சிவராமபேட்டை சிவலிங்கேஸ்வரர் திருக்கோயில், திருநெல்வேலி
முகவரி :
அருள்மிகு சிவலிங்கேஸ்வரர் திருக்கோயில்,
சிவராமபேட்டை, தென்காசி வட்டம்,
திருநெல்வேலி மாவட்டம் – 627804.
இறைவன்:
சிவலிங்கேஸ்வரர்
இறைவி:
உலகாம்பிகை அம்பாள்
அறிமுகம்:
மன்னன் பராக்கிரம பாண்டியன் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலை கட்டியபொழுது அருகே உள்ள சிவராமபேட்டை என்ற ஊரில் உண்மை விநாயகர் மற்றும் உலகாம்பிகை அம்பாள் சமேத சிவலிங்கேஸ்வரர் திருக்கோயிலையும் எழுப்பினார் என்பது வரலாறு. கோவிலுக்கு சற்று முன்பாக அரசும் வேம்பும் இணைந்த மரத்தடியில் நாகர் சிலைகளும், அதை ஒட்டி தனி சன்னதியில் உண்மை விநாயகரும் அருகே சிவலிங்கேஸ்வரர் திருக்கோயிலும் அமைந்துள்ளன.
புராண முக்கியத்துவம் :
இரு பிரகாரங்களைக் கொண்ட கோயில். மகாமண்டபத்தில் நந்தி பகவான் வீற்றுள்ளார். இவருக்கு வலது பக்கம் கிருஷ்ணரும் இடது பக்கம் முருகனும் தனிச்சன்னதி போன்ற அமைப்பில் தரிசனம் தருவது அபூர்வ அமைப்பு. அர்த்த மண்டபத்தில் ஒரு புறம் விநாயகர் சிலையும் அதன் பின்புற சுவரில் புடைப்புச் சிற்பமாக விநாயகரும், இன்னொருபுறம் சுவரில் புடைப்புச் சிற்பமாக கஜலட்சுமி காட்சி தருகின்றார். இதுவும் வித்தியாசமான அமைப்பே.
கருவறையில் ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவருக்கு இடது பக்கம் உள்ள அம்பிகை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி கருணையே வடிவாக காட்சி அளிக்கிறார். அம்பிகையின் எதிரே நந்தி உள்ளார். பிரகாரத்தில் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. உள்பிரகாரத்தில் சுவரில் புடைப்புச் சிற்பமாக ஆஞ்சநேயர் அமைந்துள்ளார். தெற்கு நோக்கிய சன்னதியில் காலபைரவர் வீற்றிருக்கிறார். வெளிப்பிரகாரத்தில் உள்ள தலவிருட்சமான வில்வ மரத்தின் கீழே நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அக்காலத்தில் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் நித்திய பூஜை நடைபெறும் வேளையில் இக்கோயிலிலும் பூஜைகள் நடைபெற்றதாக செவிவழி தகவல்கள் உள்ளன. சிற்ப வேலைப்பாடு அமைந்த கல்தூண்கள் கல்லால் அமைக்கப்பட்ட பிரகாரங்கள் கொண்ட இந்த பழமையான கோயில் காலப்போக்கில் கவனிப்பாரின்றி சிதிலமடைந்தது. ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி 2012 திருப் பணிகள் தொடங்கப்பட்டன. அனைத்து திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு 1.09.2013 அன்று செங்கோல் ஆதீனம் 102வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கல்யாணசுந்தர சத்திய ஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நல்லாசியுடன், தொண்டர்கள், பக்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிறப்பு அம்சங்கள்:
மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் முடிந்து மறுநாள் விடியும் பொழுது சூரிய ஒளிக்கதிர்கள் சிவலிங்கேஸ்வரர் திருமேனியில் கீழிருந்து மேலாக வந்து சென்று மறைவது சூரியனை நடத்தும் சிவ ஆராதனையாக காலம் காலமாக தொடர்கிறது.
ஒரு சமயம் ஊர் மக்களை கோவிலிலுள்ள கன்னி விநாயகருக்கு பதினொரு குடம் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்து மழை பெய்ய அனுக்கிரகம் செய்ய வேண்டும் என வேண்டி சென்றுள்ளனர். 2 தினத்தை கடந்த நிலையில் தேவையான மழை பெய்துள்ளது.
எத்தனையோ விநாயகர் உள்ளது அது என்ன உண்மை விநாயகர்? உடலும் நாம் வைக்கும் வேண்டுதல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவ்விநாயகர் அதை நமக்கு நிச்சயம் நிறைவேற்றித் தருவார் என்பது ஊர்மக்களின் நம்பிக்கை.
திருவிழாக்கள்:
கோவிலில் தினசரி ஒரு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. கட்டளைதாரர்கள் மூலமாக பிரதோஷ விழா கொண்டாடப்படுகிறது. அன்று உற்சவர் வெளிப் பிரகாரம் சுற்றி வருதல் விசேஷமாக நடைபெறும். மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை திருவாசக முற்றோதல் சிறப்பாக நடைபெறுகிறது. ஆனி உத்திரத்தன்று சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு வளைகாப்பு உற்சவம், ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிவராமபேட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
தென்காசி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி