Saturday Nov 23, 2024

சிவசைலம் (அத்தீச்சுரம்) சிவசைலநாதர் திருக்கோயில், திருநேல்வேலி

முகவரி

சிவசைலம் (அத்தீச்சுரம்) சிவசைலநாதர் திருக்கோயில், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி அஞ்சல், அம்பாசமுத்திரம் வட்டம் திருநேல்வேலி மாவட்டம் – 627414

இறைவன்

இறைவன்: சிவசைலநாதர் இறைவி: பரமகல்யாணி

அறிமுகம்

சிவசைலம் கோயில் எனப் பொதுவாக அழைக்கப்படும் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்மன் கோயில் தமிழ்நாட்டிலுள்ள சிவசைலம் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியிலிருந்து சுமார் ஐந்து கிமீ தொலைவிலுள்ளது. சிற்பங்களும் கல்வெட்டுகளும் கொண்ட இது ஒரு பழமையான மிகப்பெரிய சிவன் கோயிலாகும். கடனாநதிக்கருகில் அமைந்துள்ள சிவசைலம் வெள்ளி மலை, மேற்கு தொடர்ச்சி மலை, முள்ளி மலைகளால் சூழப்பட்டுள்ளது.

புராண முக்கியத்துவம்

இப்பகுதியை ஆண்ட மன்னர் சுதர்சன பாண்டியன் தினமும் சுவாமி தரிசனத்திற்கு வருவார். ஒரு நாள் அவர் வர தாமதம் ஆனதால் பூஜாரி தன்னிடம் வைத்திருந்த மாலையை, கோயிலில் தங்கிய தேவதாசிப் பெண்ணிடம் கொடுத்தார். அவள் பக்தியுடன் அந்த மாலையை தலையில் சூடிக்கொண்டாள். அடுத்த சில நிமிடங்களில் மன்னர் வந்து விட்டார். பூஜாரிக்கு உதறல் எடுத்தது. மன்னர் வருவதற்கு முன்பாக அப்பெண்ணிடம் மாலையை வாங்கி வைத்துக் கொண்டார். மன்னர் வந்ததும் அவருக்கு மாலையை பவ்யமாக அணிவித்தார். அதில் ஒருதலைமுடி நீளமாக இருந்தது மன்னர் கண்களில் பட்டுவிட்டது. என்னையா.. முடியெல்லாம் இருக்கிறது என்ற மன்னர் பூஜாரியை ஏறிட்டு பார்த்தார். சுவாமிக்கு நீண்ட சடைகள் இருப்பதால் அந்த முடி இருக்கக் கூடும், என சிவன் மீது பாரத்தை போட்டு சொல்லிவைத்தார் பூஜாரி. மன்னருக்கு கோபம் வந்து விட்டது. இத்தனை நாள் நானும் வருகிறேன். ஒரு முறை கூட சிவனின் சடையை பார்த்ததில்லையே. எங்கே காட்டு, என்றார். மன்னர் சிவனின் சடையை பார்ப்பதற்காக கர்ப்ப கிரகத்தின் மற்ற மூன்று புற சுவர்களிலும் துளையிடப்பட்டன. நீண்ட நாளாக தனக்கு சேவை செய்யும் பயந்த சுபாவம் கொண்ட பூஜாரியை காப்பாற்றுவதற்காக சடையுடன் காட்சியளித்தார் சிவன். மன்னர் ஆச்சரியப்பட்டார். இதனால்தான் சிவன் சடையப்பர் என அழைக்கப்படுகிறார். இன்றைக்கும் அந்த துவாரங்கள் வழியாக சிவனின் சடைமுடியினை நாம் அனைவரும் தரிசிக்கலாம்.

நம்பிக்கைகள்

நினைத்த காரியம் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

நந்திகேஸ்வரர் கதை: இக்கோயிலில் சிவனை பார்த்தபடி கிழக்கு நோக்கி உள்ள நந்திக்கும் ஒருகதை உண்டு. அந்த நந்தியை பார்த்தால், எழுந்திருக்க போவது போல இருக்கும். தேவலோக தலைவனான இந்திரன் ஒருமுறை சிவனது கோபத்திற்கு ஆளானான். அதற்கு விமோசனமாக, நான் மேற்கு நோக்கி சுயம்புவாக இருக்கும் கோயிலில் நந்திகேஸ்வரரை பிரதிஷ்டை செய், என கூறினார். இந்திரனும் உலகின் முதல் சிற்பியான மயனை கொண்டு நந்தி சிலையை வடித்தான். சிற்ப சாஸ்திரங்களின்படி ஒருசிலை உயிரோட்டமாக எந்த குறையும் இல்லாமல் வடிக்கப்பட்டதால் அது உயிர்பெற்றது. எழுவதற்காக கால்களை துக்கியது. எனவே ஒரு உளியால் நந்தியின் முதுகில் கீறலை ஏற்படுத்தினார். அதன் பிறகே நந்தி அங்கே இருந்தது. மயன் அப்போது ஏற்படுத்திய கீறல் இன்றளவும் நுட்பமாக தெரிகிறது. பரமகல்யாணி: இங்கு அமர்ந்துள்ள சிவனுக்கு சொந்த ஊர் சிவசைலம். அவரது துணைவி பரமகல்யாணிக்கு சொந்த ஊர் அருகில் உள்ள கீழ ஆம்பூர். இவளது விக்ரகம் இங்குள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது. தற்போது அந்த கிணறு அக்ரஹார தெருவில் உள்ளது. எனவே மனித திருமணங்களில் பெண் வீட்டார் மாப்பிளை வீட்டாருக்கு சீதனங்கள் தருவது போல, இன்றளவும் திருக்கல்யாணத்தன்று தங்கள் ஊர் பெண்ணுக்கு மக்கள் சீதனம் கொடுக்கின்றனர். இந்த பகுதியில் வசித்த அக்னிஹோத்ரி தம்பதிக்கு குழந்தை, இல்லை. அவர்களது வேண்டுதலுக்கு செவிசாய்த்த உமையவள், ஒரு கிணறு வெட்டுங்கள். அதில் கல்யாணியாக நான் கிடைப்பேன். அதனை எடுத்து பிரதிஷ்டை செய்யுங்கள், என கூறினாள். பெண்கள் இழுக்கும் தேர்: சிவசைலத்தில் முக்கியமானது பங்குனித்திருவிழா. 11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் கடைசிநாள் தேரோட்டம் நடக்கிறது. அதில் அம்பாள் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். உரலில் மஞ்சள்: சிவன் சன்னதிக்கு அருகில் ஒரு உரலும் உலக்கையும் உள்ளன. திருமணம் ஆகாதவர்கள் அதில் போடப்பட்டிருக்கும் மஞ்சளை உலக்கையால் இடித்து அதில் கொஞ்சம் எடுத்து பூசிக்கொண்டால் திருமணம் நடக்கும் என்பதும் நம்பிக்கையாகும். இதற்காக மஞ்சள், உலக்கையுடன் கூடிய உரல் வைக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

பங்குனித்திருவிழா, சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம்

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அம்பாசமுத்திரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஆல்வார்குறிச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top