Thursday Dec 19, 2024

சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோவில், திருச்சி

முகவரி

சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோவில், சீனிவாசநல்லூர், திருச்சி-நாமக்கல் சாலை, திருச்சி மாவட்டம் – 621209.

இறைவன்

இறைவன்: குரங்குநாதர்

அறிமுகம்

மகேந்திரமங்கலம் என்று அழைக்கப்பட்ட பல்லவர்கால ஊர் தற்போது சீனிவாசநல்லூர் என்றழைக்கப்படுகிறது. காவிரிக்கரையில் அமைந்துள்ள இவ்வூர் திருச்சியில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் முதலாம் ஆதித்தசோழனால் கட்டப்பட்ட முற்காலச் சோழர்கலைப்பாணியில் அமைந்த கற்றளி ஒன்று எழிலுற காட்சியளிக்கிறது. இக்கோயில் கல்வெட்டுகளில் இறைவன் திருக்குறக்குத்துறை பெருமானடிகள் என்று குறிப்பிடப்படுகிறார். குறக்குத்துறை என்பது காவரியாற்றின் குறுக்கே உள்ள துறையைக் குறிப்பிடுவதாகும். இவ்வூர் பல்லவர்காலத்தில் பிரம்மதேயமாக பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட ஊராகும். மகேந்திரமங்கலம் என்பது பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனைக் குறிக்கிறது. அவன் காலத்தில் தானமாக அளிக்கப்பட்ட இவ்வூர் கோயில் சோழர்கள் காலத்தில் கற்றளியாக்கப்பட்டு பின்பு பல கொடைகளைப் பெற்றுள்ளது. அழகிய வடிவமைப்பில் விளங்கும் இக்கோயிலில் குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் உள்ளது போன்ற அரச உருவங்கள் நின்ற நிலை சிற்பங்கள் உள்ளன

புராண முக்கியத்துவம்

இக்கோயில் இருதளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. நாற்கரமுள்ள நாகரபாணியில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை சதுர வடிவமானது. மேலும் கருவறையைத் தொடர்நது இடைநாழிகை எனப்படும் அந்தராளம் காணப்படுகிறது. அந்தராளம் என்பது கருவறைக்கும் அர்த்தமண்டபத்திற்கும் இடையில் காணப்படும் இடைவெளியாகும். அந்தராளத்தைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தைத் தொடர்ந்து முகமண்டபம் காணப்படுகிறது. விமானத்தின் 50 மீட்டர் உயரமுடையதாகவும், மண்டபம் 16 மீட்டர் உயரமுடையதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதளத்தில் யாளி வரி செல்வதால் பிரதிபந்த அதிட்டானம் என்று அழைக்கப்படுகிறது. தாங்குதளத்தில் குமுதப்பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சுவர்ப்பகுதியிலும் கல்வெட்டுகள் உள்ளன. சுவர்ப்பகுதியில் அரைத்தூண்களுக்கு இடையே கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேவக்கோட்டங்களின் இருபுறமும் இரு துணைக்கோட்டங்கள் (பஞ்சரக் கோட்டங்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் அரச உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவகோட்டங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. கூரைப்பகுதி வரை கற்றளியாகவும் , அதற்கு மேற்பகுதி சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் பாதகண்டப்பகுதியில் வியாள (யாளி) வரி செல்கிறது. சுவரின் நான்கு மூலைகளிலும் யாளிவீரன் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. சுவர்ப்பகுதியில் தென்புற தேவக்கோட்டத்தில் தென்முகக்கடவுள் ஆலமர்ச்செல்வனாக தனது உடன்கூட்டத்தாருடன் அமர்ந்துள்ளார். கோட்டப் பஞ்சரம் எனப்படும் தேவக்கோட்டத்தின் துணைக்கோட்டத்தில் பிச்சையேற்கும் பெருமான் உள்ளார். மற்றொரு துணைக்கோட்டத்தில் கைகளை கட்டியபடி பணிவாக அரச ஆண் உருவம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. மேற்குபுறத்தில் தேவகோட்டத்தில் சிற்பம் காணப்படவில்லை. தேவகோட்டத்தின் இருபுறமும் உள்ள துணைக்கோட்டங்களில் இரண்டு பெண்கள் நின்ற நிலையில் உள்ளனர். அவர்களுடைய ஆடை அலங்கார நிலையைக் காண்கையில் அரசபெண்டிராகத் திகழ்கின்றனர். அல்லது மேற்குபுறக் கோட்டத்தில் அமைந்திருந்த பெண் தெய்வத்திற்கு பணிப்பெண்களாகவும் இருக்கலாம். வடபுற தேவகோட்டத்தில் வழக்கம் போல் நான்முகன் நான்குகைகளுடன் நின்ற நிலையில் உள்ளார். அவருக்கு அருகில் உள்ள துணைக் கோட்டத்தில் ஆண் உருவம் ஒன்று நிற்கிறது. தளங்களில் சிற்பங்கள் காணப்படவில்லை. தளம் புனரமைக்கப்பட்டுள்ளது. தேவகோட்டத்தின் மகரதோரணத்தில் பூவராகர் புடைப்புச் சிற்பம் காட்டப்பட்டுள்ளது. சுவரின் அரைத்தூண்களில் உள்ள மாலைத் தொங்கலில் சிவநடனம், சண்டேசருக்கு அருள்பாலித்தல் ஆகிய சிறிய புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

சிறப்பு அம்சங்கள்

முதலாம் ஆதித்தசோழன் காலத்திய கல்வெட்டொன்று இக்கோயிலுக்கு ஒரு நொந்தா விளக்கெரிக்க அரைமா நிலம் கொடையளிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. முதலாம் பராந்தகன் சோழன் காலத்திய கல்வெட்டொன்று 156 கழஞ்சு பொன் இக்கோயிலுக்கு கொடுக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. மேலும் பராந்தகன் ஆட்சியாண்டின் மற்றொரு கல்வெட்டு காப்பியன் எழுவன் கங்காதரன் என்பவனால் ஒரு விளக்கெரிக்க அளிக்கப்பட்ட பொன்னைக் குறிப்பிடுகிறது. மற்றொரு கல்வெட்டு காளி-நீலி என்பவளால் ஒரு விளக்கெரிக்க அளிக்கப்பட்ட நிலக்கொடையைப் பற்றி கூறுகிறது. செம்பியன்கிழான் நாட்டுக்கோன் என்பவனால் ஒரு நிலைவிளக்கும், வெள்ளியாலான பானை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. திருக்குறக்குத்துறை பெருமானடிகளுக்கு இறையிலி நீக்கி பல அளவுகளில் நிலங்கள் முதலாம் பராந்தகன் காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வூர் ஒரு பிரம்மதேயமாகும்.மேலும் பராந்தகன் காலத்தில் பொன்கழஞ்சுகள் விளக்கெரிக்க சபையாரிடத்தில் ஒப்படைக்கப்பட்டன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சீனிவாசநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top