வேண்டினான். அதனால் ‘தஞ்சபுரி’ என்று பெயர் வந்ததாகவும் இறைவன் தஞ்சபுரீசுவரர் என்றழைக்கப்படுவதாகவும் தஞ்சை நகரின் புகழ் கூறும் ‘அளகாபுரி மகாத்மியம்’ என்ற நூல் விளக்குகிறது. ‘அளகை’ என்றால் குபேரன் என்பதனால் அளகாபுரி என்பது குபேரனின் ஊர் என்பது புலனாகிறது. இதன் மூலம் குபேரன் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு பேறு பெற்ற செய்தி உறுதியாகிறது. அருகே உள்ள வெண்ணாறு தீர்த்த நதியாக விளங்குகிறது.

நம்பிக்கைகள்:

 எல்லா தோஷங்களையும் போக்கும் வல்லமை படைத்தவராக விளங்குவதால் பக்தர்களை ஈர்த்து அருள் பாலித்து வருகிறார். இத்திருக்கோவிலில் மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்பு உள்ளது. இது குபேரன் வழிபட்ட தலம். ஆம்.. செல்வத்துக்கு அதிபதியான குபேரன் செல்வங்களை எல்லாம் இழந்து வாடினார். செல்வங்களை மீட்பதற்காக ஒவ்வொரு சிவாலயமாகத் தங்கி வழிபாடு செய்து வந்தார். இந்த தஞ்சபுரீஸ்வரிடம் தஞ்சமடைந்து வழிபாடு செய்து வந்தபோது அவருக்கு மீண்டும் அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்றதாகவும், அதனால் இந்த இறைவன் ‘குபேரபுரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுவதாகவும் வரலாறு சொல்கிறது.

அம்பிகையின் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபம் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே அழைக்கப் படுகிறது. இதன் சுவர்களில் மூன்று பக்கங்களிலும் வண்ணக்கோலத்தில் எட்டு லட்சுமிகளும் காட்சி தருகின்றனர். அதன் தென்கிழக்கு மூலையில் சிவலிங்கத்தை லட்சுமிதேவியும், குபேரரும் பூஜை செய்யும் காட்சி சிந்தையைக் கவருகிறது. அஷ்டலட்சுமிகளும் வழிபட்டதாலும் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் பூஜித்ததாலும் இத்தலத்து இறைவன் தன்னை வழிபடுவோருக்கு சகல சம்பத்துகளையும் வாரி வழங்குவதாக ஐதீகம்.

தஞ்சம் அடைந்தவரைக் காக்கும் இறைவன் தன்னைத் தஞ்சமென்று வரும் அடியார்களைக் காப்பதனால் இறைவன் தஞ்சபுரீஸ்வரர் எனவும் அவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தருபதால் அம்பிகைக்கு ஆனந்தவல்லி அம்மன் என்ற காரணப் பெயர் விளங்குவதாகவும் பெருமையுடன் சொல்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

சுவாமி அம்மன் மூன்று நிலை கொண்ட சிறிய ராஜகோபுரத்தை தரிசித்தபடி உள்ளே நுழைந்தால் பலி பீடம், கொடி மரம், நந்தி, நீண்ட மண்டபத்தைத் தாண்டினால் பெரிய உருவில் துவார பாலகர்கள் இருக்கிறார்கள். கருவறையில் தஞ்சபுரீசுவரர். இவர் மேற்கு நோக்கி காட்சி தருவது சிறப்பானதாகும். அதே மண்டபத்தில் தெற்கு நோக்கியவாறு நின்ற கோலத்தில் ஆனந்தவல்லி அம்மன் அருளாட்சி செய்கிறார். அம்மன் சன்னிதி அருகில் ஆடவல்ல பெருமானின் செப்புத் திருமேனி திகழ்கின்றது.

சோழர் காலக் கற்றளியாக விளங்கும் இத்திருத்தலத்தில் முன்மண்டபம் மராட்டிய அரசி காமாட்சி பாய் என்பவரால் நிறுவப்பட்டுள்ளது. தேவகோட்டத்தில் துர்க்கை, லிங்கோத்பவர், பிரம்மன் இருக்கிறார்கள். துர்க்கைக்கு எதிரில் சிறிய கோவிலில் சண்டிகேசுவரர் அமர்ந்திருக்கிறார். வெளிச்சுற்றில் சுவாமிக்கு எதிரே கிழக்கு பார்த்தபடி விநாயகர், வில் ஏந்திய முருகப்பெரு மான், அய்யப்பன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூர்த்தங்கள் வழிபடப்படுகின்றன. தட்சணாமூர்த்தி சன்னிதிக்கு எதிரேயும் கொடிமரத்துக்கு அருகேயும் தலவிருட்சமான வன்னிமரங்கள் உள்ளன. அதனடியில் வன்னி லிங்கமும் இருக்கின்றன. பக்கத்தில் நவக்கிரகங்களின் சன்னிதி உள்ளது. கோவிலின் திருச்சுற்றில் வடக்கு மதில் ஓரம் தெற்கு நோக்கிய படி பஞ்சமுக ஆஞ்சநேயர் இருக்கிறார்.

திருவிழாக்கள்:

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட  இத்திருக்கோவிலில் பிரதோஷம், திருவாதிரை, மகாசிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

p>

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top