சேங்காலிபுரம் ஸ்ரீ சோளேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
அருள்மிகு ஸ்ரீ சோளேஸ்வரர் திருக்கோயில், சேங்காலிபுரம், திருவாரூர் மாவட்டம் – 612603.
இறைவன்
இறைவன்: சோளேஸ்வரர் இறைவி: நிஸ்துலாம்பிகை
அறிமுகம்
சேங்காலிபுரம் ஸ்ரீ சோளேஸ்வரர் திருக்கோவில், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம், சேங்காலிபுரத்தில் அமைந்துள்ள சிவன் கோவில். சேங்காலிபுரம் சக்தி திருத்தலம். சிவனும் காளியின் மறுவடிவான அம்பிகையும் உலக மக்கள் குறை தீர்க்க திருக்காட்சி அளித்த தலம் என்பதால் ’சிவன் காளிபுரம்’ என்று அழைக்கப்பட்டு பின்னர், பெயர் மருவி ’சேங்காளிபுரம்’ என்றும், பின்னும் ’சேங்காலிபுரம்’ என்றும் மருவியது. இத்தல அம்பிகை ’ஸ்ரீநிஸ்துலாம்பிகை’ என்று சமஸ்கிருதத்திலும் ’ஒப்பில்லா மணியம்மை’ என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார். பக்தர்களின் வேண்டுதலுக்கு உடனடியாக செவிசாய்த்து அருள் புரிவதில் தமக்கு ஒப்பில்லாதவராக அருள் செய்வதால் ’ஒப்பில்லா மணியம்மை’ என்ற பெயரில் வழங்கப்படுகிறார்
புராண முக்கியத்துவம்
பரமேஸ்வரன், கங்கையிலிருந்து புனித நீரை எடுத்து விஷ்ணுவிடம் கொடுத்து விநாயகரிடம் சேர்த்துவிடக் கேட்டுக் கொண்டார். மகாவிஷ்ணுவும் அந்த தீர்த்தத்தைக் கொணர்ந்து சேங்காலிபுரம் திருத்தலத்தில் தீர்த்தமாகப் பிரதிஷ்டை செய்து விநாயகரிடம் அளித்தார். விநாயகர் அதில் நீராடி, பார்வதி உடனுறை பரமேஸ்வரனை வணங்கி ஆசி பெற்றார். உலக நன்மைக்காக பிரம்மதேவர் இங்கு நீண்ட காலம் தங்கியிருந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்தார். அப்போது சிவபெருமான் பிரம்மலிங்கம், வேதலிங்கம், ஜோதிலிங்கம், சோளேஸ்வரலிங்கம் என நான்கு திசையிலும் நான்முகனின் நான்கு முகங்களுக்கும் ஒவ்வொருவராய் தரிசனம் தந்தார். கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய முப்பெரும் சக்திகளாக ’ஆக்ஞை விநாயகராக’ அமைந்துள்ளார். சக்கர தீர்த்தம் நோக்கி கிழக்கு நோக்கி காட்சி தரும் சோளேஸ்வரப் பெருமானின் எதிரில் ஒன்பது நவக்கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் நின்றவாறு சிவபெருமானைப் பார்த்தபடி அமைந்து உள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். கோள்கள் வலிவற்ற தலங்களில் தான் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும் என்பதால், நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் சோளேஸ்வரப் பெருமானை வழிபட தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது.
நம்பிக்கைகள்
மகாவிஷ்ணு பிரதிஷ்டை செய்த தீர்த்தம் ’சக்கர தீர்த்தம்’ என்று பூஜிக்கப்பட்டு வருகிறது. இதில் அமாவாசை, சோமவாரம், பிரதோஷம் போன்ற புண்ணிய தினங்களில் நீராடி, சோளேஸ்வரப் பெருமானை வணங்க, பாவங்கள் நீங்கி மேன்மையடைவார்கள் என்று மிகப்புராதன நூல்களான ’பிரம்மாண்ட புராணம்’, பவிஷ்யோத்ர புராணம், சாம்ப புராணம் ஆகியவை கூறுகின்றன. சக்கர தீர்த்தக்கரையில் உள்ள கல்யாண வரசித்தி விநாயகரை திருமணத் தடைகள் உள்ளவர்கள், சக்கர தீர்த்தத்தில் நீராடி மூன்று சங்கடஹர சதுர்த்தி நாட்களில் வழிபட்டால், தடைகள் நீங்கி நல்ல மணவாழ்க்கை அமையப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
அனந்தராம தீட்சிதரால் இத்தலத்து இறைவன் குறித்து பாடிய பத்து பாடல்கள் “ஸ்ரீநிஸ்துலாம்பிகை சமேத ஸ்ரீ சோளேஸ்வர தசகம்” என்று வழங்கப்படுகின்றன. விக்கிரம சோழன் புனரமைப்புப் பணிகள் நடத்தியுள்ளதையும், சோழர்களால் மறுசீரமைக்கப்பட்ட சிவன் கோயில் என்பதால் இறைவனுக்கு ’சோழ ஈஸ்வரன்’ என்று பெயர் ஏற்பட்டதையும் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது. சோழ மன்னர்களும், சாளுக்கிய மன்னர்களும் கோயிலுக்கும், வேதம் ஓதுவோருக்கும் நன்கொடைகள் அளித்ததும் கல்வெட்டுகளில் பதிவாகியிருக்கின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குடவாசல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கொரடாச்சேரி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி