செங்கமங்கலம் சாந்தபுரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
செங்கமங்கலம் சாந்தபுரீஸ்வரர் சிவன்கோயில்,
செங்கமங்கலம், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611108.
இறைவன்:
சாந்தபுரீஸ்வரர் எனும் சார்ந்தாரை காத்தநாதர்
இறைவி:
சாந்தநாயகி
அறிமுகம்:
கீவளூர் – சிக்கல் சாலையில் உள்ள ஆழியூர் பிரிவில் திரும்பி சிராங்குடிபுலியூர் வழியாக மூன்று கிமீ வந்தால் செங்கமங்கலம், அல்லது சிக்கலின் நேர் வடக்கில் குற்றம் பொறுத்தான் இருப்பு வழி வந்தால் இரண்டு கிமீ தூரம் தான். பௌத்தம் பெரிய அளவில் இருந்த காலகட்டத்தில் சங்கமங்கலம் என பௌத்த மக்கள் வாழ்விடமாக இருந்த ஊர் தான் இது இப்போது செங்கமங்கலம் என்றே அழைக்கப்படுகிறது. இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன, முகலிங்கேஸ்வரர் கோயில் ஒன்றும் இந்த சார்ந்தாரை காத்த நாதர் கோயிலும் உள்ளன. இக்கோயில் ஒரு ஏக்கர் பரப்பில் உள்ளது சுற்றுமதில் சுவர்களுடன் கிழக்கில் விநாயகர் முருகனுடன் அம்மையப்பன் சுதைகள் கொண்ட நுழைவாயில் உள்ளது.
இறைவன் சாந்தபுரீஸ்வரர் எனும் சார்ந்தாரை காத்தநாதர் இறைவி சாந்தநாயகி கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், அம்பிகை தெற்கு நோக்கியுள்ளார் இரு கருவறைகளையும் ஒரு இருபுறம் வாயில் கொண்ட பெரிய மண்டபம் இணைக்கிறது. விதானம் வரை கருங்கல் கொண்டு கருவறைகள் மற்றும் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. விமான பாகம் மட்டும் செங்கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது. இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக உள்ளார், அம்பிகையும் அழகிய வடிவு கொண்டு உள்ளார். முகப்பு மண்டபத்தின் வெளியில் ஒரு சிறிய நந்தியும் ஒரு கொடிமர விநாயகரும் உள்ளனர். கொடிமரம் முன்னர் இருந்திருக்கலாம்.
கருவறை கோட்டங்களில் விநாயகர் தென்முகன் மட்டும் உள்ளனர். பிரகாரம் முழுதும் சிமென்ட் கொண்டு பூசப்பட்டுள்ளது, செல்வவிநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு என இரு சிற்றாலயங்கள் உள்ளன. இரு சன்னதிக்கும் நடுவில் வில்வம் வேம்பு இணைந்த மரங்கள் உள்ளது, அதனடியில் மூன்று நாகர்கள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
600 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி