Friday Nov 15, 2024

ஞானமலை முருகப்பெருமான் திருக்கோயில், இராணிபேட்டை

முகவரி :

ஞானமலை முருகப்பெருமான் திருக்கோயில்,

ஞானமலை, மங்கலம்,

இராணிபேட்டை மாவட்டம் – 635812.

இறைவன்:

முருகப்பெருமான்

அறிமுகம்:

 ஞான மூர்த்தியான முருகப்பெருமான் குடிகொண்ட ஒரு மலையே ஞான வடிவில் அமைந்துள்ளது. அதன் காரணமாகவே அந்த மலை `ஞானமலை’ என்றே போற்றப்படுகிறது. இதை நாம் சொல்லவில்லை. மகாஞானியர்களும், யோகியர்களும்தாம் இதை `ஞானமலை’ என்று கொண்டாடியிருக்கிறார்கள். வேலூர் மாவட்டத்தின் காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் போகும் வழியில், 16 கி.மீ தூரத்தில் மங்கலம் என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவில் ஞானமலையின் அடிவாரம் உள்ளது. 

புராண முக்கியத்துவம் :

 வண்ணக்குறமகள் வள்ளிப்பிராட்டியை கரம் பற்றிய முருகப்பெருமான், வள்ளிமலையிலிருந்து திருத்தணிகை மலைக்குப் புறப்பட்டார். வழியில் தென்பட்டது ஒரு சிறிய குன்று. குன்றென்றாலே குமரப்பெருமானுக்குக் குதூகலம் அல்லவா? வள்ளியம்மையோடு முருகப்பெருமான் அந்தக் குன்றில் தங்கினார். கொஞ்சம் இளைப்பாறினார். அந்த மலைதான் ஞானமலை என்று புராணங்கள் கூறுகின்றன. அதற்கு அழுத்தமான சான்றாக முருகப்பெருமானின் திருவடிச் சுவடுகளும் இங்கு காட்சியளிக்கின்றன. 

மலையடிவாரத்திலிருக்கும் ஞானமலை ஆசிரமத்தில் `குறமகள் தழுவிய குமரன்’ உற்சவ சிலையை தரிசிக்கலாம். மலையடிவாரத்தில் அழகே வடிவான `ஞானஸித்தி விநாயகர்’, கிராம தேவதை `பொன்னியம்மன்’ ஆலயங்களை வணங்கிவிட்டு மலைமீது ஏறப் படிக்கட்டுகளை கடக்க வேண்டும். வழியில் அருள்பாலிப்பவர் `ஞான தட்சிணாமூர்த்தி’. இப்படிக் காணும் வழியெங்கும் ஞானக்கடவுளர்களின் தரிசனத்தைக் கண்டவாறே மலை உச்சியை அடைந்தால் ஒரு முகம், நான்கு திருக்கரங்கள் கொண்ட ஞான முருகப்பெருமான் வள்ளி, தேவசேனாவோடு காட்சியளிக்கிறார். 

ஜபமாலை, கமண்டலம் தாங்கி, வலக்கை அபயமுத்திரை காட்ட, இடக்கையை இடுப்பில் வைத்தவாறு `பிரம்ம சாஸ்தா’ உருவில் இங்கு முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். பிரம்மனுக்கு வேத ரகசியம் சொன்ன வடிவம் இது என்பதால், இங்கு முருகப்பெருமான் குருவின் அம்சமாக ஞானத் திருவுருவாகக் காட்சியளிக்கிறார். இவரைத் தரிசிப்பவர்கள் அஞ்ஞானம் அழிந்து ஞான ஒளி பெற்று வாழ்வில் வளம் பெறுவார்கள் என்கிறது தல வரலாறு. 

திருக்கோயிலைச் சுற்றிவிட்டு இன்னும் மலையின் மீதேறிச் சென்றால் தேவசுனை, ஞானகிரீஸ்வரர் சந்நிதி, ஞானவெளி சித்தரின் ஜீவசமாதி, முருகப்பெருமானின் திருவடித் தடங்கள் என்று மலையெங்கும் அதிசயக் காட்சிகள் விரிந்துகிடக்கின்றன. ஞானமலையின் மீதிருந்து பார்த்தால் வள்ளிமலை, திருத்தணிகை மலை தெரிகிறது. இந்த மூன்று மலைகளும் ஒரு முக்கோண வடிவில் அமைந்திருப்பதும் ஓர் அதிசயச் சிறப்பு.

பல்லவர் காலத்து கோயில் என்று சொல்லப்படும் ஞானமலையில் 14-ம் நூற்றாண்டு காளிங்கராயன் காலத்துக் கல்வெட்டு ஒன்று கோயிலின் திருப்பணியை விவரிக்கிறது.  வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் மகிழ்ந்து போற்றிய மாமலை இது. இன்றும் ஞானம் தேடி வரும் பக்தர்களுக்கு ஞான ஆசிரமமாக இந்த மலை விளங்கி வருகிறது. 

நம்பிக்கைகள்:

இங்குள்ள `குறமகள் தழுவிய குமரன்’ திருக்கோலத்தைத் தரிசித்தால் தம்பதிகளுக்கிடையே உருவான எல்லாச் சிக்கல்களும் நீங்கி ஒற்றுமை பிறக்கும் என்கிறார்கள்.

திருவிழாக்கள்:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, வைகாசி விசாகம் என மாதம்தோறும் விழாக்களால் சிறப்புப் பெறும் இந்த அற்புத மலை கல்வி, கலைகளில் சிறப்பான இடத்தைப் பெற விரும்பும் அன்பர்களுக்கு ஒரு சிறப்பான தலம் எனப்படுகிறது. 

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வேலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top