Sunday Nov 24, 2024

செவிலிமேடு சாலக்கிணறு இராமானுஜர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு இராமானுஜர் திருக்கோயில், சாலக்கிணறு, செவிலிமேடு, காஞ்சிபுரம் மாவட்டம் – 631502.

இறைவன்

இறைவன்: இராமானுஜர்

அறிமுகம்

காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேட்டில் ராமாநுஜருக்கென்று பிரத்யேக கோவில் உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து ஓரிக்கை செல்லும் சாலையில், ராமாநுஜருக்காக கட்டப்பட்ட இந்த ஆலயம், அரிய வரலாற்றைக் கொண்ட அற்புத ஸ்தலமாக விளங்குகிறது. பெருமாளுக்காக ராமாநுஜர் நீர் அள்ளிய கிணறு சாலக் கிணறு என அழைக்கப்படுகிறது. ராமாநுஜர் காலத்திற்குப்பின், சாலக்கிணற்றிலிருந்து இன்றும் தினந்தோறும் தவறாமல் நீர் கொண்டு செல்லப்பட்டு, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புராண முக்கியத்துவம்

காஞ்சியிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள திருப்புட்குழி என்ற ஊரில், யாதவபிரகாசர் என்ற வேத விற்பன்னரிடம் வேதங்களை கற்ற ராமாநுஜர், இயற்கையிலேயே அதீத திறமை கொண்டவராக விளங்கினார். குரு யாதவப் பிரகாசரிடம் வெகுசீக்கிரம் வேதங்களை கற்றுணர்ந்த ராமாநுஜர், வேதங்களில் உள்ள நிறை குறைகளை குருவிடம் விவாதிப்பார். பல சமயங்களில் அது குருவை சங்கடப்படுத்திவிடும். அதுவே ராமாநுஜருக்கு பிரச்னையாகிப்போனது. குருவுடனேயே வேதங்கள் தொடர்பான தர்க்கங்களை செய்தது யாதவப்பிரகாசருக்கும் அவருக்குமிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. குருவை மிஞ்சிய சிஷ்யன் ராமாநுஜர்: இந்த நிலையில் அந்நாட்டு அரசனின் மகள் ஒருத்திக்கு புத்திசுவாதீனம் ஏற்பட்டதாக செய்தி பரவியது. மகளுக்கு பேய் பிடித்ததாக கருதிய மன்னன், யாதவப்பிரகாசரை அழைத்து தன் மகளுக்கு நோய் தீர வழிகேட்க விரும்பினான். மன்னனின் அழைப்பை ஏற்று தன் சிஷ்யன் ராமாநுஜருடன் சென்ற யாதவப்பிரகாசருக்கு அங்கு பலத்த அவமானம். ஆம்… பேயை விரட்ட அவர் எடுத்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வியிலேயே முடிந்தது. அதேசமயம் எதிர்பாராதவிதமாக ராமாநுஜரின் முயற்சி வெற்றியடைந்து, மன்னனின் மகள் நினைவு திரும்பினாள். இந்த சம்பவத்திற்குப் பின் சிஷ்யனின் மேல் அளவற்ற கோபம் கொண்டார் யாதவப்பிரகாசர். ராமாநுஜரை கொல்ல சதி: இனியும் தன் சிஷ்யனை விட்டுவைப்பது தனக்கு நல்லதல்ல என கருதி ஒரு சதித்திட்டம் தீட்டினார். அதாவது ராமாநுஜரை காசிக்கு அழைத்து சென்று, அவரை கங்கையில் தள்ளி சாகடித்துவிடுவது என்பது அவரது திட்டம். திட்டப்படி ராமாநுஜரை வேறு காரணம் கூறி காசிக்கு அழைத்துக்கொண்டு பயணமானார் யாதவப்பிரகாசர். ஆனால் குருவின் சதித்திட்டத்தை சக சிஷ்யரான கோவிந்த பட்டர் மூலம் முன்கூட்டியே அறிந்துகொண்ட ராமாநுஜர், குருவிடம் இருந்து தப்பிக்க எண்ணி கால்போன போக்கில் திக்கு தெரியாமல் ஓடினார். அப்படி நள்ளிரவு நேரம் ஆள் அரவமற்ற ஒரு பகுதிக்கு வந்த அவர், அதற்கு மேல் செல்ல வழி தெரியாமல் தவித்துநின்றார். அப்போது எதிர்திசையில் ஒரு வேடுவ தம்பதி வந்தனர். அவர்களை கண்டு தைரியமான ராமாநுஜர் அவர்களிடம், காஞ்சிபுரம் செல்ல வழி கேட்க அதற்கு அவர்கள், ‘அப்படியா நாங்களும் அங்குதான் செல்கிறோம். எங்களை பின்பற்றி வா’ என ராமாநுஜத்தை உடன் அழைத்துக்கொண்டனர். பொழுதுபுலர்ந்தவேளை பயணக்களைப்பினால் வேடுவச்சிக்கு உடல் சோர்வடைந்து, அதை தன் கணவனிடம் தெரிவித்தாள். பதறிய வேடுவன், ராமாநுஜரிடம் ‘அருகில் உள்ள நீர்நிலை ஏதாவது ஒன்றிலிருந்து தன் மனைவிக்கு தண்ணீர் கொண்டு வருமாறு’ உதவி கேட்கிறான். பிரதி உபகாரமாக ராமாநுஜர் அதற்கு சம்மதித்து ஓடி அருகிலிருந்த கிணறு ஒன்றிலிருந்து நீர் அள்ளிக்கொண்டு திரும்பினார். ஆனால் ராமாநுஜருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு வேடுவ தம்பதியை காணவில்லை. காட்சி தந்த வரதராஜபெருமாள்: வழிப்போக்கன் ஒருவர் மூலம், தான் இப்போது இருப்பது காஞ்சிதான் என தெரியவர, தன்னை காஞ்சிக்கு அழைத்துவந்த அந்த தம்பதி யார் என புரியாமல் விழித்து நின்றார். அப்போது திடீரென ஒளிப்பிழம்பு தோன்ற விக்கித்து நின்றார். சற்று தூரத்தில் வரதராஜபெருமாள் கோவிலின் ஆலய கோபுரத்திலிருந்து ஒரு பிரம்மாண்ட காட்சி. ஆம்…வேறு யாருமல்ல வரதராஜபெருமாள்! திக்கு தெரியாமல் விழித்த தம்மை, வேடுவ தம்பதி உருவில் வந்து காப்பாற்றி காஞ்சியில் பாதுகாப்பாக கொண்டு சேரத்தது வரதராஜபெருமாளும், பெருந்தேவி தாயாரும்தான் என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து நின்றார் ராமாநுஜர். ஒரு சாதாரணன் ஆன தன் மீது அக்கறை செலுத்தி, தன் உயிர் காத்த பெருமாளை எண்ணி மெய்சிலிர்க்கிறார். பெருமாள் தனக்கு தரிசனம் தந்த செவிலிமேடு என்ற அப்பகுதியிலேயே தங்கி, தன் உயிர்காத்த பெருமாளுக்கு சேவையாற்ற ராமாநுஜர் முடிவெடுத்தார். அன்றிலிருந்து நாள் தவறாமல் குறிப்பிட்ட அந்த கிணற்றிலிருந்து நீர் கொண்டு போய் பெருமாளின் கைங்கர்யத்துக்கு செலவிட்டார். இதன் பின்னர்தான் திருச்சிக்கு சென்று ரங்கநாதருடன் இரண்டற கலந்ததாக வரலாறு சொல்கிறது. அந்த பகுதியில் பின்னாளில் ராமாநுஜருக்கு கோவில் அமைக்கப்பட்டது.

நம்பிக்கைகள்

ராமாநுஜர் வாழ்ந்ததாக சொல்லப்படும் செவிலிமேடு கோவிலில், 3 வித பரிகாரங்கள் தோஷ நிவர்த்திக்காக செய்யப்படுகின்றன. திருமண தோஷம் உள்ளவர்கள் மற்றும் பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் தொடர்ந்து 5 செவ்வாய்கிழமைகள் மாலை 3 லிருந்து 4 .30 மணிக்குள்ளாக 2 நெய்தீபங்கள் ஏற்றி ராமாநுஜரை வழிபட்டால், அந்த குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பது நம்பிக்கை. திருவாதிரை அன்று விடியற்காலை, கோவிலில் அங்கபிரதட்சணம் செய்து, பின் அதே ஈர ஆடையுடன் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ராகு மற்றும் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இந்த இரண்டினாலும் பாதிப்படைந்தவர்களுக்கும் இங்கு பரிகாரங்கள் உண்டு. ஒரு சனிக்கிழமையில் ராமாநுஜருக்கு வஜடதிரம் சாத்தி, பாலாபிஷேகம் செய்து, பின் நெய்தீபம் ஏற்றி, உடன் கேசரி நெய்வேத்தியம் செய்து படைத்தால், ராகு-கேது இணைந்த கால சர்ப்ப தோஷ பாதிப்பிலிருந்து மீளலாம் என்பது காலம் காலமான நம்பிக்கை. இதற்கு ஆதாரமாக இந்த பரிகாரங்கள் ஆலயத்தின் சுவர்களில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் வாசலில் இருந்தபடி, எந்த கோணத்திலும் பெருமாள் கோவிலின் கோபுரத்தை தரிசிக்க முடியும் என்பது இக்கோவிலின் இன்னொரு சிறப்பு. பெருமாளின் திருமஞ்சனத்திற்காக ராமாநுஜர் நீர் அள்ளிய சாலக்கிணறு, 10 வது நுாற்றாண்டை தொடும் வேளையிலும் வற்றாமல் இருப்பது பரவசமான தகவல். பொதுவாக தேங்கும் நீர் அசுத்தம் அடைந்து கெட்டுவிடும் என்ற அறிவியல் தத்துவத்தை மீறி, இறைவன் பயன்பாட்டுக்காக தினம் ஒரு குடம் அளவிற்கே நீர் அள்ளப்படும் சாலக்கிணற்றின் நீர் இன்றும் கண்ணாடி போன்று தோன்றுவது அறிவியலை மீறிய இறைவனின் திருவிளையாடல். சாலக்கிணறின் இன்னொரு சிறப்பு இது.

