Wednesday Dec 18, 2024

சூலக்கரை நாகம்மன் திருக்கோயில், விருதுநகர்

முகவரி :

சூலக்கரை நாகம்மன் திருக்கோயில்,

சூலக்கரை,

விருதுநகர் மாவட்டம் – 626003.

இறைவி:

நாகம்மன்

அறிமுகம்:

 விருதுநகர் அருகே சூலக்கரை கிராமத்தில் உள்ள வீரபெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் நாகம்மன். நாக தோஷம் நீக்கி நல்லருள் தருகிறாள். அதேப்போல் புத்திர பாக்கியத்தையும் தந்து அருள்புரிகிறாள்.

புராண முக்கியத்துவம் :

 சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு சூலக்கரை கிராமத்தில் முனீஸ்வரன் ஆசாரி, உறவுப்பெண் மாரியம்மாவை திருமணம் செய்து கொண்டார். ஏழு மாத கர்ப்பிணியாக மாரியம்மா இருந்தபோது ஒரு நாள் காலை வயல் வெளிக்கு சென்ற முனீஸ்வரன் வரப்பு மேட்டில் ஒரு நல்ல பாம்பை கண்டார் முனீஸ்வரன்

காலடி சத்தம் கேட்ட அந்த நல்ல பாம்பு அவ்விடம் விட்டு நகர்ந்தது. இருப்பினும் கண்ட பாம்பை அடிக்காமல் விடக்கூடாது என்றெண்ணிய முனீஸ்வரன், தனது பின் இடுப்பில் சொருகியிருந்த அரிவாளை எடுத்து பாம்பின் நடு கண்டத்தில் வெட்டினார். வெட்டுப்பட்ட பாம்பு பாதி உடலோடு புதருக்குள் சென்று பதுங்கியது. துடித்த கண்டம் பகுதி சற்று நேரத்தில் உயிரற்று போனது. இந்த சம்பவம் நடந்த எட்டாவது நாள் கருவுற்றிருந்த மாரியம்மாள் குழந்தை பெற்றாள். அந்த குழந்தை பெண் தலையோடும் பாம்பு உடலோடும் இருந்தது. அப்போது தான் முனீஸ்வரன் தான் செய்த தவறை உறவினர்களிடமும், மனைவியிடமும் கூறினார்.


குழந்தை பிறந்த நாற்பத்தியோராவது நாள் முனீஸ்வரனால் தனது வால் பகுதியை இழந்த நல்ல பாம்பு, தீண்டி முனீஸ்வரன் இறந்தார். கணவன் இறந்த பின் மாரியம்மா தோட்ட காடுகளுக்கும். வயல்களுக்கும் வேலைக்கு சென்று வந்தாள். நாகத்தை பெற்றெடுத்ததால் அவளை நாகத்தின் அம்மா என்று அப்பகுதியினர் அழைத்தனர். அதுவே நாளடைவில் நாகம்மா என பெயராயிற்று.

நாகம்மாளின் கணவர் வழி உறவினர்கள் இரக்கமின்றி குழந்தை நாகத்தை கதிர் அரிவாளால் துண்டு, துண்டாக நறுக்கி, வறட்சியால் வெடித்து நின்ற வயலில் அந்த வெடிப்பு பகுதியில் துண்டுகளை வைத்து களிமண் கொண்டு அதன் மேல் பூசிவிட்டனர். நாகம்மாள் குழந்தை நாகத்தை தேடி வனத்திலும், வயல் வெளிகளிலும் அலைந்தாள். மூன்றாவது நாள் இரவில் நாகம்மாள் கனவில் தோன்றிய பாம்பு குழந்தை, உறவினர்கள் தன்னை நறுக்கி போட்டதையும், தன்னை புதைத்து வைத்த இடத்தையும் கூறியது.


மனம் வருந்திய நாகம்மாள், மறுநாள் காலை கனவில் நாக குழந்தை கூறிய வயல் பகுதிக்கு சென்று நறுக்கி கிடந்த பாம்பு துண்டுகளை எடுத்து கற்றாழை நாரில் கோர்த்து வைத்து, கையில் ஏந்தியபடி ஊருக்குள் கொண்டு வருகிறாள். மாலை ஊர் பெரியோர்கள் கூடியிருந்த ஆலமரத்தடிக்கு சென்று நியாயம் கேட்கிறாள். கூடியிருந்த பெரியோர்கள் ‘‘பெற்றது பாம்பு பிள்ளை, அதை போய் பிரச்னைன்னு கொண்டு வந்து நிக்கிறியே, போம்மா, இனி எப்படி பிழைக்கலாமுன்னு பாரு,’’ என்று பதிலுரைத்து அனுப்பினர். இதனால் மனமுடைந்த நாகம்மாள், தனக்கு நியாயம் கிடைக்காமல் சூலக்கரையில் யாரும் வசிக்க முடியாது என சாபமிட்டாள். வேகத்தோடும், கோபத்தோடும், தலைவிரி கோலத்தோடும் அங்கிருந்து விரைந்து வந்தாள். ஊர் எல்லையில் உள்ள வீரப்பெருமாள் கோயிலுக்கு வந்து கதறி அழுது உயிரை மாய்த்தாள்.


நாகம்மாள் சாபத்தை தொடர்ந்து, ஊரில் வறட்சி ஏற்பட்டது. வீடுகள், தோட்டங்கள், வயல் வெளிகள் என எல்லா இடங்களிலும் பாம்புகள் அட்டகாசம் அதிகரித்தது. பாம்பு தீண்டி இறப்பு அதிகம் நேர்ந்தது. ஊர் வாசிகள் ஒன்று கூடி நாகம்மாவுக்கு சிலை நிறுவி, பூஜை செய்தனர். பிரச்னைகள் ஓய்ந்தது. நாக தோஷம் விலகியது.

நாகம்மாள் இறந்த இடத்தில் வீரபெருமாள் கோயில் வளாகத்தில் நாகம்மாள் சிலை உள்ளது. நாகம்மாள் கையில் பாம்பு குழந்தையை வைத்தபடி அமர்ந்த நிலையில் வீற்றிருக்கிறாள்.

நம்பிக்கைகள்:

நாக தோஷம் மற்றும் புத்திர பாக்கியத்தையும் தந்து அருள்புரிகிறாள்.

திருவிழாக்கள்:

இக்கோயிலில் சிவராத்திரி அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சூலக்கரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருதுநகர்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top