Wednesday Dec 18, 2024

தச்சூர் பிச்சீஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை

முகவரி :

தச்சூர் பிச்சீஸ்வரர் திருக்கோவில்,

தச்சூர் ஆரணி மாவட்டம்,

திருவண்ணாமலை மாவட்டம் – 632326.

இறைவன்:

பிச்சீஸ்வரர்

இறைவி:

பிரகன்நாயகி

அறிமுகம்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது, தச்சூர் என்ற ஊர். இங்கு எல்லாவித சர்ப்ப தோஷங்களில் இருந்தும் விடுதலைத் தருகின்ற பிச்சீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில், ஆரணியில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தச்சூர்.

புராண முக்கியத்துவம் :

 இந்த பிரபஞ்சத்தை, அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு நாகங்கள் தாங்கிக் கொண்டிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த எட்டு பேரும்தான், அனைத்து நாகங்களுக்கும் தலைமையானவர்கள். இந்த எட்டு சர்ப்ப ராஜாக்களும், வலிமை, தலைமைப்பதவி, தீர்க்காயுள் ஆகிய வரங்கள் வேண்டி, பூமியில் இருந்த சிவாலயங்கள் பலவற்றுக்குச் சென்று சிவலிங்க பூஜை செய்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த எட்டு சர்ப்பங்களும் ஒன்றாக சேர்ந்து, தன் இனத்தவர்களான சர்ப்பங்கள், மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் செய்த பாவங்களுக்காக விமோசனம் வேண்டி வழிபட்டது இந்த ஆலயம் என்கிறது, ஆலய தல வரலாறு.

பழங்காலத்தில் தச்சூர் என்ற இந்த இடம், வாசனை மிகுந்த முல்லை வகையைச் சேர்ந்த பிச்சி மரங்கள் நிறைந்த பிச்சி வனமாக இருந்தது. இந்த வனத்திற்குள்தான் சுயம்புவாக தோன்றிய பிச்சீஸ்வரர் இருந்தார். அவரை அனுதினமும், எட்டு சர்ப்பங்களும் பிச்சி மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தனர்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், அந்த எட்டு சர்ப்பங்களின் முன்பாகவும் தோன்றி, உலகில் உள்ள அனைத்து சர்ப்பங்களின் பாவங்களையும், சாபங்களையும் போக்கி, அவர்களுக்கு என்று தனி உலகத்தை (நாகலோகம்) ஏற்படுத்திக் கொடுத்து அருளினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அந்த எட்டு நாகங்களும் இன்றும், இத்தல ஈசனை வழிபாடு செய்து வருவதாக நம்பப்படுகிறது. பல நாகங்கள் இந்தப் பகுதியில் உலாவுவதை, இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் அதற்குச் சான்றாகக் காட்டுகின்றனர்.

சதா சர்வ காலமும் சிவபெருமானையே சிந்தித்துக் கொண்டிருக்கும் சித்தர்களில் ஒருவர், அகப்பேய் சித்தர். இவர் தினமும் அருவமாக இத்தலத்திற்கு வந்து, அரவங்கள் (பாம்புகள்) வழிபட்ட இவ்வாலய சிவனை வழிபட்டுச் செல்வதாக அகத்தியர் நாடி சொல்கிறது. அப்படி அகப்பேய்ச் சித்தர் வழிபடும் சமயம், சில அபூர்வ நிகழ்வுகள் இங்கு நடந்துள்ளதாக இந்த ஊர் மக்கள் சிலாகித்துக் கூறுகின்றனர்.

நம்பிக்கைகள்:

சர்ப்ப சாபம், சர்ப்ப தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆலயத் திற்கு வருகை தந்து, பிச்சீஸ்வரரையும், பிரகன்நாயகி அம்மனையும் வழிபாடு செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

சோழர் காலத்திற்கு முன்பு இந்த ஆலயத்தின் சிவலிங்கம் புற்றுக்குள் மறைந்திருந்தது. ஒருவரின் கனவில் இங்கு சிவலிங்கம் இருப்பதாக தெரியவர, இந்த புற்று அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது கடப்பாரை, புற்றுக்குள் இருந்த சிவலிங்கத்தின் மேற்பகுதியில் பட்டு ரத்தம் வந்ததாகவும், ஈச்சம் கீற்றுகளைக் கொண்டு சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் தைத்ததாகவும் ஒரு செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் தையலூர் என்று அறியப்பட்டு வந்த இந்த ஊர், தற்போது ‘தச்சூர்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆலயத்தை முதலாம் பராந்தகச் சோழன் கட்டியிருக்கிறார். ஆனால் அந்தக் கட்டிடம் பல்வேறு காரணங்களால் வழிபாடு இல்லாமல் சிதைவை சந்தித்தது. இதனால் ஊர் மக்கள் நன்கொடையால் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது.  தச்சூர் ஊரின் வடகிழக்கு திசையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

ஆலய கருவறைக்குள் சதுர வடிவ ஆவுடையாருடன் சுயம்பு மூர்த்தமாக பேரருள் பொழிகின்றார், பிச்சீஸ்வரர். சிவலிங்கத்தின் இடப்பக்கம் கடப்பாரையால் வெட்டுப்பட்டத் தழும்பு பள்ளமாக உள்ளது.  தினந்தோறும் அகப்பேய் சித்தரால் வழிபடப்படும் இறைவன் ஆவார். அவ்வப்போது நாகங்களும் இவரை பூஜிக்கின்றன.  ஆலயத்தை வலம் வரும் போது, வாமபாகத்தில் தனியாக சன்னிதி கொண்டு வீற்றிருந்து அருள்புரிகிறார், அன்னை பிரகன்நாயகி. ஆலயத்தின் ஈசான திசையில் நவக்கிரகங்களும், காலபைரவரும் வீற்றிருக்கின்றனர்.  இந்த ஆலயத்தின் தல விருட்சமாக பிச்சி மரமும், தீர்த்தமாக, கார்கோடக தீர்த்தம் இருக்கிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தச்சூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top