சிறப்பு அம்சங்கள்

ராமாநுஜரின் வாழ்வில் முக்கிய காலகட்டம் இந்த ஸ்தலம். தன்னுடன் கருத்து முரண்பட்ட ராமாநுஜரை கொல்ல முடிவுசெய்கிறார் குரு யாதவபிரகாசர். ஆனால் வேதம் கற்று சற்றும் செருக்கில்லாத ராமாநுஜரை காப்பாற்ற முடிவு செய்கிறார் பெருமாள். அதில் வியப்பு என்னவென்றால் படி தாண்டா பத்தினியான பெருந்தேவி தாயாரும் ராமாநுஜரை காக்கும் பெருமாளின் முயற்சிக்காக, தன் கணவருடன் அவரை காப்பாற்ற வந்தார் என்பதுதான். தன்னை காத்து காஞ்சியில் சேர்த்தது இறைவன்தான் என உணர்ந்த ராமாநுஜருக்கு பிரம்மாண்ட காட்சியும் தருகிறார் பெருமாள். இது ராமாநுஜத்தின் பக்தி சிரத்தைக்கும், அவர் கற்ற வேதத்திற்கும் பெருமாள் தந்தை மரியாதை. தன்னை காத்த பெருமாளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவே, பெருமாளின் திருமஞ்சனத்திற்கு இங்குள்ள சாலக்கிணற்றிலிருந்து நாள் தவறாமல் நீர் கொண்டு செல்லும் பணியை செய்தார் ராமாநுஜர். இங்கே அவர் தினம் குளித்ததாகவும் வரலாறு கூறுகிறது. இப்படி அற்புத வரலாறு கொண்டது இந்த ஆலயம். பெருமாள் ராமாநுஜருக்கு காட்சி தந்த நாளை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியிலிருந்து 12 வது நாள் அனுஷ்டான குள உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. ராமாநுஜரிடம் தன் திருமஞ்சனத்திற்காக நீரை கேட்டுப் பெற்றதால், வழக்கமான உற்சவங்களை விட இந்த உற்சவத்துக்கு ‘பெருமாளே விரும்பி கொண்டாடும் உற்சவம் என்ற சிறப்புண்டு. இந்த உற்சவத்தின்போது பெருமாள் காஞ்சியின் முக்கிய வீதிகள் வழியே, உற்சவரான ராமாநுஜருடன் ஊர்வலமாக வந்து, செவிலிமேடு ராமாநுஜர் கோவிலை அடைவார். அங்கு அவருக்கு ராமாநுஜர் சார்பில் மரியாதை செலுத்தப்படும். அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேதம், வரதராஐபெருமாளுக்கு அவர்களுக்கு விருப்பமான சாலக் கிணற்றிலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட நீரை கொண்டு, வெகு விமர்சையாக ராமாநுஜர் முன் திருமஞ்சனம் செய்யப்படும். இந்த வித அலங்காரங்களோடு பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் பெருமாள், திருமஞ்சனம் முடிந்து நேரே தனது கோவிலை அடைவதில்லை. அங்கிருந்து புறப்பட்டு பெருமாள் கோவிலின் கிழக்கு கோபுரம் அமைந்துள்ள இடத்தின் அருகே, ராமாநுஜர் வாழ்ந்த இல்லத்தை அடைந்து, அங்கு மண்டகப்படி செய்த பின்னரே கோவிலை அடைவார் என்பது விசேஷமானது. அத்தகைய சிறப்பு வாய்ந்தது இந்த திருத்தலம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

செவிலிமேடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top