செவ்வாய்பிரதோஷம்
பிரதோஷம் சிவனுக்குரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்த படியாக முக்கிய இடம் பிடிப்பது பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். சிவ பெருமான், ஆலகால விஷத்தை குடித்து உலக உயிர்களை காக்க நீல கண்டனாக காட்சி அளித்த சமயத்தில், தேவர்கள் சிவனை வழிபட்டனர். அவர்களுக்கு நந்தியின் இரு நம்புகளுக்கு இடையே சிவன் காட்சி தந்த காலமே பிரதோஷ காலம் எனப்படுகிறது. அனைத்து விதமான பாவங்களையும், தோஷங்களை நீக்கக் கூடிய வழிபாட்டையே பிரதோஷம் என்கிறோம்.
செவ்வாய் பிரதோஷம் :
செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷத்தின் போது நடக்கும் வழிபாட்டில் கலந்து கொண்டால் நோய் மற்றும் கடன் பிரச்சனைகள் நீங்கும். செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புத மான வழிபாடு ஆகும். செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது. பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிவ வழிபாடு செய்வதால் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.
முக்கியமான 8 பிரதோஷங்கள் :
ஒரு வருடத்தில் வரும் 24 பிரதோஷங்களிலும் கலந்து கொள்ள முடியாதவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷங்களிலாவது கலந்து கொள்ள வேண்டும். இதனால் ஒரு வருடத்தின் அனைத்து பிரதோஷங்களிலும் கலந்து கொண்ட பலனை பெற முடியும். அவரவர் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் வரும் பிரதோஷத்தில் கலந்து கொள்வது மிகவும் சிறப்பானது. இதனால் கவலைகள் தீரும்.