சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், அருப்புக்கோட்டை
முகவரி
அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், சொக்கலிங்கபுரம், திருச்சுழி ரோடு, அருப்புக்கோட்டை – 626101.
இறைவன்
இறைவன்: சொக்கநாதர் இறைவி: மீனாட்சி
அறிமுகம்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் போன்றே தோற்ற மாதிரியில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ள சொக்கலிங்கபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக சொக்கநாதர் உள்ளார். இறைவி மீனாட்சி ஆவார். இராஜகோபுரம் 5 நிலை, 5 கலசங்களுடன் உள்ளது. சிவன் சந்நிதிக்கு வலதுபுறம் சோமாஸ்கந்தர் சந்நிதியும், அடுத்து மீனாட்சி சந்நிதியும் உள்ளது. மதுரை கோயிலைப்போலவே இங்கும் சிவனுக்கு வலது புறம் மீனாட்சி அருள்பாலிப்பதால் இது திருமணத்தலம் எனப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
மாறவர்ம சுந்தரபாண்டிய மன்னன், தன் ராணியுடன் பேசிக் கொண்டிருந்தான். அப்போது ராஜகுரு பரஞ்ஜோதி முனிவர், அவசர வேலையாக மன்னனைக் காண வந்தார். நீண்ட நேரம் காத்திருந்தும் மன்னன் வெளியே வரவில்லை. காவல் நின்றவனிடம், தான் காத்திருந்த தகவலை மன்னனிடம் தெரிவிக்கும்படி கூறிவிட்டு, தான் குடியிருந்த மணலூர் ஆஸ்ரமத்திற்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து, மன்னனுக்கு ராஜகுரு காத்திருந்த தகவல் தெரிவிக்கப் பட்டது. வருத்தமடைந்த மன்னன் ராஜகுருவை ஆஸ்ரமத்திற்கு சென்று வணங்கி, தனது தவறை பொறுத்தருளுமாறு வேண்டினான். மன்னனை மன்னித்த ராஜகுரு, குருவை நிந்தித்த தோஷம் நீங்கவும், குரு சாபம் விலகவும், செங்காட்டி ருக்கை இடத்துவளி எனப்படும் அருப்புக்கோட்டையில் சிவனுக்கு கோயில் கட்டி வழிபடும் படி கூறினார். இதனடிப்படையில் மாறவர்ம சுந்தரபாண்டியமன்னனால் இந்தக்கோயில் கட்டப்பட்டது. இங்குள்ள மூலவர் சொக்கநாதர் பக்தர்ளை சொக்க வைப்பவர்.
நம்பிக்கைகள்
கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள மேதா தட்சிணாமூர்த்திக்கும், சரஸ்வதிதேவிக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இது சோமாஸ்கந்த அமைப்புள்ள கோயில் என்பதால் திருமணத்தடை நீக்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் சிறந்த தலமாக விளங்குகிறது. குறிப்பிட்ட பருவத்தில் ருது ஆகாத பெண்கள் வழிபாடு செய்தால் பலன் கிடைக்கிறது.
சிறப்பு அம்சங்கள்
மார்ச் 20 முதல் 30 வரை மூலவர் மீது சூரிய ஒளி படரும். இங்குள்ள சிவனை வழிபடும் முன் கோயிலுக்கு அருகிலுள்ள படித்துறை விநாயகரை வழிபாடு செய்து, சிதறுகாய் உடைப்பது மரபு. படித்துறை விநாயகர் ஜடாமுடியுடன் தரிசனம் தருகிறார்.
திருவிழாக்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் போலவே அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடைபெறுகிறது. தமிழ் மாதப்பிறப்பன்றும் சமயக்குரவர்கள் நால்வருக்கும், நாயன்மார்களுக்கும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, புது வஸ்திரம் சாத்தப்படும். தமிழ் மாத கடைசி வெள்ளியன்று திருவிளக்கு பூஜை நடக்கும்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அருப்புக்கோட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
0