Saturday Jan 25, 2025

செவலூர் ஸ்ரீ பூமிநாதர் கோவில், புதுக்கோட்டை

முகவரி

செவலூர் ஸ்ரீ பூமிநாதர் கோவில், செவலூர், திருமயம், புதுக்கோட்டை மாவட்டம் – 614622. தொலைபேசி: 04322-221084

இறைவன்

இறைவன்: பூமிநாதர் இறைவி: ஆரணவல்லி

அறிமுகம்

செவலூர் பூமிநாதர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செவலூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக பூமிநாதர் உள்ளார். லிங்கத் திருமேனி பல பட்டைகளைக் கொண்டு அமைந்துள்ளது. பூமாதேவி இந்த லிங்கத்தை ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு முறையில் பலவித காப்புகளைப் பூசி பூசித்துள்ளார். முதல் யுகமான கிருத யுகத்தில் தவமிருந்த தேவி அனைத்து யுகங்களிலும் பூமியின் பாரத்தைத் தாங்குகின்ற சக்தி வேண்டுமென்று கோரினாள். அப்போது இறைவன் பிற யுகங்களில் அவளது விருப்பம் நிறைவேறும் என்று கூறி, கலி யுகத்தில் அத்தகைய சக்தி பெறுவதற்கு பக்தர்களால் அவள் பூசிக்கப்படவேண்டும் என்றும் அதற்கு நாராயணனின் அருள் வேண்டும் என்றும் கூறினார். அவ்வாறான பக்தர்களைத் தேடி தேவி பல இடங்களுக்குச் சென்று, ஆங்காங்கே காணப்பட்ட பல சுயம்புமூர்த்திகளை தரிசித்தாள். அவ்வாறான மூர்த்திகள் பூலோக நாதர் என்றும் பூமி நாதர் என்றும் அழைக்கப்பட்டனர். அவ்வகையில் அமைந்தவரே இந்த பூமிநாதர் ஆவார். இங்குள்ள இறைவி ஆரணவல்லி ஆவார். கோயில் குளம் பிரத்வி தீர்த்தம் எனப்படுகிறது. இத்தலம் மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்ட தலம் என்ற பெருமையையுடையது. இங்குள்ள லட்சுமி நரசிம்மர் மீது எல்லா நாட்களும் சூரிய ஒளி படுவதைப்போன்று கருவறை அமைந்துள்ளது சிறப்பாகும்.

புராண முக்கியத்துவம்

இந்த உலகம் நான்கு யுகங்களைச் சந்தித்திருக்கிறது. இதில் முதல் யுகமான கிருதயுகத்தில், பூமாதேவி கடும் தவமிருந்தாள். எதிர்வரும் யுகங்களில் பூமிபாரத்தை தாங்கும் சக்தியை அதிகரித்து தர வேண்டும் என்பது அவளது வேண்டுகோள். அவள் முன் தோன்றிய சிவபெருமான், தாயே! இந்த திரேதாயுகம், துவாபரயுகத்தில் இப்பூமியைத் தாங்குவதற்குரிய சக்தியைத் தருகிறேன். ஆனால், கலியுகத்தில் இப்பூமியைத் தாங்கும் சக்தியைப் பெற இந்த தவம் போதாது. உனது பக்தர்கள் உன்னை பூஜிப்பதன் மூலமே இந்த வலிமை உனக்கு கிட்டும். இதற்கு நாராயணனின் கிருபையும் தேவை என சொல்லி மறைந்தார். இவ்வுலகில் நல்ல பக்தர்கள் யார் இருக்கிறார்கள் என தேடியலைந்த பூமாதேவி, அவள் பல தலங்களுக்கும் சென்றாள். சென்ற இடமெல்லாம் ஆங்காங்கு இருந்த சுயம்பு மூர்த்திகளை பிரார்த்தித்தாள். அவள் பிரார்த்தித்த மூர்த்திகளுக்கு பூமிநாதர், பூலோகநாதர் என்ற பெயர்கள் ஏற்பட்டது. அதில் ஒன்றே செவலூர் பூமிநாதர் கோயிலாகும்.

நம்பிக்கைகள்

பூகம்பம், நிலத்தகராறுகள் போன்றவை இத்தலத்து இறைவனை வழிபட்டால் நீங்கும். தடைபட்டுள்ள காரியங்கள், தொழிலில் தடை, கட்டட வேலைகளில் பாதிப்பு, விவசாய வளர்ச்சியின்மை, கட்டடம் கட்டும் போது வேம்பு, ஆல், அரசு போன்ற புனித மரங்களை வெட்டியதால் ஏற்பட்ட தோஷம், நாகப்புற்றுகளை அழித்த கொடுமை, கோயில் குத்தகையை கொடுக்காமல் ஏமாற்றியது, தொழில், வியாபாரத்தில் நஷ்டம், பணியில் கஷ்டம் ஆகிய துன்பங்களை அனுபவிப்போர் பூமிநாதருக்கு பூஜை செய்யலாம். இதுதவிர முதுகுவலி, மூலம், பிருஷ்ட நோய்களால் உட்கார முடியாதவர்கள் நிவாரணம் பெறவும் இங்கு விசேஷ பூஜை நடக்கிறது.

சிறப்பு அம்சங்கள்

செவலூர் அருகிலுள்ள பிருத்வி தீர்த்தம் இன்று சாதாரண குளமாகத் தோற்றமளிக்கிறது. இதன் மகிமை அளவிட முடியாதது. பித்ரு தர்ப்பணத்துக்கு ஏற்ற தீர்த்தம் இது. இத்தலத்து லிங்கம் பல பட்டைகளைக் கொண்டது. பூமாதேவி இந்த லிங்கத்தை பூஜித்த போது, ஒவ்வொரு யுகத்திலும் மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, கஸ்தூரி காப்பு, வெண்ணெய் காப்பு, மூலிகை காப்பு என பலவித காப்புகளை சார்த்தி பூஜித்ததால், இந்த பட்டைகள் உருவானதாக கூறப்படுகிறது. மகா விஷ்ணுவால் எழுப்பப்பட்ட புண்ணியத் தலம், மூலவர் லட்சுமி நரசிம்மர் மீது வருடத்தின் எல்லா நாட்களும் சூரியஒளி படுவது போல் கருவறை அமைந்திருப்பது வியப்பான ஒன்றாகும்.

திருவிழாக்கள்

சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை, மார்கழி திருவாதிரை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்ற விழாக்களாகும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

புதுக்கோட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

புதுக்கோட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top