சிவபுரிப்பட்டி சுயம்பிரகாசேசுவரர் திருக்கோயில், சிவகங்கை
முகவரி
அருள்மிகு சுயம்பிரகாசேசுவரர் திருக்கோயில், சிவபுரிப்பட்டி, சிவகங்கை மாவட்டம் – 630502.
இறைவன்
இறைவன்: சுயம்பிரகாசேசுவரர் இறைவி: தர்மசம்வர்த்தினி
அறிமுகம்
சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகே உள்ளது சிவபுரிப்பட்டி. பெயரிலேயே சிவநாமத்தைக் கொண்ட அற்புதமான ஊர். இங்கே, தர்மசம்வர்த்தினி அம்பிகையுடன் கோயில்கொண்டிருக்கிறார் அருள்மிகு சுயம்பிரகாசேசுவரர். இந்தத் திருக்கோயில், ஆயிரம் வருடங்கள் பழைமையானது என்றும் சோழன் முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது என்றும் கல்வெட்டு்கள் கூறுகின்றன. பண்டைய காலத்தில் முக்கிய துறைமுகங்களாகத் திகழ்ந்த தொண்டியையும் முசுறியையும் இணைக்கும் பாதையில் அமைந்த தலம் இது. அந்தக் காலத்தில் இவ்வழியே சென்ற வணிகர்களுக்கு இளைப்பாறும் இடமாக விளங்கியதாம் இந்த ஆலயத்தைச் சேர்ந்த பகுதி. கல்வெட்டுச் செய்திகளின்படி பண்டைய காலத்தில் இவ்வூர், நிருபசேகர சதுர்வேதி மங்கலம் என்றும் சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலம்’ என்றும் அழைக்கப் பட்டுள்ளது. இந்தக் கோயிலின் கட்டடக்கலை, சோழர் மற்றும் பாண்டிய பாணியுடன் திகழ்கிறது. சிவகங்கை சமஸ்தானத்தின் பொறுப்பில் உள்ள இந்தக் கோயில் உள்ளது.
புராண முக்கியத்துவம்
இந்தக் கோயில் கி.பி 1112-ம் ஆண்டு கட்டப்பட்டது எனும் செய்தி கருவறைத் தென்சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் இந்தக் கோயிலைப் பராமரித்து வந்துள்ளனர். இந்தத் தகவலை 17-ம் நூற்றாண்டு வரையிலான – வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த ஆலயத்தில் சிவபெருமான் தென்புறமும், அம்பாள் வடபுறமும் எழுந்தருளியிருக்கின்றனர். உருவில் பெரியதாக, சுமார் ஐந்தரை அடி உயரத்துடன் கூடிய நந்தியும் இங்கு அருள் பாலிக்கிறார். மூலவர், பெயருக்கேற்ப சுயம்பு மூர்த்தியாய் அருள்கிறார். தல விருட் சமாக வன்னி மரம் அமைந்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்
இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பு… சிவதுர்கை மற்றும் விஷ்ணு துர்கை இருவரின் சந்நிதியும் அமைந்துள்ளது. தோஷங்கள், தடைகள், பொருளாதாரச் சூழல் காரணமாக வெகுநாட்களாக திருமணம் தடைபட்டு வருந்தும் அன்பர்கள், இங்குள்ள சிவ துர்கையை மனமுருகி வழிபடு வது சிறப்பு. இதனால் தோஷங்கள் நீங்கி விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை. மேலும் இந்தக் கோயிலில், விநாயகர், காலபைரவர், சண்டிகேஸ்வரி, வடுகபைரவர், யோக நரசிம்மர், சரபேஸ்வரர், சப்த கன்னியர், நாகர் ஆகியோரும் தனித் தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள். சிவபெருமானுக்கு உகந்த புண்ணிய நாட்களில் இங்கு வந்து, தீபங்கள் ஏற்றிவைத்து, ஈசன் சுயம்பிரகாசரையும் தர்ம சம்வர்த்தினி அம்பாளையும் வழிபட்டால், திருமணத் தடை, கடன், சொத்துச் சிக்கல் முதலான சகல பிரச்னைகளும் தீரும் என்பது பக்தர் களின் அசைக்கமுடியாத நம்பிக்கை!கடன் தீரும் கல்யாணம் கைகூடும்!
காலம்
கி.பி 1112-ம் ஆண்டு கட்டப்பட்டது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிவபுரிப்பட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிவகங்கை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை