Saturday Jan 18, 2025

தகட்டூர் பைரவநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

தகட்டூர் பைரவநாதர் திருக்கோயில், தகட்டூர் அஞ்சல், திருத்துறைப்பூண்டி (வழி), வேதாரண்யம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 614714.

இறைவன்

இறைவன்: பைரவநாதர்

அறிமுகம்

தகட்டூர் பைரவநாதர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பைரவர் கோயிலாகும். இக்கோயில் வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலையில் வாய்மேட்டிற்கு அருகே உள்ளது. வேதாரண்யத்திற்கு மேற்கில் 20 கிமீ தொலைவில்,முள்ளியாற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் பைரவர் ஆவார். மூலவராக பைரவர் உள்ள கோயில்கள் குறைந்த அளவில் உள்ள நிலையில் இக்கோயில் சிறப்பினைப் பெறுகிறது. மகாமண்டபத்தில் ஐந்தெழுத்து மந்திரத்தினைக் கொண்ட யந்திரம் உள்ளதால் தகட்டூர் என்று பெயர் பெற்றது. திருச்சுற்றில் விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, தகழீசர், முருகன் சன்னதிகள் உள்ளன. இத்தலம் சுந்தரர் பாடிய சோழ நாட்டு வைப்புத்தலமாகும்.

புராண முக்கியத்துவம்

இலங்கையில் ராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார். அனுமான் லிங்கத்துடன் வரும்போது, அவருடன் மகாபைரவரும் வந்தார். கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டிபைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். அதுபோல் காசி லிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விழங்க இறைவனை பிரார்த்திக்கலாம். சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

சிறப்பு அம்சங்கள்

தகட்டூரிலுள்ள பைரவநாத சுவாமி: கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். இவரை மூலஸ்தானத்தில் கொண்ட கோயில் தமிழகத்தில் இதுமட்டுமே.

திருவிழாக்கள்

சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்துநாள் விழா நடக்கிறது. ஞாயிறு ராகுகாலமான மாலை 4.30-6 மணி, தேய்பிறை அஷ்டமி, கார்த்திகையில் பைரவாஷ்டமி காலங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. மனோபலம், வியாதி நிவர்த்தி, நியாயமாக நினைப்பவை நிறைவேற தேய்பிறை அஷ்டமியன்று மாலை 5- 8மணிக்குள் யாகம் நடத்தப்படுகிறது. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வாய்மேடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருத்துறைப்பூண்டி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top